''அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி''...
“ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ?” - கண்ணதாசன்
எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களத்தில் இறங்கியுள்ள சகல கட்சிகளும் பல்வேறு அரசியல் யுக்திகளைப் பயனபடுத்தி எப்படியாவது அதிக பட்ச வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்று ஆலாப் பறக்கின்றன. பொதுவாகவே சுயேட்சை வேட்பாளர்கள் என்று கட்டுப்பணம் கட்டுபவர்கள் பலர் வழக்கம்போல வாக்கு எண்ணும் வேளைகளில் ஏதோ ஒரு கட்சியின் துணைக்குழுவாக செயற்படவே போட்டியிடுகிறார்கள். எனவே உண்மையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தவிர எந்தச் சுயேட்சைக் குழுவும் களத்தில் குதித்திருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது, அப்படி ஏதேனும் அபூர்வமாக ஒன்றிரெண்டு சுயேட்சைக் குழுக்கள் இருந்தாலும் , இறுதி நேரத்தில் அவையும் தமது ரிஷி மூலத்தை வெளிப்படுத்தி விடுவார்கள்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை , மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசில் இணைந்திருந்தும் தனித்துப் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட அரசின் எதிராளிக் கட்சிகளும் அதிகமதிகமாக தாங்களே உண்மையான முஸ்லிம்கள் என்றும் முஸ்லிம் மக்களின் ஆபத்பாந்தவர்கள் என்றும் வெளிக் காட்டுவதில் அதீத பிரயத்தனம் எடுத்து வருகிறார்கள். உலமாக் கட்சியாகட்டும் , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனப்படும் கட்சியாகட்டும் “இறைவனின் உதவியுடன் நிச்சயமாக நாம் எல்லோரும் அதில் வெற்றிபெறுவோம்” என்று பொதுவாகவே இறைவனைத் துனைக்கழைத்தே வெற்றி முரசம் கொட்டுகிறார்கள்
நக்குண்டார் நாவிழந்தார்
ஹாபீஸ் நசீர் அஹமத் பெருநாள் பரிசாக தனது சொந்த ஊரிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தினருக்கும் தலா 25 கிலோ அரிசி (ஒரு அரிசி மூடை) வழங்கியுள்ளார் . அது மாத்திரமல்ல , ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் அங்கத்தவர்களாகவுள்ள சகல மத்தியதர வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் பரிசாக கைலி, (சாரம்) மேற்ச சட்டை, தொப்பி , பனியன் (உட்சட்டை) போன்ற உடைகளைக் கொண்ட பொதியையும் , அத்துடன் ஐயாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கி தனக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளார். இந்த அன்பளிப்புகள் யாவும் நோன்புப் பெருநாளினை முன்னிட்டு வழங்கப்படும் நன்கொடையாக அல்லாமல் தனக்கு வாக்களிப்பதற்கு வழங்கப்படும் இலஞ்சமாகவே பொருட்களையும் , பணத்தினைதினையும் நசீர் ஹாபீஸ் வழங்கியுள்ளார். இவ்வாறு பாரியளவில் ஒரு ஊர் முழுவதற்கும் சுமார் 2500 ரூபாய் (தலா ) பெறுமதியான அரிசியையும், 5000 ரூபாய் ஆடைப் பொதிகளையும் வழங்க ஏறாவூரிலுள்ள சகல பள்ளிவாசல்களையும் முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்தியுள்ளது. அதிலும் அங்குள்ள ஒரு பள்ளிவாசல் அரசியல் காரணத்துக்காக அவ்வாறான நன்கொடைகளை வழங்க முடியாது என்று ஆட்சேபம் தெரிவித்த பொழுதும் அப்பள்ளிவாசல் பகுதியில் வாழும் , அப்பள்ளிவாசலின் அங்கத்தவர்கள் , இலவசமாக தங்களுக்கு கிடைக்கும் அந்த நன்கொடைகளை (இலஞ்சத்தை) தடுத்து நிறுத்த கூடாது என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினரை வற்புறுத்தி (முஸ்லிம் காங்கிரஸின் பாஷையில் போராடி ) வெற்றி பெற்றுள்ளார்கள். அதற்கெதிரான முறைப்பாடுகள் எழுந்தபோதும் அதனையும் "அல்லாஹ்வின் பெயரால்" முறியடித்துள்ளார்கள்.
