Header Ads



மக்களின் உயிர்நாடிகளை முஸ்லிம் காங்கிரஸ் தொட்டுவிட்டது - ரவூப் ஹக்கீம் பெருமிதம்


டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்

கிழக்கு மாகாணத்தில் இப்பொழுது அதிர்வுகள் ஆரம்பித்துவிட்டன. மக்களின் உயிர் நாடிகளை நாங்கள் தொட்டுவிட்டோம் என்பதை அரசாங்கம் கண்டு விட்டது. ஓவ்வொரு பிரதேசங்களுக்கும் நான் சென்று வருகின்ற போது என்னால் அதனை நன்கு அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அக்கரைப்பற்றில்  நடைபெற்ற கட்சியின் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர சபை எதிர்க்கட்சித் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளருமான ஹனீபா மௌலவி (மதனி) தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன்,  வேட்பாளர்களான ஏ.எல். தவம், நபீல் ஹாஜியார், அட்டாளைச்சேனை வேட்பாளர் நஸீர், மு.கா. முக்கியஸ்தர் மர்ஜூன், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் தாஹிர் ஆகியோர் உட்பட அநேகர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தேர்தல் தொகுதியில் முக்கிய கேந்திர ஸ்தானங்களில் ஒன்றாக அக்கறைப்பற்று திகழ்கின்றது.

முஸ்லிம்களின் உணர்வுகளை மட்டுமே முக்கிய மூலதனமாகக் கொண்டு இந்தக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகிறோம். வெறும் எடுப்பார் கைப்பிள்ளைகளாக முஸ்லிம்களாகிய நாம் இனிமேலும் இருக்க முடியாது.

இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற காரணத்தினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இத் தேர்தலில் முதல் தடவையாக போட்டியிடுகிறது. மாகாண சபை உருவாக்கத்தின் பிறகு, தமிழ் ஆயுதக் குழுக்கள் சில மாகாண சபை தேர்தல்களில் போட்டியிட்டனவே தவிர தமிழ் மக்களின் அதிக பட்ச ஆதரவை பெற்ற தமிழரசுக் கட்சி உட்பட தமிழ் தரப்பு போட்டியிடவில்லை.

சர்வதேசத்தின் பார்வையில் நம்பகத் தன்மையுள்ள ஒரு மாகாண அரசியல் செயல்பாடு நடக்கப்போகின்றது ஒரு பிரதானமான விஷயமாகும். அதில் முஸ்லிம்களின் வகிபாகம் என்ன என்பதை நாம் மிகத் தெளிவாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த முதலாவது கிழக்கு மாகாணத் தேர்தல் எவ்வாறு நடைபெற்றதென்பது எல்லோருக்கும் தெரியும். இங்கு அருகிலுள்ள இராமகிருஷ்ண பாடசாலை வாக்குச் சாவடியில் 98 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அக்கரைப்பற்றில் இருந்து பொத்துவில் வரையிலான எல்லா வாக்குச்சாவடிகளிலும் 95 வீதத்திற்கு அதிகமாக வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால், மாவட்டத்திலுள்ள ஏனைய வாக்குச் சாவடிகளில் 60 – 65 வீதமான வாக்குகளே பதிவாகியிருந்தன. அதுபற்றி தேர்தல் முடிந்த கையோடு நான் அப்போதைய தேர்தல் ஆணையாளரை சந்தித்து கூறிய போது அவ்வாறான அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் அங்கு அளிக்கப்பட்டிருக்க முடியாது என அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தம்மால் எதுவுமே செய்ய முடியாது என சொல்லிவிட்டார்.

ஆனால், சரத் பொன்சேகா போட்டியிட்ட தேர்தலில் அவ்வாறு செய்யமுடியவில்லை. அதற்கான மாற்று வழிவகைகளை மேற்கொண்டிருந்தோம். இனிமேல் அவ்வாறான தில்லுமுல்லுகள் இடம்பெற இடமளிக்க முடியாது. 

