Header Ads



தப்பித்தலுக்கான யுத்தம்..!

 
தம்பி
 
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் காலங்களின் போது – மு.காங்கிரசுக்குள் ஏதோவொரு ஆச்சரியம் நடந்தே வருகிறது. கடந்த தேர்தலில் மு.கா.வின் தலைவர், செயலாளர், தவிசாளர் என்று - மூவரும் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை திடுதிப்பென ராஜிநாமாச் செய்து விட்டு, கிழக்குத் தேர்தலில் குதித்து – மக்களை ஆச்சரியப்படுத்தினார்கள். இந்தத் தேர்தலில் - மு.கா. தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தனது பிரதியமைச்சர் பதவியினைத் துறந்து – ஏகத்துக்கு எல்லோரையும் ஆச்சரியத்தின் எல்லையில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றார்.
 
ஆனால், மேற்சொன்ன இரண்டு ஆச்சரியங்களுக்குமான கதையும் பின்னணியும் வேறு வேறானவை. முதல் ஆச்சரியம் - மு.கா.வுக்கு உற்சாகம் கொடுத்தது. இப்போதின் ஆச்சரியம் கட்சிக்குள் கவலைகளை உருவாக்கியுள்ளது.
 
முஸ்லிம் காங்கிரசின் தலைமைப் பதவிக்கு அடுத்ததாகப் பார்க்கப்படுவது தவிசாளர் பதவியாகும். முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகர்களுள் ஒருவரான சேகு இஸ்ஸதீனுக்கென்றே இந்தப் பதவி கட்சிக்குள் உருவாக்கப்பட்டதாக ஒரு கதை இருக்கிறது. அஷ்ரப் எனும் நபருக்கு சமமாகவும், சமாந்தரமாகவும் நோக்கப்பட்ட சேகு இஸ்ஸதீனைக் கௌரவிப்பதற்காக  தலைவர் பதவிக்கு நிகரான பார்வையினைக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டதே மு.காங்கிரசின் தவிசாளர் பதவியாகும்.
 
அதனால், மு.கா.வின் தலைமைத்துவத்தோடு மிக நெருக்கமான உறவுகளைப் பேணுவதற்கும், தேவையேற்படும் போது தலைமைத்துவத்தோடு தைரியமாக முரண்பட்டுக் கொள்வதற்கும் அந்தக் கட்சியின் தவிசாளர்களால் முடிகிறது. இதற்கு மு.காங்கிரசின் வரலாறு சாட்சியாக இருக்கிறது.
 
மு.கா.வின் அப்போதைய தலைவர் அஷ்ரப் - தவிசாளர் சேகு இஸ்ஸதீன் ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு பற்றி நாம் நன்கு அறிவோம். அந்த இரண்டு 'தலை'களுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், கடைசியில் அந்த இருவரையும் இணையவே முடியாத துருவங்களாக மாற்றியிருந்தன.
 
உண்மையில், அஷ்ரப் - இஸ்ஸதீன் பிரச்சினையில், இஸ்ஸதீன் பக்கமே நியாயமிருந்தது. சரியாகச் சொன்னால், அஷ்ரப்பினால் இஸ்ஸதீன் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டார். மு.காங்கிரசின் கொள்கைக்கு மாற்றமாக அஷ்ரப் பேசியதைச் சுட்டிக் காட்டியதே சேகு இஸ்ஸதீன் செய்த 'குற்றமா'க இருந்தது. அந்தக் குற்றத்தைக் காரணமாக வைத்துத்தான், இஸ்ஸதீனை கட்சியிலிருந்து அஷ்ரப் வெளியேற்றினார். இன்னும் சரியாகச் சொன்னால், அந்தப் பிரச்சினையில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவர் அஷ்ரப்தான். ஆனால், தலைவர்களின் பிழைகளைத்தான் மு.கா. ஆதரவாளர்கள் கண்டு கொள்வதில்லையே!
 