முஸ்லிம் காங்கிரசில் அஸ்ரபின் மூலம் ஈரானுடன் செய்துகொண்ட வணிக ஒப்பந்தங்கள் வழியாகவும் சம்பாதித்த பணத்தின் ஒரு துளியை இப்படி முஸ்லிம் காங்கிரசின் அரசியலுக்காக சிந்துவது (செலவழிப்பது) நசீருக்கு பெரிய விசமில்லை என்றாலும். இதுவரை அவர் தான் பிறந்து வளந்த ஊர் மக்களுக்கு இப்படியான நன்கொடையை முன்னர் எப்போதும் வழங்கவில்லை , மாறாக இப்போது வாக்குகளுக்காக இலஞ்சமாக (அன்பளிப்பு) வழங்கியுள்ளார். அதற்காக முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தலங்களை அல்லாஹ்வின் பெயரை சொல்லி மத துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
ஆனாலும் மொத்தமாகவே தனது இருப்புக்கு சவாலாக கட்சிக்குள் தன்னையும் விட அதிக பணம் படைத்த , தமதூரைச் சேர்ந்த சேர்ந்த ஒரு இலட்சாதிபதி , கட்சியின் பிரதித் தலைவராக , தனது பதவி நிலையையும் தாண்டி இடம்பிடிப்பது தனது நீண்டகால இருத்தலுக்கு சவாலாகவே அமையும் என்பதால் தனது மடியில் நசீர் கைவத்துவிட்டார் என்று கவலைப்பட்டு பசீர் அரசியல் ஸ்டண்டுகள் (Stunt) அடிக்கத் தொடக்கி விட்டார். எப்படி இருப்பினும் இவ்வாறு நசீர் வழங்கிய அரிசியையும் , பணத்தையும் உடையையும் ஒரு சிலர் மட்டுமே பெற்றுக் கொள்ள மறுத்திருக்கிறார்கள் . அவர்களில் சிலர் செல்வந்தர்கள் மற்றும் சிலர் இந்த அரிசியில் உள்ள அரசியலைக் கேள்வியுற்றதும் , தமது நன்கொடைகளை , நசீரின் -முஸ்லிம் காங்கிரஸின் இலஞ்சத்தை - தந்தவர்களுக்கே (பள்ளிவாசல்களுக்கு ) திருப்பி கொடுத்து விட்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் எப்படியும் தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்பதால் தனது அஸ்திரங்களை எல்லாமே பயன்படுத்துகிறது. சிங்கள பேரினவாத அடக்குமுறைகள் , தெற்கிலே நடைபெற்ற பள்ளிவாசல் மீதான மத அத்துமீறல்கள் அடாவடித்தனங்கள் உட்பட அரசு சார்பு கருணா பிள்ளையான் மீதான குற்றச்சாட்டுக்கள் என தீவிர சிங்கள தமிழ் விரோதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எப்படியும் அரசு தோற்க வேண்டும் என்ற நயவஞ்சகத்தனத்தை செய்யும் இவர்கள் தங்களை உண்மையான முஸ்லிம்கள் என்றே சொல்கின்றனர். ! ஒரு புறம் கூட்டுத் தேர்தல் அரச சுகபோகங்கள் என அனுபவித்துக் கொண்டு உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் இந்த போக்கிரித்தனமான அரசியல் முஸ்லிம் காங்கிரஸின் வழிமுறையாகவே இருந்து வந்திருக்கிறது. தெற்கிலே நடக்கும் அடாவடித்தனங்களை பற்றிக் கூறும் இவர்கள் மறந்தும் மட்டக்களப்பில் கள்ளியங்காட்டுப் பள்ளிவாயல் பிரம்ம குமாரி நிலையமாக ஆக்கிரமிக்கப் பட்டதையோ , பண்குடாவளி தர்கா இவ்வருட ஆரம்பத்தில் தரைமட்டமாக்கப் பட்டதையோ கண்டு கொள்ளவேயில்லை.
ஏழை மக்களின் அரசியல் பலவீனத்தை , முஸ்லிம் சமயக் கொண்டாட்டத்தை , அந்நாளின் சமயக் கிரிகைகளை தமது சொந்த அரசியலுக்காக பள்ளிவாசல்களை பயன்படுத்தி செய்கின்ற அரசியலுக்கு என்ன பெயர் சொல்வது. அல்லாஹ்வின் பெயரால் செய்கின்ற அரசியல் அல்லவா அது!. ஆனால் பாவம் ஏழை மக்கள் தங்களுக்கு சோறிட்டவனை , உடை தருபவனை ( அரசியல் காரனத்துக்காக செய்யப்பட்டாலும் ) மறக்க முடியாது . சோறு தந்தவனை மறக்கலாமா . அவர்களுக்கு எதிராக கதைக்கலாமா என்று பலர் கூறுகிறார்கள் . அப்படியானால் நக்குண்டார் நாவிழந்தார் கதையாக ஏறாவூர் முஸ்லிம் பாமரர்கள் பலர் சிக்குண்டு போனார்கள்.
சந்திரமண்டலத்திலிருந்தாயினும் அரிசி கொண்டுவந்து தருவேன் என்று சொன்னதற்காக (வாக்குறுதிக்காக ) சிறிமா பண்டாரனாயக்காவிற்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய பெருமைக்குரியவர்கள் அல்லவா இலங்கை மக்கள். தேர்தல் காலங்களில் அரசியலுக்காக நன்கொடை வழங்குவது ஒன்றும் புதிய விடயமல்ல. மாக்கான் மாக்கார் மட்டக்களப்பு , கல்குடாத் தொகுதிகளில் தேர்தல்களில் போட்டியிட்ட காலங்களிலும் , பின்னர் பதியுதீன் மஹ்மூது தேர்தலில் போட்டியிட்ட காலத்திலும் (1977) ஏழை முஸ்லிம் மக்களிற்கு பணம் கொடுத்து வாக்கு கேட்பது என்பது , பணத்தைக் கொடுத்து பண்டமாற்றாக வாக்குகளைப் பெற முயல்வது என்பது நடை பெற்றிருக்கிறது. ஹிஸ்புல்லாவும் ஏறாவூர் மக்களுக்கு தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று குர்ஆனில் சத்தியம் வாங்கிக் கொண்டு 2000 ரூபாய் காசு கொடுத்து வாக்கு அபகரிப்பு செய்ததும் , அது போலவே தாவூத் பசீரும் வெகுமதிகளை ஏழை மக்களுக்கு வழங்கி வாக்கு சூறையாடுவதும் நடந்தே வந்திருக்கிறது.அலி சாகிர் மௌலானாவும் வருடா வருடம் இலண்டனிலுள்ள எஸ்.எல். ஆர்..ஏ (S.L.M.R.A-Sri Lanka Muslim Refugee Association) எனப்படும் நிறுவனம் இலங்கை முஸ்லிம் ஏதிலிகளுக்கு பல வருடங்களாக வழங்கிய நோன்புப் பெருநாள் கால குர்பானிய உதவிகளை, மற்றும் ஏனைய முஸ்லிம் தொண்டர் ஸ்தாபன உதவிகளை தனது சொந்த பணத்திலிருந்து கொடுப்பது போல் படம் போட்டு முன்னைய தேர்தல் காலங்களில் வழங்கி வந்ததும் அதன் மூலம் ஏழைப் பங்காளனாக திகழ்ந்ததும் , நடைபெற்றே வந்திருக்கிறது. மௌலானாவின் பாரிய குர்பான் சடங்குகளும் ஏறாவூரின் வருடாந்த நிகழ்வாகவே திகழ்ந்தது. "ஊராவூட்டு கோழியை அறுத்து உம்மா பேரிலே கத்தம் ஓதுறது " என்று பிறரின் பொருளை எடுத்து தனது சொந்த காரியத்துக்கு /சடங்குக்கு செலவிடுவது / பயன்படுத்துவது என்ற பொருளில் முஸ்லிம்களுக்குள் பேசப்படும் பேச்சு வழக்கில் சொன்னாலும் பொருத்தமே. ( கத்தம் என்பது இறந்தவருக்காக சமயமாக்கப்பட்ட சடங்கு நிகழ்ச்சியையொட்டி வழங்கப்படும் விருந்து -இது உண்மையான இஸ்லாமிய நடைமுறையில் இல்லாத நிகழ்சி என்பதும் குறிப்பிடத்தக்கது)