இப்பொழுது அதிர்வுகள் ஆரம்பித்துவிட்டன. மக்களின் உயிர் நாடிகளை நாங்கள் தொட்டுவிட்டோம் என்பதை அரசாங்கம் கண்டு விட்டது. ஓவ்வொரு பிரதேசங்களுக்கும் நான் சென்று வருகின்ற போது என்னால் அதனை நன்கு அவதானிக்க முடிகின்றது. அது தான் முஸ்லிம்களுடைய தேவையும் கூட. சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லவேண்டியவற்றை சொல்லியாக வேண்டும்.

பிரச்சினைகளை சரியாக அடையாளம் கண்டுகொண்டு முறையாக இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஆனால், விதண்டாவதம், விஷமப் பிரசாரங்கள் என்பவற்றில் அவர்கள் ஈடுபடுவார்கள். 

இங்குள்ள அமைச்சரின் பார்வையில் ஆசன இழுபறியில் தான் நாங்கள் வெளியே வந்ததாக கூறுகிறார். ஏதோ கபட நாடகம் ஆடி அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டோம் என்கிறார். அப்படியாக அவர் கூறுவாரானால் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு சாகசத்தை நிகழ்த்தியுள்ளேன். அப்படி ஏமாறும் அரசாங்கம் அல்ல. ஆனால், அவர் தப்புக் கணக்கு போட்டிருக்கிறார். ஆனால், அவர்களுக்கு எக்கச்சக்கமான ஏச்சு. ஜனாதிபதியும், பாதுகாப்புச் செயலாளரும் முஸ்லிம் காங்கிரஸை தனித்து செல்ல விட்டதற்காக அமைச்சர்களை ஏசித் தள்ளுகிறார்களாம்.

முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டுமென்று ஆவலோடு இருந்த கட்சி தலைதப்பினால் தம்பிராண் புண்ணியம் என்று தனித்துக் கேட்கிறோம். ஒரே பட்டியலில் போய், வலயங்கள் பிரித்து, அதாவுல்லாவின் வியூகத்தை முஸ்லிம் காங்கிரஸ் தோற்கடிக்கப்போகிறதென்றும், அதற்குத்தான் முதலிடம் கொடுக்கப் போகிறதென்றும் நினைத்தார்கள்.

தோற்கடிக்கப்படப் போகிறவர்கள் அவரை விடப் பெரியவர்கள். வெறும் சில்லறைகளை தோற்கடிப்பது எங்களுக்கு சர்வசாதாரணமான காரியம்.

முஸ்லிம் சமூகத்தின் உணர்வலைகளை கிளறிவிட்டு, விடயங்களைச் சாதிக்கலாமென விடுதலைப் புலிகள் இருந்த பொழுது அவர்கள் நினைத்தார்கள். இப்பொழுது நிலைமை மாறி விட்டது. புலிகள் செய்த அந்தக் காரியத்தை இன்று காவி உடை தரித்தவர்கள் செய்கிறார்கள். இதனை முறியடிப்பதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டும்.
இந்தச் செய்தி மிகவும் கனதியானதும், காட்டமானதுமான செய்தியாகும். பயங்கரவாதம் என்றால் புலிகளின் பயங்கரவாதமும் ஒன்றுதான், காவி உடை தரித்தவர்களின் பயங்கரவாதமும் ஒன்று தான். முன்னர் வடகிழக்கில் தான் பயங்கரவாதம் இருந்தது. இப்பொழுது வடகிழக்கிற்கு வெளியில் சாமி மாரின் பயங்கரவாதம் பரவியுள்ளது.

இதற்கெல்லாம் காப்பீடாக அமையப் போவது, இந்தக் கிழக்கு மாகாணத் தேர்தலில் நாம் எட்டப்போகும் முடிவு என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். அதற்கான ஒரு தயார்படுத்தலை செய்ய வேண்டும். ஏனென்றால் மரச் சின்னத்தை கண்டதும் முஸ்லிம்கள் மிகவும் வாஞ்சையோடு இருக்கிறார்கள். வாக்களிப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே நன்கு திட்டமிட்ட முறையில் இந்தத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

அந்த தயார்படுத்தலுக்காகத்தான் அக்கரைப்பற்றில் நாம் இன்று சந்திக்கிறோம்.  மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தலா மூன்று ஆசனங்களை வெற்றி கொள்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முழு மூச்சாக ஈடுபடுகிறது. இங்கிருப்பதை விட அங்கும் மக்கள் மிகவும் ஆவேசமாக இருக்கிறார்கள். நாங்கள் வென்றெடுக்கும் ஆசனங்களின் எண்ணிக்கையின் ஊடாக நாம் சொல்லப்போகின்ற செய்தி இந்த சமூகத்தை பாதுகாக்கின்ற செய்தியாகும்.