அன்று, அஷ்ரப் - இஸ்ஸதீனில் ஆரம்பித்தது, இன்று ஹக்கீம் பசீரில் வந்து நிற்கிறது!
 
மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் இடையில் மிக நல்லதொரு உறவுநிலை இருந்து வந்தது. ஆனால், இப்போது - இல்லை! அவ்வப்போது இருவருக்குமிடையில் புகைந்து கொண்டு வந்த முரண்பாடு - இப்போது பற்றியெரியத் தொடங்கியுள்ளது.
 
மு.காங்கிரசுக்குள் தனக்கு நிகராக யாரும் 'தோற்றம'ளித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம். அதனால்தான், ஆளும் தரப்போடு மு.காங்கிரஸ் இணையும் சந்தர்ப்பங்களிலெலாம் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியினை ஹக்கீம் மட்டும் பெற்றெடுத்துக் கொண்டு, கட்சியிலுள்ள மற்றவர்களுக்கு அமைச்சரவை அந்தஷ்தற்ற அமைச்சுப் பதவிகளையும், பிரதியமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொடுக்கின்றார். உடைத்துச் சொன்னால், மு.கா.வுக்கு அரசாங்கமே இரண்டு, மூன்று அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைர்சர் பதவிகளைக் கொடுக்க முன்வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள ஹக்கீம் விரும்ப மாட்டார் என்பதுதான் கட்சிக்குள் இருக்கும் கதையாகும்.
 
இப்படித்தான், அமைச்சர் அதாஉல்லா – மு.காங்கிரசுக்குள் இருந்த காலமது! மு.காங்கிரஸ் அப்போதைய ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தது. அப்போது மு.கா.வுக்கு இரண்டு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவிகளைக் கொடுப்பதற்கு அப்போதைய பிரதமர் ரணில் விக்கரமசிங்க தயாராக இருந்தார். ஆனால், அவ்வாறான இரண்டு அமைச்சுப் பதவிகள் கிடைத்தால், ஒன்றை ஹக்கீம் எடுத்துக் கொண்டு, அடுத்ததை அதாஉல்லாவுக்குக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அதனால், கிடைக்கவிருந்த இரண்டு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவிகளை வேண்டாம் என்று கூறி விட்டு, ஒன்றை மட்டும் ஹக்கீம் பெற்றுக் கொண்டதாகவும், மு.காங்கிரசின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஷ்தற்ற அமைச்சுப் பதவிகளையும், பிரதியமைச்சுப் பதவிகளையும் ஹக்கீம் பெற்றுக் கொடுத்ததாகவும் மு.கா.வுக்குள் இருப்பவர்களே சொல்வார்கள்!
 
இந்த விடயம்தான் அதாஉல்லாவுக்கும் ஹக்கீமுக்கும் இடையில் உடைவு ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்கிற ஒரு பேச்சும் உண்டு!
 
சரி, இந்த முறையும் மஹிந்த அரசாங்கத்துடன் மு.கா. சேர்ந்து கொண்ட கதை பற்றி நீங்கள் அறிவீர்கள். முதலில், ஹக்கீமை விட்டு விட்டு, மு.கா.வின் தவிசாளர் உள்ளிட்ட 05 நாடாளுமன்ற உறுப்பினர்களை தங்களுடன் இணைத்துக் கொள்வதற்கே மஹிந்த அரசு திட்டமிட்டது. ஆனால், கட்சியை உடைத்துக் கொண்டு அவ்வாறு செல்வதற்கு மு.கா.வின் குறித்த 05 எம்.பி.களும் உடன்படவில்லை. தலைவர் ஹக்கீமுடன் சேர்ந்து மு.காங்கிரசை அரசாங்கத்தில் இணைப்பதற்கே குறித்த 05 நாடாளுமன்ற உறுப்பினர்களும் விரும்பினார்கள்.
 