சகல முஸ்லிம் கட்சிகளும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லியே தங்களையும் முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் முஸ்லிம் காங்கிரஸின் "போராளிகள்" ஏதோ தாங்கள் மட்டுமே முஸ்லிம்கள் என்பது போலவும் ஏனைய முஸ்லிம் கட்சிகளோ அல்லது அரசுடன் சேர்ந்திருக்கின்ற முஸ்லிம்களோ முஸ்லிம் அல்லாதவர் அல்லது தங்களைப் போல உண்மையான முஸ்லிம்கள் அல்ல என்பது போலவும் அல்லாஹ்வின் பெயரை சொல்லி அரசியல் செய்வதும் அமர்க்களமாக இன்னொருபுறம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எனப்படும் பிரதான சுயேட்சைக் குழுவும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி , அல்லது மத நம்பிக்கையின்பாற்பட்ட கோட்பாடுகளைச் சொல்லி , தமது அரசியலையும் முஸ்லிம் காங்கிரசுக்கு சமமான தரத்தில் அல்லது , அதனையும் விட தாங்களே உண்மையான முஸ்லிம்கள் என்ற கோதாவில் களத்தில் ,இறங்கியுள்ளது. இக்கட்சியும் (குழுவும்) மத்திய கிழக்கில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த கட்டாரில் பனி புரியும் தமது ஆதரவாளர்கள் மூலம் திரட்டும் நிதிகளை , தங்களின் கட்சி பணிகளுக்கு செலவிடுகிறது , மக்களுக்கு வழங்கும் நன்கொடைகளை அல்லாஹ்வின் பெயரால் செலவிட்டு தனது கட்சியின் செல்வாக்கினை வளர்த்து வருகிறது என்று சொல்லப்படுகிறது.
நல்லாட்சிக்கான முஸ்லிம் இயக்கமும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் பற்றி கேவலமாக கனடாவில் கருத்துரைத்த , அமெரிக்க முகவரான , ஏகாதிபத்தியங்களின் கைப்பொம்மையான பொன்சேககாவை சந்தித்து அவருக்கு ஆதரவு வழங்கியது. அவரது வெற்றிக்காக பாடுபட்டது. எனைய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட தங்களைச் சந்திக்க , பேச்சுவார்த்தை நடத்த , தமிழர்களின் பிற்போக்குவாத இனவாத அரசியலின் "தலைமகன்" ( முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய பட்டம் "தமிழர்களின் தலைமகன்") சம்பந்தனைச் தாங்களே சந்தித்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களின் வெற்றிக்கு ஆசி வழங்கியது . ஏனைய தமிழர் கட்சிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் தார்மீக கண்ணோட்டத்தில் புறக்கணித்துள்ளதா என்று வினா எழுகிறது. இதனையே முஸ்லிம் காங்கிரசும் செய்து வருகிறது. தங்களுக்கு சமதையான ஜனநாயகக் கட்சியாக தமிழர் தேசியக் கூட்டமைப்பை கருதுகின்ற ஒரு அரசியல் நிலைப்பாட்டையே முஸ்லிம் காங்கிரசும் எடுத்து வருகிறது. ஆனால் தமிழர் தேசியக் கூட்டமைப்பு என்பது ஆயுதம் தாங்கி முஸ்லிம்களுக் கெதிராக அடாவடித்தனம் புரிந்த இயக்கங்களின்/கட்சிகளின் கதம்பம் என்பதயும் , பயங்கரவாத புலிகளினைப் போஷித்து வளர்த்த அவர்களை மானசீக குருவாகக் கொண்ட ஏகலைவர்களையும் கொண்ட கூட்டம் என்பதையும் மறந்து விட்டு தமிழ் இனவாத சேற்றில் தங்களையும் சேறு படுத்திக் கொள்கிறார்கள். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அண்மையில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரையும் சந்தித்ததாக ஒரு செய்தி காற்று வாக்கில் காதில் விழுந்தது.