ஏனென்றால் இப்பொழுது ஜனநாயகப் பயங்கரவாதம் என்றும் ஒன்றுள்ளது. தேர்தல் நடத்துவதே ஒரு பயங்கரவாதம். முடிவில்லாத தேர்தல் மயம். ஆனால், இப்படி அடிக்கடி நடக்கும் தேர்தல்களுக்கு பயப்படுபவர் ரணில் விக்ரமசிங்க மட்டும் தான். ஜனாதிபதி தன்னை நிம்மதியாக இருக்கவிடாமல் தேர்தல் நடத்திக்கொண்டிருக்கிறாரே என்று அவர் பயப்படுகிறார். நாங்கள் அரசாங்கத்திற்கு முட்டுகொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். தேர்தலுக்குப் பிறகும் வெற்றிலைக்குப் போய் முட்டுக்கொடுப்பீர்களே என்று கேள்வி கேட்பார்கள். அந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டும்.

இந்த தேர்தலில் மக்களின் வரத்தைக் கேட்பது வெறுமனே ஆட்சிக் கதிரையில் போய் குந்துவதற்கு அல்ல. ஏனென்றால், வேண்டியதையெல்லாம் செய்யுங்கள் என்று சும்மா கைகளைக் கட்டிக்கொண்டு வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கலாம். மாகாண சபையில் எங்கள் உறுப்பினர்கள் எட்டுப் பேர் இருந்த போதிலும் அவர்களை கிள்ளுக் கீரைக்கு கூட கணக்கெடுக்கவில்லை. அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்தார்கள்.

பிரேரணைகளையும், தீர்மானங்களையும் கொண்டு வந்து ஆளுநர் சொன்னார் என்று எங்களை கலந்தாலோசிக்காமலே நிறைவேற்ற எத்தனித்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் தான் எதிர்க்கத் தலைபட்டாலும், எங்கள் பிரதிநிதிகளை அழைத்து கதைப்பதில்லை. அவர்களுக்குள் மட்டும் கலந்தாலோசித்துக்கொள்வார்கள்.

நாடு, நகர அபிவிருத்திச் சட்டம் என்பவை மறைமுகமாக கொண்டுவரப்பட்டவை. முஸ்லிம் சமூகத்தின் இருப்புக்கு ஆப்பு வைக்கின்ற வேலையை அரசாங்கம் செய்ய எத்தனித்த போது, நீதிமன்றத்திற்கு போய் தடுத்தோம். நாங்கள் சென்ற மாகாண ஆட்சியில் முஸ்லிம்களின் மனச் சாட்சியை நாங்கள் பிரதிபலித்திருக்கிறோம். மனச்சாட்சியாக இருப்பதென்பது தான் நாங்கள் கேட்கின்ற மக்கள் ஆணை. ஆதை எப்படிச் செயல்படுத்துவது என்பதை தேர்தலுக்குப் பிறகு கூடிப் பேசலாம்.

ஏனென்றால், முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் எந்தத் தரப்பும் ஆட்சியமைக்க முடியாது. அதற்கான களநிலவரம் எங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கின்றது. பாமர மக்கள் கூட அரசியல் விழிப்புணர்ச்சி பற்றி அரசியல் பேசக்கூடிய அக்கரைப்பற்றில் தான் நான் இந்த யதார்த்தத்தை கூறிக்கொண்டிருக்கிறேன்.