இதனடிப்படையில், ஆட்சியாளர்களோடு மு.கா. தலைவர் ஹக்கீம் பேசினார். மஹிந்த அரசோடு மு.கா. இணைந்தது. அநேகமாக, இது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், தெரியாத கதையொன்றும் இருக்கிறது என்கிறார் மு.கா.வின் முக்கிய புள்ளியொருவர்!
 
அது என்ன கதை? அரசோடு மு.காங்கிரஸ் இணைந்தால் இரண்டு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுக்களை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் தயாராக இருந்திருக்கின்றார்கள். ஆனால், ஆட்சியாளர்களுடன் தலைவர் ஹக்கீம் பேசிய பிறகு – மு.கா.வுக்கு ஒரு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவியும், ஒரு பிரதியமைச்சுப் பதவியுமே கிடைத்திருக்கிறது. அதாகப்பட்டது, இரண்டு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவிகள் கிடைத்திருந்தால், அதில் ஒன்றை பஷீர் சேகுதாவூத்துக்கு வழங்க வேண்டிவரும் என்பதற்காகவே தலைவர் ஹக்கீம் தனக்காக ஒன்றை மட்டும் பெற்றுக் கொண்டார் என்று கதையினை விபரித்தார் மேற்சொன்ன முக்கிய புள்ளி.
 
ஆக, இந்தக் கதைப்படி பார்த்தால் - பஷீருக்கு ஹக்கீம் வெட்டிய இடத்திலிருந்துதான் இருவருக்கும் இடையிலான குளிர் யுத்தம் தொடங்கியிருக்க வேண்டும்!
 
இன்னுமொரு கதையும் இருக்கிறது. அந்தக் கதைக்கு முன்னர் மு.காங்கிரசின் கட்டமைப்புப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மு.காங்கிரசில் தீர்மானங்களை நிறைவேற்றும் சபையாக அக்கட்சிக்குள் இருக்கும் அதிஉயர் பீடம் விளங்குகின்றது. தலைவரைத் தெரிவு செய்வதிலிருந்து  – நபர் ஒருவரை கட்சிக்குள் இணைத்துக் கொள்வது வரையிலான அனைத்து விடயங்களையும் அதிஉயர் பீடமே தீர்மானிக்கும். குறித்த உயர்பீடத்தில் 23 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த 23 உறுப்பினர்களிலும் பெரும்பான்மையினரின் முடிவுக்கமையவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
 
ஆனால், அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவின் அடிப்படையில் மு.காங்கிரசின் அதிஉயர் பீட உறுப்பினர்களின் தொகையானது திடீரென 85 ஆக அதிகரிக்கப்பட்டது. தலைவர் ஹக்கீமுடைய விருப்பத்துக்கு அமைவாகவே அதிஉயர் பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாக  உயர்பீட உறுப்பினர் ஒருவரே சொல்கிறார்.
 
23 உறுப்பினர்களின் தொகை  ஏன், அதிரடியாக 85 ஆக மாற்றப்பட்டது என்பதை விசாரிக் தொடங்கினோம். ஏற்கனவேயிருந்த 23 பேரில் தவிசாளர் பஷீருக்கு ஆதரவானோர் அதிகமாக இருந்தனர். இந்த ஆதரவினைப் பயன்படுத்தி சிலவேளை தனக்கு எதிராக பஷீர் எதையாவது செய்து விடலாம் என்று தலைவர் அச்சப்பட்டிருக்கலாம். அதனால்தான், தலைவர் 23 இனை 85 ஆக்கினார். மட்டுமல்லாமல், 23 இல் பெரும்பான்மை என்பது 12 ஆகும். அப்படியென்றால், 12 பேர் ரகசியமாகக் கூடிப் பேசி – தலைவருக்கு எதிராக எதையாவது செய்யலாம். 12 என்பது சிறிய தொகை என்பதால் - விஷயம் வெளியே கசியாது. ஆனால், 85 இல் பெரும்பான்மை என்பது 43 ஆகும். 43 பேருக்குள் ஒரு ரகசியத்தைப் பேணுவது கஷ்டமானதொரு காரியமாகும். அப்படித்தான், தலைவருக்குத் தெரியாமல் உயர்பீடத்துக்குள் ஏதாவது நடந்தாலும், 43 பேரில் ஒரு கறுப்பாடு அல்லது விசுவாசி – தலைவரின் காதில் விடயத்தைப் போட்டு விடும். அதனால்தான், அதிஉயர் பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தலைவர் 85 ஆக மாற்றியிருக்க வேண்டும் என்று விளக்கினார் மேலே சொன்ன உயர்பீட உறுப்பினர்.
 
