முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்திகள்..!
நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் பித்ர்' வாழ்த்துச் செய்தி,
திருக் குர்ஆனும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் வலியுறுத்தும் சமத்துவம், சமாதான, சகவாழ்வு, சகிப்புத்தன்மை ஜனநாயக விழுமியங்கள் என்பவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பதற்கு 'ஈதுல் பித்ர்' ஈகைத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோமாக.
உள்நாட்டிலும், உலகளாவிய பல நாடுகளிலும் முஸ்லிம் உம்மத் சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கும் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் மீண்டும் ஒரு பெருநாளைச் சந்திக்கின்றோம். இலங்கையைப் பொறுத்தவரையிலும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு, சமய வழிபாட்டுச் சுதந்திரம் என்பன கேள்விக்குறியாகியுள்ள நிலையில் உச்சக்கட்ட சகிப்புத்தன்மையுடன் மிகவும் நிதானமாகவும், பொறுப்புணர்ச்சியுடனும் நடந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.
நமது நாட்டிற்கு எதிரான ஜெனீவாப் பிரேரணை விடயத்தில் அரபு, முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இந் நாட்டிற்கு ஆதரவாகக் திரட்டிக் கொடுத்ததன் ஊடாக முஸ்லிம்களின் தாய்நாட்டுப்பற்றை சிறப்பாக வெளிப்படுத்தி உலகறியச் செய்திருந்தோம். இந் நாட்டு முஸ்லிம் சமூகம் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட தேசிய இனம் என்ற காரணத்தினால், நமது வாக்குப் பலத்தின் வலிமையினால் அதனை நிலைநிறுத்த வேண்டிய இன்றியமையாத தேவை முன்னரை விட அதிகமாக இப்பொழுது உணரப்பட்டுள்ளது.
அற்ப அரசியல் இலாபங்களை அடையும் குறுகிய நோக்கோடு சமூகத்தை அடகு வைத்து அல்லது காட்டிக்கொடுத்து அருளாளன் அல்லாஹ்வின் கோபத்திற்கும், சோதனைக்கும், தண்டனைக்கும் யாரும் ஆளாகிவிடக் கூடாது. முஸ்லிம்களின் விமோசனத்திற்காகவும், இஸ்லாத்தின் எழுச்சிக்காகவும் இந் நன்னாளில் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திப்போமாக! 'ஈத் முபாரக்'
ஏ. எச். எம். பெளஸி
முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய சிந்தனையுடையவர்களாக திகழவேண்டும். இவ்வாறு நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அச்செய்தியில் குறிப்பிட்ட தாவது, அமைதியான வாழ்க்கைக்காக அல்லாஹ்வின் வழிகாட்டலையும் பாதுகாப்பையும் வலிமையையும் ஆதரவையும் நாடி இரவு, பகல் காலங்களில் அல்லாஹ்வைப் பிரார்த்தனை செய்தார்கள்.
மோசமான சமூக பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் முஸ்லிம்கள் பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுக்கக்கூடியதாய் அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை நிறைவேற்றித் தருகின்றமைக்காக அல்லாஹ்வுக்கு நாம் நன்றியுடையவர்களாய் இருத்தல் வேண்டும். அல்லாஹ்வின் விருப்பத்துக்கும் அவனது திருப்திக்கும் இயைவாக நாம் செயற்படத் தவறினால், இயல்பாகவே அதற்கான விளைவுகளுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே எம்மைச் சூழ்ந்து நிற்கும் தீய சக்திகளிடமிருந்தும் இயற்கை அழிவிலிருந்தும் எமது சமூகத்தைப் பாதுகாக்க இன்றைய திருநாளில் அல்லாஹ்வைப் பிரார்த்திக்குமாறு முஸ்லிம் சகோதரர்களை நான் வேண்டிக் கொள்கிறேன். நோன்பைப் பூர்த்தி செய்த முஸ்லிம்கள் அல்லாஹ்விடமிருந்து கூடிய நன்மைகளை பெற்றவர்களையும் அதன் மூலம் சமூகத்தில் தமது பங்களிப்பினை பூர்த்தி செய்ய வலிமை பெற்றவர்களாயும் உள்ளனர். எம்மை எதிர்நோக்கியுள்ள பிரதான பணி தேசிய சமாதானத்தை அடையப் பெறுதலாகும்.
