சிரியா போராளிகளுக்கு அமெரிக்காவின் இரகசிய உதவி - ஒபாமா ஒப்புதல்
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருபவர்களுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலக கோரி கிளர்ச்சியாளர்கள் ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்தன. ஐ.நா.,பாதுகாப்பு சபையில் கொண்டு வந்த இந்த தீர்மானத்தை சீனாவும், ரஷ்யாவும் ஆதரிக்கவில்லை.
இதற்கிடையே கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகள் வழங்குவது தொடர்பான, ரகசிய ஆதரவு ஒப்பந்தத்தில் அதிபர் ஒபாமா கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்க வெளியுறவு அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதன் காரணமாகத்தான் சிரியாவில் சமீப காலமாக கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியுள்ளது. அலெப்போ நகரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் அரசு படைகளை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
துருக்கியின் அதனா நகரில் அமெரிக்க ராணுவ முகாம் உள்ளது. சிரியா எல்லையில் உள்ள இந்த பகுதியில் இருந்து தான் கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகளும், தகவல் தொடர்பு கருவிகளும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சவுதி அரேபியா மற்றும் கத்தார் நாட்டில் உள்ள செல்வந்தர்கள் மூலம் கிளர்ச்சியாளர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. சிரிய அரசு படைகளுடன் சண்டையிடுபவர்களுக்காக செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் நிவாரண பொருட்கள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசு படைகளிடம் கைப்பற்றப்பட்ட பீரங்கியை கொண்டு, மெனாக் நகரில் உள்ள விமானப்படை தளத்தை தகர்த்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment