முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் வெற்றியை அபகரிக்க சதி - எச்சரிக்கிறார் ஹக்கீம்
சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் சம்பந்தமாக ௭ழுந்துள்ள சவால்கள் சர்வதேச ரீதியாகக் கூர்மையாகப் பார்க்கப்படுகின்றன. பிராந்திய வல்லரசுகளும் இந்த விவகாரத்தை மிக அவதானத்துடன் நோக்குகின்றன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
மூதூர் பொது மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
நாங்கள் தேர்தல் சம்பந்தமாக எடுத்துள்ள முடிவினால் அரசாங்கம் தடுமாறிப் போயிருக்கின்றது. அதன் வெளிப்பாடாக இந்தக் கட்சியின் வெற்றியைத் தடுப்பதற்கான முயற்சிகள் பல்வேறு கோணங்களிலிருந்து முடுக்கிவிடப்பட்டுள்ளன. போதாக்குறைக்கு அரச மேல் மட்டமே கிழக்கிற்கு வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. முக்கியமான அமைச்சர்கள் இங்கு முகாமிட்டு காரியங்களில் ஈடுபடுவதற்கும் திட்டமிட்டிருக்கின்றார்கள்.
சமூகத்தின் அரசியல் விடிவையும், அடுத்த தலைமுறையின் தலைவிதியையும் தீர்மானிக்கின்ற தேர்தலாக இதனை நுணுக்கமாகப் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.
மிகப் பெரிய தியாகங்களைச் செய்த மூதூரில் நான் கட்சியைப் பற்றி அதிகமாகப் பேச வேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட, சூழ இருக்கின்ற சூழ்ச்சிகளை முறியடிப்பதற்காகப் பொறுப்புணர்ச்சியுடன் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலங்களை விடவும் கூடுதலான சவால்களை எதிர்நோக்கியுள்ளது.
ஏற்கனவே கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சில சலசலப்புகள், எங்களுக்குள் முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியபோது, மிகத் தூரநோக்கோடு அதைக் கவனமாக அணுகி, கட்சிக்குள் முரண்பாடுகள் வராமல், நல்லதோர் இணக்கப்பாட்டுடன் கட்சியின் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான வழிவகைகளைக் கையாண்டு வருகின்றோம்.
இக்கட்சியின் தேர்தல் வெற்றியின் பிறகு அதனைக் கபடத்தனமாக அபகரிப்பதற்கான ஒரு முயற்சியைப் பற்றியும், அதற்கான காப்பீடுகள் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் இந்த முயற்சியின் அடிப்படை நோக்கம், இந்த தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இம்மாகாணத்தில் இதுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொம்மை ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதாகும். நடக்கும் அநியாயங்களைப் பற்றி எங்களுக்குச் சார்பாக பேசக்கூடிய ஒரு பின்புலத்தை இந்த மாகாண சபையில் ஏற்படுத்த வேண்டும்.
மாகாண சபைகளில் எங்களுக்கு வழங்கப்பட்டிருந்த மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரங்களை, அரசாங்க தரப்பினரால் ஓரங்கட்டப்பட்டிருந்த நிலையிலும் அடுத்த மாகாண சபையில் முறியடிக்கும் முயற்சியில் நாங்கள் இறங்க வேண்டியிருக்கின்றது. அதற்கென, அரசில் நாங்கள் இழந்திருக்கும் பேரம் பேசும் சக்தியை மாகாண அரசியல் கூட்டிக் கொள்வதற்கும் அதனூடாக அரசில் குறைந்து செல்லும் பேரம் பேசும் சக்தியை நிமிர்த்துகின்ற ஒரு சந்தர்ப்பமாக இதனை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு இன்றேல், எங்களுக்குள்ள மாற்று வழிகளைப் பற்றி சிந்திக்க அவசியமும் உள்ளது. இது எவ்வளவு தூரம் போயிருக்கின்றது என்றால் மிகச் சூசகமாக, லாவகமாக எப்படியாவது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அமைச்சுப் பதவியைப் பணயம் வைக்கின்ற ஒரு தேர்தலாக இது மாறியிருக்கின்றது. அதற்காக நான் பயப்படவில்லை. தயங்கவும் இல்லை.
மிகத் தெளிவாக நடக்கின்ற விஷயங்களைப் பேசி வருகின்றோம். இன்று இந்த மண்ணில் எவ்விதமான அட்டகாசங்கள் நடைபெற்று வருகின்றன? எவ்விதமான அத்துமீறல்கள் நடக்கின்றன என்பது கண்கூடாகத் தெரியும் விஷயங்களாகும். யாப்பில் உள்ள சட்டபூர்வமான காணி, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் இந்த மண் அனுபவிப்பதற்கான பின்புலத்தை மாகாண சபைகளின் ஊடாக நாம் பெற்றுக் கொள்வதற்கு எங்களைத் தயார்படுத்த வேண்டும்.
சூழவுள்ள எங்களது காணிகளை அபகரிப்பதற்கான திட்டங்கள் மிக நேர்த்தியாக அமுல்படுத்தப்படும் காலக்கட்டத்தில்தான் விழித்துக் கொண்டு அதற்கான எதிர்ப்புகளை காட்டமாகக் காட்டுவதற்கு ஒரு பின்புலத்தை எங்களுக்கு மத்தியில் உருவாக்குவதற்கான அவசியம் இருக்கின்றது.
எந்த யாப்பின் மீது அமைச்சர்களும் அதிகாரிகளும் சத்தியப் பிரமாணம் செய்து எந்த யாப்பைப் பாதுகாப்போம் என்கின்றார்களோ அந்த யாப்பிலுள்ள அதிகாரங்களை இந்தச் சபைக்குத் தர வேண்டும் என்ற எந்த விட்டுக் கொடுப்புமற்ற போட்டியில் முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபடவிருக்கின்றது. இந்த யாப்பில் இம் மாகாணத்திற்கு தரப்பட்டுள்ள அதிகாரங்களை இந்த சமூகமும், அடுத்த சமூகமும் அனுபவிப்பதற்கான ஓர் அவசியத்தை நாம் எடுத்துக்காட்ட வேண்டியிருக்கின்றது.
ஏற்கனவே பலவந்தப்படுத்தி, மாகாண சபையை முன்கூட்டிக் கலைத்த போதிலும்கூட, அதுவும் பதில் கூறத்தக்க விடயம்தான் என்பதை நாம் முன்கூட்டியே கூறியிருந்தோம். மாகாண சபை கலைக்கப்படுவதற்கு எதிராக அதே சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தும், ஓரிரு வாரங்களில் அது வாபஸ் பெறப்பட்டு, மாகாண சபை கலைக்கப்பட்ட விவகாரம் மிகவும் பரிதாபத்திற்குரியது. அதைத்தான் நாம் பொம்மை ஆட்சி என்கின்றோம்.
அதைவிட மோசமாக ஒரு சர்வாதிகார ஆட்சி, ஆளுநர் மூலமாக இந்த மண்ணில் நடந்து கொண்டிருப்பதை நாம் கேள்விக்குட்படுத்துகின்றோம். மேல் மாகாணத்தில் இருக்கும் ஆளுநரை கிழக்கு மாகாண ஆளுநரோடு எந்தவிதத்திலும் ஒப்பிடவே முடியாது. தமக்குள்ள அதிகாரங்களைக் கூட தாரை வார்க்கக் கூடியவராகவே அவர் காணப்படுகின்றார். ஆனால், கிழக்கில் ஆளுநரின் அதிகாரம் தலைகீழாக மாறியுள்ளது.
பாரம்பரியமாக இந்த மண்ணில் பெரும்பான்மைச் சமூகத்தின் இராணுவ மற்றும் படையதிகாரிகளைத்தான் ஆளுநராகவும், அரச அதிபராகவும் நியமிக்கும் புதிய பாரம்பரியம் மிகப் பெரும் கண்டனத்திற்கு உரியதாக இருக்கின்றது. அந்தப் புதிய பாரம்பரியத்தை மாற்ற வேண்டிய போராட்டத்தை இந்தத் தேர்தலோடு ஆரம்பித்து அதன் பின்னரும் தொடர வேண்டும்.
இவற்றை விட்டுக் கொடுப்பதன் மூலம் இவற்றை கண்டும் காணாமலும் இருப்பதன் மூலம் இவற்றைக் கேள்விக்குட்படுத்தாமல் இருப்பதன் மூலம் இந்த சமூகத்தின் விடிவை தொடர்ந்தும் பாதிக்கும் விதத்தில் அடங்கிப் போய் பேசா மடந்தைகளாக இருக்கும் காலம் மலையேறிவிட்டது.