அப்படியென்றால், ஹக்கீம் மீது தவிசாளர் பஷீருக்குக் கடுப்பை ஏற்படுத்திய மற்றுமொரு நிகழ்வாக, இது - இருந்திருக்க வேண்டும்.
 
இன்னொருபுறம், மு.காங்கிரசுக்குள் ஹபீஸ் நசீரின் மீள் வருகையும், அவருக்கு கட்சியின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டமையும், ஹாபீஸ் நசீரை ஹக்கீம் ஏகத்துக்குத் தூக்கித் தலையில் வைத்துக் கொண்டு திரிவதும், ஹக்கீம் - பஷீர் முரண்பாட்டுக்கு மற்றுமொரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
 
முதலில் ஹாபீஸ் நசீர் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஹாபீஸ் நசீர் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரைச் சேர்ந்தவர். (மு.கா. தவிசாளர் பஷீரும் ஏறாவூர்க்காரர்தான்). மறைந்த தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் ஹாபீஸ் நசீர் மு.கா.வின் முக்கிய பதவியில் இருந்தவர். அஷ்ரப்பின் மரணத்தின் பிறகு - இவருக்கும் மு.கா.வுக்குமான தொடர்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், மு.காங்கிரசின் தலைமையகமான தாறுஸ்ஸலாமுக்கு ஹாபீஸ் நசீர்தான் சட்ட ரீதியான நிருவாகியாக இருந்தார். அஷ்ரப்பின் மரணத்தின் போது, மு.கா.வின் பெருமளவான நிதி ஹாபீஸ் நசீரிடம் இருந்ததாகவும் ஒரு கதையுண்டு. இப்போது ஹாபீஸ் நசீர் மிகப்பெரும் தொழிலதிபர்!
 
ஹாபீஸ் நசீரை மு.கா. தலைவர் ஹக்கீம் கட்சிக்குள் கொண்டு வந்ததில் தவிசாளர் பஷீருக்குப் பிடிப்பில்லை என்று கூறப்படுகிறது. பஷீரைத் தட்டி வைப்பதற்காகவே - ஹாபீஸ் நசீரை ஹக்கீம் கட்சிக்குள் கொண்டு வந்தார் என்றும் இன்னொரு புறம் கூறப்படுகிறது.
 
மு.கா. தலைவர் ஹக்கீம் பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்துவதில் கெட்டிக்காரர். மு.காங்கிரசில் ஒவ்வொரு பிரதேசத்திலும் இரண்டுக்கு மேற்பட்ட உள்ளுர் அரசியல் தலைவர்களை ஒரே காலத்தில் ஹக்கீம் வளர்த்துக் கொண்டே வருகின்றார். ஒவ்வொரு ஊரிலும் மு.காங்கிரசைச் சேர்ந்த இரண்டுக்கு மேற்பட்ட குட்டித் தலைவர்கள் இருப்பது ஹக்கீமுக்குப் பாதுகாப்பானது.
 
ஹாபீஸ் நசீரை ஹக்கீம் கட்சிக்குள் கொண்டு வந்த கையோடு, கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவும் வைத்துள்ளார். இது பஷீருக்கு இன்னும் கடுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதன் விளைவுதான் - அண்மைய நாட்களில் பஷீர் குறித்து நீங்கள் கண்டு வரும் காட்சிகளாகும்.
 