பலவிதமான கோணங்களிலிருந்து இந்த விடயம் ஆராயப்பட்டுள்ளது. எனக்கு முன் பேசிய முன்னாள் பிரதியமைச்சர் சேகு இஸ்ஸதீன் இந்த அம்பாறை மாவட்டத்தை வென்றெடுப்பது பற்றிய சில கருத்துக்களைச் சொன்னார். நல்ல தயார்படுத்தலை நாங்கள் செய்ய வேண்டும் என்றார். நோன்பு முடிவடைந்ததும் மேடை போட்டு பேசலாம். ஆனால், வீடு வீடாக எங்களது செய்திகள் சென்றடைய வேண்டும் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியை மூன்று மடங்காக கூட்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு ஒரு செல்நெறி இருக்கிறது. அதாவது, மக்களையும், சர்வதேசத்தையும் சமாந்தரமாக சமாளித்துக்கொண்டு ஒரு தெளிவான செல்நெறியில் இந்த அரசாங்கம் பயணிக்கின்றது. கோல் போஸ்ட்டை தனக்கு தேவையான மாதிரி நகர்த்துகின்றது.

அடுத்த தசாப்தத்திற்கும், அதற்கு அப்பாலும் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரேயொரு வழியாக, அழுத்தங்களை பிரயோகித்து தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கான காலம் கனிந்து வருகின்ற நிலையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு நாம் முகம் கொடுக்க உள்ளோம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இப்பொழுது தனது மௌனத்தை கலைத்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதைக் கொடுக்கப் போகிறோம் என அவர்கள் வாய் திறந்து பேச ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் மூடி மறைத்து, முஸ்லிம் காங்கிரஸோடு நட்புறவோடு இருக்கிறோம் என பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்பொழுது முஸ்லிம்களுக்கு எவற்றைக்கொடுக்கப் போகின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே கூறத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

சகோதரர் அதாவுல்லா நாங்கள் மீண்டும் வடகிழக்கை இணைக்கப்போகின்றோம் என்ற ஒரு புரளியை கிளப்பியிருக்கிறார். குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு சிக்கலில் இருந்து தப்பித்துக்கொள்வதற்கான ஒருவிதமான வழிவகையை அவர் கையாளுகிறார்.

இந்தச் சூழ்நிலையில் வெற்றியை நோக்கிச் செல்கின்ற எங்கள் பயணத்தில் ஒருமித்த செயல்பாடு அவசியமாகும். வேட்பாளர்களும், மத்திய குழுவினரும், தேர்தல் நடவடிக்கை குழுவினரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். ஓர் ஆளணி திரட்டப்பட்டு முழு நேர ஊழியர்களாக பணியாற்றுவதற்கு களத்தில் இறங்க வேண்டியுள்ளது. அக்கரைப்பற்று வேட்பாளர்கள் மூவரும் வெற்றி பெறுவது மிகவும் சுலபமாகும். அவர்களது வெற்றிக்கு உரிய பங்களிப்பைச் செய்வதற்கு, இவ்வூர் மக்கள் மட்டுமல்லர், முழு அம்பாறை மாவட்டத்திலும் கட்சியின் ஆதரவாளர்கள் உணர்வுபூர்வமான முன் வந்திருக்கிறார்கள் என்ற நற்செய்தியையும் இச் சந்தர்ப்பத்தில் கூறி வைக்கிறேன்.




2 comments:

  1. என்னத்த தொட்டிங்க என்று தேர்தல் முடிவு வந்தா விளங்கும் ஆனா அது சுனங்கும்மில்ல??? அதால பேசுறதெல்லாம் பேசுங்க மக்களை மடயர்கள் என நினைத்து?

    ReplyDelete
  2. நாம் நிதானமாக வார்தைகளை உபயோகிப்பதே எமக்கு சிறந்ததாகும் காவியுடையுடன் பயங்கரவாததை நாம் சம்மந்த படுத்தி இருப்பதுபோல் இஸ்லாதோடும் நோன்போடும் மஸ்ஜிதுகளோடும் பயங்கரவாதத்தை சம்மந்தபடுத்தி பேரினவாதிகள் சாதாரண சிங்கள மக்களிடம் துவேச உணர்வுகளை வளர்க்க எத்தனை நாளிகைகள் ஆகும்? சட்டபடி மஸ்ஜிதுகளில் குல்லப்பம் விளைவிக்க வருவோறுகெதிராக நீதிமன்றத்தை நாடாது கையாளாகாத்தனத்தில் இருந்துகொண்டு கண்டதையும் பேசுவதால் என்ன தீர்வு உண்டாகும்

    ReplyDelete

Powered by Blogger.