இப்தார் நிகழ்ச்சிக்கே ஒபாமா வெள்ளை மாளிகைக்கு ராஜீய பிரதானிகளையும் அமெரிக்கா தேசிய முஸ்லிம் பிரமுகர்களையும் அழைத்த பொழுது அமெரிக்கா முஸ்லிம் மக்களில் பலர் அவ்வழைப்பினை நிராகரிக்க கோரி அழைக்கப்பட்டவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஒரு முஸ்லிம் இயக்கம் அல்லாஹ்வின் பெயரால் அப்படி என்ன அமெரிக்க தூதுவருடன் பேச வேண்டி இருந்தது. ( அந்த செய்தியில் உண்மை இருந்திருந்தால்! ) , அவர்களுக்கும் உள்ளூர் முஸ்லிம் அரசியலுக்கு என்ன சம்பந்தம் வேண்டியிருக்கிறது என்ற கேள்வியும் நியாயமாகவே எழுகிறது.
முஸ்லிம் காங்கிரஸின் அரச உறவுக்கெதிராக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கதிற்காதரவாக முன்னெடுக்கப்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரச்சாரங்கள் என்பன எல்லாமே எப்படி அமையப் போகின்றன என்பதை "அல்லாஹ் கிழக்கு முஸ்லிம்களுக்கு (கிழக்கு மாகான சபைத் தேர்தலை ) ஏற்படுத்தித் தந்திருக்கின்றான். அதனை நாம் அலட்சியப்படுத்தி விட்டு பின்னா; கைசேதப்படும் சமூகமாக இருந்து விடக்கூடாது." என்ற அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி விடும் கோரிக்கை நல்லாட்சி இயக்கத்தின் ஒன்றிரண்டு அங்கத்தவர்களின் தெரிவுடன் ( அவர்களே எதிர்பார்க்கும் ) முஸ்லிம் சமூகத்தை தூக்கி நிறுத்தும் என முஸ்லிம் சமூகம் நம்புகிறதா என்பதையும் இந்த கிழக்கு மாகான சபைத் தேர்தல் சொல்ல போகிறது. !
மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையிலான உலமாக் கட்சி என்று ஒன்றும் அவ்வப்போது தேர்தல் காலங்களில் , தேசிய வினாக்களை எழுப்பும் சந்தர்ப்பங்களில் தலை காட்டுவதுண்டு , அக்கட்சியும் ஒரு பொழுது மஹிந்த ஆட்சி சிறந்தது என்றும் , மறு பொழுது ரணில் குர் ஆணுக்கு மாற்றமாக எதுவும் கூறவில்லை என்றும் தனது மத ஞானத்தை வைத்து வாதாடுவதும் என அரசியல் செய்து வருகிறது , மொத்தத்தில் , அக்கட்சியைப் பொறுத்தவரை இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பேரினவாத நிரலிலிருந்த விடுவித்து , அக்கட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறது. இலங்கையில் சர்வதேச ஊடகங்கள் மூலம் நெறிப்படுத்தப்படும் அரசியல் நிரலில் , கதார் நாட்டு ஆட்சியாளர்களின் சர்வதேச ஊடகமான அல்- ஜசீராவின் நிகழ்ச்சி நிரலில் முபாறக் மௌலவி சிக்கியுள்ளார். உலகம் முழுவதும் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஆவணப்படம் காட்டி , சொந்த கத்தார் நாட்டில் அரசியல் கைதிகளை பற்றிய செய்திகளை மறைத்தும் , பஹ்ரைன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான மன்னர் குடும்ப எதோச்சதிகாரங்களை தணிக்கை செய்தும் அல்-ஜசீரா தொலைக்காட்சி சேவை கத்தார் நாட்டின் மேற்குலக அரசியல் நிகழ்ச்சி நிரலையும் மேவியே அண்மைக்காலமாக செயற்பட்டு வருகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. அல் ஜசீரா தமிழ் மொழி மூல இணையச் செவையோன்றினை இலங்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டு செயற்படுத்த அரபு மொழி பாண்டித்தியம் கொண்ட முபாரக் மாவ்வ்லவி மூலம் உலக ஊடகம் முஸ்லிம்களுக்குள் தனது நுழைவை செய்கிறது எது எப்படி இருப்பினும் அல்லாஹ்வின் பெயரால் முபாரக் மௌலவியும் அரசியல் செய்கிறார்.
எப்படியோ , அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி தேர்தல் முடிவுகளை கொண்டாடும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது
ALLAHVIN PEYARAI SOLLIYE MUSLIMKALIN KALUTHTHAI ARUKKIRAARKAL.
ReplyDeleteALLAH WILL PUNISH CHEATERS.
நீங்கள் எழுதிய அத்தனையும் உண்மை. சகோதரர் பஷீருக்கு நன்றிகள்.
ReplyDeleteஎஸ். எம்.எம். பசீர் ! அவரின் விமர்சனங்களைத் தூக்கி ஒரு குபோபைத் தொட்டியில் வீசுங்கள். வைக்கோல் போர் நாய் போல் அவர். தான் உண்பதும் இல்லை உண்ண விடுவதுமில்லை. செலவழிக்காமல் தேர்தல் கேட்டு கேட்டே இவர் ஏறாவூரில் ஒண்டக்கூட இடமில்லாமல் இருக்கின்றார்.
ReplyDeleteஆனால் நசீர் ஹாபிஸ் இந்தத் தேர்தலில் தப்பித் தவறித் தோற்றால், இதே விமர்சகர்கள் சொல்வார்கள் "பணம் இருந்தும் என்ன பயன் இவன் நசீர் ஹாபிஸ் செலவழிக்க வில்லையே" கஞ்சப் பயல் என்பார்கள்.
"ஏறினால் எருதுவுக்குக் கோபம் இறங்கினால் முடவனுக்குக் கோபம்" நசீர் ஹாபிஸ் என்ன செய்வான். இப்போதாவது மக்களுக்கு 25 கிலோ அரிசியும் பணமும் கிடைக்குதே என்று ஆறுதல் அடையுங்கள். மற்ற வேட்பாளர்கள் போல் "போத்தலும் கேத்தலும் " கொடுக்கவில்லையே?
the fact is, until the Islamic Leadership and Kilafath Emerge, politicians keeps cheating by the name of Allah and Islam.
ReplyDeleteAbdul razak காக்கா, ஒங்களுக்கு அப்புடி யென்ன கோவம்?
ReplyDeleteஒங்களுக்கு ரெண்டு மூட அரிசியும் ரெண்டு சாரமும் கெடச்சுதோ?
Dear Basheer, Thank you very much for your article. All should read this to honestly know the ground reality of Muslim politics in Sri Lanka. These politicians are bribing the voters in the name of "ifthar" and "sadhaka". These people should be rejected by people and punished by almighty Allah.
ReplyDeleteநடக்கும் உண்மையை எழுதவும் திறமையும் தைறியமும் தெளிவும் வேண்டும் அது சகோதரர் பஷீரிடம் நிறையவே இருக்கிறது
ReplyDelete