பஷீர் சேகுதாவூத்துக்கு ரஊப் ஹக்கீம் நிறையவே கடமைப்பட்டுள்ளார் என்று அவர்களுக்கு அருகில் இருப்பதவர்கள் கூறுவார்கள். ஹக்கீம் வெளிநாட்டில் இருந்த போது, அவரை தலைமைப் பதவியிலிருந்து கவிழ்த்து விடும் சதித் திட்டத்தினை அதாஉல்லா குழுவினர் மேற்கொண்டபோது, அதைத் தடுத்து நிறுத்தி, அந்தக் கண்டத்திலிருந்து ஹக்கீமைக் காப்பாற்றியவர் தவிசாளர் பஷீர்தான்! ஹக்கீமுடைய அந்தரங்க வாழ்க்கையை அவருடைய அரசியல் எதிராளிகள் சிலர் அரசியலாக்க முயன்ற போது, பஷீர் ஒரு கவசமாக நின்று ஹக்கீமைக் காப்பாற்றினார் என்பதையும் மு.கா.வுக்குள் உள்ள முக்கிய புள்ளிகள் அறிவார்கள்.
 
ஆனால், அதே ஹக்கீம் இப்போது தனது அடிமடியில் கைவைப்பது போல், ஹாபீஸ் நசீரைக் கொண்டு வந்து விட்டிருப்பது, பஷீருக்குக் கோபத்தினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனால்தான்,  'மக்கள் எனும் நீதிபதிகள் முன் - பஷீரின் வாக்கு மூலம்' என்ற பெயரில் பகிரங்கமாக சில உண்மைகளை அவிழ்த்து விட பஷீர் துணிந்தார்.
 
உண்மையில், உண்மைகளை கொட்டி விடுவதல்ல பஷீரின் நோக்கம். சொல்லக் கூடாததை பஷீர் சொல்லி விடுவாரோ எனப் பயந்து – அலறியடித்துக் கொண்டு மு.கா. தலைவர் ஹக்கீம் தனது காலடிக்கு வரவேண்டும் என்பதற்காகவே, ஏறாவூரில் 'மக்கள் எனும் நீதிபதிகள் முன் - பஷீரின் வாக்கு மூலம்' எனும் பொதுக் கூட்டத்தினை தவிசாளர் பஷீர் ஏற்பாடு செய்தார் என்பது விசயமறிந்த சிலரின் கருத்தாகும்.
 
ஆனால், பஷீர் எதிர்பார்த்தது போல் அவரிடம் ஹக்கீம் வரவில்லை. அதனால்,
'மக்கள் எனும் நீதிபதிகள் முன்' - பஷீர் தோன்றிப் பேசினார். சுமார் 04 மணி நேரம் நீடித்த அந்த உரையின் - ஒரு சில வார்த்தைகள்கள்தான் தவிசாளர் பஷீரை பிழையாக விளங்கவும், சிக்கலுக்குள்ளாகக்கவும் செய்தது!
 
வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் - அலிசாஹிர் மௌலானாவுக்கும் வாக்களியுங்கள்' என்று தனது உரையின் போது பஷீர் கூறியமைதான் அவரை கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. மு.காங்கிரசின் ஒரு பொறுப்புணர்வு மிக்க தவிசாளர் என்கிற வகையில் பஷீர் அந்த வார்த்தைகளை உதிர்த்திருக்கவே கூடாது என்பதே மு.கா. ஆதரவாளர்கள் பலரின் கருத்தாகும்!
 