இவற்றைப் பற்றித் தீவிரமாகச் சிந்திப்பதற்கும், அடுத்த கட்ட அரசியலில் எங்களுக்கு வரும் சவால்கள் எவையாக இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் இந்த அரசாங்கத்தோடு சேர்ந்த நாள் தொட்டு எங்களுக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருந்தன. எங்களது போராளிகள் கூட முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய நிலையிலும் நாம் மிகவும் பக்குவமாக இந்த விஷயங்களைக் கையாள வேண்டும் என்பதற்காகப் பொறுமை காத்தோம்.
இன்றுள்ள சூழ்நிலையில் இந்த சமூகத்தின் அரசியல் செல்வாக்கு இத்தேர்தலில் மிகத் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் பயந்து, ஒதுங்கி, ஓடி ஒழிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. மிகத் தெளிவாக இந்த விஷயங்களைப் பேச வேண்டும். அரச மேலிடங்களைக் கேள்விக்குட்படுத்த வேண்டும்.
ஏன் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கின்றன? இந்த நடவடிக்கைகளை ஏன் இந்த கிழக்கு மண்ணுக்கு மட்டும் திணிக்கின்றார்கள் என்பதை நாம் கேட்டாக வேண்டும்.
இவ்வாறாகப் பேசும் பொது இனவாதமாகப் பார்க்கப்படுகின்றது. இனவாதம் பேசுவதாக காதுகளுக்குள் அங்கு போய் ஊதி வைக்கப்படுகின்றது. அதைப் பற்றி நான் அலட்டிக் கொள்ளவில்லை. நிறைய தவறாக எங்களை எடை போட்டிருக்கின்றனர் என நான் நினைக்கின்றேன்.
நாங்கள் காட்டமாக இவற்றைச் சொல்லிவரும் போது சில சக்திகள் மேதாவித் தனமாக முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்தும் பாங்கில் பிரசாரங்களை அவிழ்த்துவிட்டு, இக்கட்சிக்கு கிடைக்கவுள்ள வெற்றியை தட்டிப் பறிக்கின்ற முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கைப் பலவீனப்படுத்த முற்படுவதால் அவர்களுக்கு வெற்றி கிட்டப் போவதில்லை. இந்த முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தின் செல்வாக்கை சரியச் செய்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் முயற்சியில் அவர்களுக்கு எந்த இலாபமும் கிட்டப் போவதில்லை.
என்னைப் பொறுத்தமட்டில் சிறுபான்மைச் சமூகங்களின் அரசியல் சம்பந்தமாக எழுந்திருக்கும் சவால் சர்வதேச ரீதியாக இன்று கூர்மையாகப் பார்க்கப்படுகின்றது. பிராந்திய ரீதியான வல்லரசுகளும் இந்த விஷயத்தை அவதானமாகப் பார்க்கின்றன. இந்த சமூகத்தின் அரசியல் இயக்கமான முஸ்லிம் காங்கிரஸ் எந்தச் சந்தர்ப்பத்திலும் நாட்டைக் காட்டிக் கொடுக்காத ஒரு சக்தியாக இருந்து வருகின்றது.
அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்து கொண்டு எங்களால் இயலுமானவற்றை அரசாங்கத்திற்கு செய்து கொடுத்துள்ளோம். ஆனால், எங்களது பிரசார யுக்திகளைப் பொறுத்தமட்டில் அரசாங்கத்திற்கு அதிருப்தி இருக்கலாம். ஆனால், நாங்கள் உண்மைகளைப் பேசியாக வேண்டும்.
இந்தத் தேர்தலின் பிறகு இந்த சமூகத்தின் அந்தஸ்தை நிமிர்த்துவதற்கு நான் எம்மாலானவற்றைச் செய்ய வேண்டும். அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக மறைந்திருந்து பேசுவதற்கு எங்களுக்கு யாப்பு ரீதியாக கிடைத்துள்ள அதிகாரங்களை மறைமுகமாகப் பறிப்பதை தடுப்பதற்கான முயற்சிகளை எடுப்பதற்கான ஆணையை இந்தத் தேர்தலின் ஊடாக எங்களுக்குத் தாருங்கள் என்றார்.
Post a Comment