அச்சமாதானம் நாட்டின் எல்லாச் சமூகங்களையும் சார்ந்த மக்களின் உயிர், உடைமை, கெளரவம் அந்தஸ்து அவற்றைப் பாதுகாப்பதற்கும் அம்மக்களது தேவைகளையும் அபிலாஷைகளையும் நிறைவேற்றிக்கொள்வதற்கான சூழ்நிலையொன்றுக்கு உத்தரவாதமளிக்கக் கூடியதாயும் இருக்கும். எனது முஸ்லிம் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அலவி மெளலானா
புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் மக்களுடன் புனித நோன்புப் பெருநாள் தின வாழ்த்துச் செய்தியினை பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சியடை கின்றேன். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பின் கடமைகளை நிறைவேற்றிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு இன்று மிகவும் முக்கியம் வாய்ந்த தினமாக திகழ்கின்றது.
இவ்வாறு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு இலக்காகி துன்பமுறும் எமது ஈரானிய சகோதரர்களுக்காக பிரார்த்திப்பதுடன் உலகளாவிய ரீதியில் முஸ்லிம் நாடுகள் ஏகாதிபதிய நாடுகளின் சூழ்ச்சி வலையில் சிக்கி பாரிய இன்னல்களுக்கு இலக்காகியுள்ள இவ்வேளை முஸ்லிம்களாகிய நாம் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. நாம் எமக்குள் பிளவுகளை ஏற்படுத்திக் கொள்ளாது ஒற்றுமையாக பொறுமையாக தியாக சிந்தனையுடன் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.
உலக இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் சாந்தியையும் சமாதானத்தையும் நிம்மதியையும் வழங்க வேண்டும் என புனித நோன்புப் பெருநாள் தினத்தில் சகல வல்லமையும் படைத்த அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.
ஏ. எல். எம். அதாஉல்லா
நமது முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் அறிந்தவாறு இப்புனித ரமழான் மாதத்தில் பாவங்கள் அனைத்தும் சுட்டெரிக்கப்படு வதுடன் அல்லாஹுத்த ஆலாவின் அருளும் இம்மாதத்தில் நிறையவே கிடைக்கப்பெறுகின்றது. அதன் காரணமாகவே இப்புனிதமும், மகத்துவமுமிக்க மாதம் ஆரம்பித்த நாள் முதல் எமது முஸ்லிம் உடன் பிறப்புகள் நோன்பு நோற்று அல்லாஹ்வை இரவு, பகலாக நிறையவே நின்று வணங்கி, ஏழைகளுக்கு நிறையவே தானதர்மங்களில் ஈடுபட்டு இன்னும் பல நற் கிரியைகளில் அதிகளவும் பங்கேற்றுமிருந்தனர்.
இன்று அவர்கள் புனித ஈதுல் பித்ர் ஈகைத் திருநாளைக் கொண்டாடியவர்களாக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு ஸ¤க்ர் செய்கின்றனர். அவர்களுக்காய் எனது நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மனநிறைவடைகின்றேன். வல்ல அல்லாஹ்வையும் புகழ்ந்து கொள்கின்றேன். இவ்வாறு தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நமது தாய் நாட்டில் கொடூரமும், துயரமும் நீங்கி நிலையான ஒரு அமைதிச் சூழலில் நாம் இன்று நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ‘அல்ஹம் துலில்லாஹ்’ இந்நிம்மதிச் சூழலை சகிக்க முடியாத சர்வதேச மற்றும் உள்நாட்டு விஷமிகள் நிலைமையை சீர்குலைக்கும் வகையில் நமது தாய் நாட்டினுள் பல பிரச்சினைகளை தூண்டிவிட்டும் தூண்விடவும் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
அந்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள நமது சமூகத்தையும் பாவிக்க முனைகின்றனர். இந்நிலையில் அவ்விஷமிகளின் தீய சதிவலைக்குள் சிக்கி விடாது நாம் பெற்ற சுதந்திரத்தையும் நிம்மதியையும் என்றும் பாதுகாத்து நிலை நிறுத்துவதும் எமது கடமையாகும். அதற்காய் எல்லாம் வல்ல அல்லாஹ்வை இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக!
மேலும் நமது அழகிய சிறிய நாட்டில் இனங்களுக்கிடையில் பேதமற்ற ஒற்றுமை தொடரவும் நாடு வளம்பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன்
மேலே உள்ள மூன்றுபேரும் முஸ்லிம் சமூகம் சவால்களுக்கும் சோதனைகளுக்கும் உண்ணாட்டிலும் வெளிநாட்டிலும் முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றதாகச் சொல்லும் அதேவேளை நான்காமவரோ அமைதிச் சூழலில் முஸ்லிம்கள் வாழ்ந்துகொண்டிருப்பதாகக் கூறுகின்றாரே!
ReplyDeleteஇதில் உண்மை சொல்பவர் யார்?
பொய்யுரைப்பவர் யார்?