ஒரு வகையில் பார்த்தால் பஷீர் சொன்னதில் ஒன்றும் தவறில்லைதான். அலிசாஹிர் மௌலானாவும் பஷீரும் ஏறாவூரைச் சேர்ந்தவர்கள். இருவருக்குள்ளும் நட்பு உள்ளது. அது தவிரவும், அலிசாஹிர் மௌலானாவை மு.கா.வுக்குள் கொண்டு வருவதற்கு பஷீர் பல்வேறு முயற்சிகளையும் அண்மைக் காலத்தில் மேற்கொண்டிருந்தார். அந்தவகையில், 'வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் ஒரு விருப்பு வாக்கினை அலிசாஹிருக்கும் வழங்குங்கள்' என்று பஷீர் கேட்டதில் தப்பெதுவும் காணமுடியாதுதான்.
 
மு.காங்கிரசுக்குள் எதையும் அறிவார்ந்த ரீதியில் அணுகுகின்றவர் தவிசாளர் பஷீர் சேகுதாவூத். அவரின் புத்திஜீவித்தனமான பேச்சுக்கு – மு.காங்கிரசுக்குள் ஒரு ரசிகர் வட்டமே உள்ளது. அந்தவகையில், மேற்சொன்ன விடயத்தையும் பஷீர் ஓர் அறிவார்ந்த கோணத்திலேயே பேசியிருக்கக் கூடும். ஆனால், மு.காங்கிரசை உணர்வுபூர்வமாக நேசிக்கும் அதன் ஆதரவாளர்களுக்கு பஷீரின் உரையானது கடுமையான கசப்பினை ஏற்படுத்தியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
 
ஆனால், இன்னொரு புறம் - அலிசாஹிர் மௌலானாவுக்கு பஷீர் ஏன் வாக்களிக்கச் சொன்னார் என்பதற்கு இப்படியும் ஒரு கதை உள்ளது. அதாவது, தனது அரசியலுக்குக் குழி தோண்டுவதற்காக மு.கா.வில் களமிறக்கப்பட்டிருக்கும் ஹாபீஸ் நசீரை பஷீர் தோற்கடிக்க வேண்டும். அவ்வாறு தோற்கடிப்பற்கான இலகுவான வழி - ஹாபீஸ் நசீருக்கு எதிர்த்தரப்பில் இருப்பவரை வெற்றி பெற வைப்பதுதான் என்று பஷீர் யோசித்திருக்கலாம். அதன் அடிப்படையில்தான் 'வெற்றிலைக்கு வாக்களிப்பவர்கள் அலிசாஹிர் மௌலானாவுக்கும் ஒரு விருப்பு வாக்கினை அளியுங்கள்' என்று பஷீர் கூறியிருப்பார் என்கின்றனர் வேறு சிலர்!
 
எப்படிப் பார்த்தாலும், பஷீர் 'அதை'ப் பேசாமல் விட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது. பஷீரின் அந்தப் பேச்சுக்கு அவரின் அரசியல் எதிராளிகள் பல்வேறு வியாக்கியானங்களைக் கொடுக்கத் துவங்கினர். வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு மு.கா.வின் தவிசாளரே கூறுகிறார் என்றார்கள். கடைசியில், அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவியொன்றினை தேர்தலுக்குப் பிறகு பஷீர் பெறப் போகிறார் என்றும் அதற்காகவே வெற்றிலைக்கு வாக்களிக்கச் சொல்கின்றார் என்றும் - பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின.
 
உண்மையில், பஷீர் எதையோ நினைத்துச் சொல்ல - கடைசியில் பூமரங் மாதிரி அவர் பயன்படுத்திய சொற்கள், திரும்பி வந்து அவரையே தாக்கத் துவங்கின. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பஷீர் - இறுதியாக, அவருடைய பிரதியமைச்சுப் பதவியினை ராஜிநாமாச் செய்வதாக அறிவித்தார்.
 
நமது அவதானிப்பின் படி, பஷீர் இந்த முடிவினை எடுப்பதற்குத் தாமதித்திருந்தால், அவர் ஆபத்துக்குள் சிக்கியிருப்பார். கடைசியில், கட்சிக்குள்ளேயே அவருக்குத் துரோக முத்திரை குத்தப்பட்டிருக்கும். அவரின் நியாயங்களைக் கேட்பதற்குக் கூட, அவரின் கட்சிக்குள் 'காது'கள் இல்லாமல் போயிருக்கும்.
 
பஷீரின் இந்த முடிவு  சமயோசிதமானது. 'கட்சியை விடவும் - எனக்கு இந்த அமைச்சுப் பதவியொன்றும் முக்கியமல்ல' என்று அவர் காட்டியிருக்கின்றார். அதேவேளை, அரசாங்கத்தின் பதவியில் உட்கார்ந்து கொண்டு, அவர்களின் வளங்களை அனுபவித்துக் கொண்டு அவர்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது அசௌகரியமாகும். அதனால், தனது பிரதியமைச்சுப் பதவியினை ராஜிநாமாச் செய்த பிறகு மனநிறைவோடு அரசை விமர்சனம் செய்ய முடியும் என்றும் அவர் ஊடகங்களுக்கு விடுத்திருந்த அறிக்கையில் கூறியிருக்கின்றார்.
 
பஷீர் சேகுதாவூத்தின் இந்த ராஜிநாமாவானது, மு.கா. தலைவரின் அமைச்சுப் பதவியினையும் துறக்க வேண்டியதொரு இக்கட்டுக்குள் மாட்டியிருக்கிறது. அப்படி ஹக்கீம் தனது அமைச்சுப் பொறுப்பைத் துறக்காது விட்டால், அவர் விமர்சிக்கப்படுவார். 'பஷீருக்கு பதவி ஆசை என்றார்கள். அந்த மனிதன் அமைச்சுப் பதவியைத் தூக்கி எடுந்து விட்டான். ஆனால், ஹக்கீம் இன்னும் அமைச்சுப் பதவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கிறாரே... அப்படியென்றால், உண்மையில் பதவி ஆசையுள்ளவர் மு.கா.வின் தவிசாளரா? தலைவரா?' என்று எதிர்க்கட்சிக்காரர்கள் கேட்பார்கள்.
 
சொல்வதற்கு விடைகளின்றி தடுமாறப் போகின்றனர் மு.கா. காரர்கள்!
·
 
 
 
 

6 comments:

  1. தம்பி நல்ல சோக்கா தப்பு தாளம் போட்ராரு. இந்தத் தம்பி அண்ணன் செகு தாவூதிட்கு கூட பொரந்த சொந்தத் தம்பியா? இல்லாட்டி வாடகத் தம்பியா?

    ReplyDelete
  2. Thanks for your valuable article. We came to know many hidden truths inside the SLMC. As long as Hakeem leads SLMC there will be only defeats to the party and its supporters. Hakeem never tolerates seeing other figures in the party emeging popularity over him.So Muslims in the east should teach a good lesson to him and protect SLMC from destruction.

    ReplyDelete
  3. ikram தம்பிக்கு ரவூப் ஹக்கீமோட யென்னமோ சொந்தக் கோவம் போல.
    ஒங்க கோவத்த இங்க காட்டாதீங்க புள்ள.
    ikram, நீக அவர தனியா சந்திச்சு பேசி தீர்த்துக்கோங்க மவன்.

    ReplyDelete
  4. As per Thambi, every thing is a story. He says in his article 'a story’, ‘another story' in all over the article. He better write a story book like ambuly maamaa not political analyses.

    ReplyDelete
  5. பசீர் சேகுதாவூதிற்கு ஆதரவாக, அவரது செயல்பாடுகளை நியாயம் கண்டு யாருமே கட்டுரை எழுதவில்லை என்ற குறையை "தம்பி"
    தீர்த்து வைத்திருக்கின்றார். கதை, கற்பனை, ஊகங்கள் என்று அதிகம் இருக்கும் போலும்.

    ReplyDelete
  6. On top of this article it says "this is a paid advertisement".

    ReplyDelete

Powered by Blogger.