முஸ்லிம் சமூகத்தின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் செயல்களைத் தவிருங்கள்
(கடந்தவாரம் நவமணி பத்திரிகையில் வெளியாகிய ஆசிரியர் தலையங்கம் இது)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரை கடந்த வாரத்தில் பரபரப்பாக பேசும் ஒரு விடயமாக மாறியிருந்தது.
புலிப்பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது போன்று காவியுடைப் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டுமென்பதே இந்த உரையாகும்.
அமைச்சர் ஹக்கீமின் இந்த உரை குறித்து பௌத்த மக்களின் தனிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய உட்பட பல பௌத்த அமைப்புக்கள் அதிருப்தி தெரிவித்திருந்ததோடு சமூகத்துக்கு எதிரான ஒரு பூகம்பமாக வெடிக்கும் ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
தாமதித்தேனும் தன் நிலமையை உணர்ந்த அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பாக தான் செய்த தவறுக்கு மகா சங்கத்தினரிடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்புக் கோரியதனையடுத்து விஸ்வரூபமெடுக்கவிருந்த இப்பிரச்சினை இப்போது ஓரளவு தணிந்துள்ளது.
இந்த வகையில் தான் விட்ட தவறுக்கு மன்னிப்புக் கோரிய செயற்பாடு பாராட்டுக்குரியதே. மன்னிப்புக் கேட்டது பற்றி பல தரப்பட்ட அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்பட்ட போதும் இதனால் ஏற்படப் போகும் பாதிப்பினை உணர்ந்ததாலே அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
மகா சங்கத்தினரும் ஜாதிக ஹெல உறுமயவும் இந்த மன்னிப்பை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டிருப்பதனை உணரக்கூடியதாகவுள்ளது. என்றாலும் கூட ஹக்கீமின் கூற்று முஸ்லிம்களையும் பௌத்தர்களையும் பிரிப்பதற்கும் துõரப்படுத்துவதற்கும் மேற்கொள்ளும் சக்திகளுக்கு இனிப்பான செய்தியாகவே அமைந்துள்ளது.
கிழக்கு மாகாண அரசியல் மேடைகளில் பேசப்படும் சில விடயங்கள் குறித்து சமூகம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பது என்பதனை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் ஒன்றைப் பேசிவிட்டு தமிழில் இன்னொன்றை பேசி இரட்டை வேடம் போடுகிறார்கள் என ஜாதிக ஹெல உறுமய விடுத்துள்ள அறிக்கையில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் தலைவர்களது நம்பகத்தன்மை பற்றிய கேள்வியை அவர்கள் இதன்மூலம் எழுப்பியிருக்கின்றார்கள்.
கிழக்குத் தேர்தலின் பிரதான கோஷமாக முஸ்லிம் காங்கிரஸ் இன்று பள்ளிவாசல் பிரச்சினையை முன்வைத்தே பேசி வருகின்றது. பள்ளிவாசல் தாக்குதல் தொடருமானால் ஜிஹாத் செய்வோம் என முஸ்லிம் காங்கிரஸின் அபேட்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் பேச வேண்டிய இடங்களில் இவற்றைப் பேசாமல் மேடைகளில் பேசி தாம் சமூகத்திற்கு விடுதலை பெற்றுக் கொடுப்போர் எனக் காட்ட முற்படுகின்றனர்.
அண்மைக்காலமாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை இலக்காக வைத்து சில எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது உண்மை. இதில் பௌத்த சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தினர் ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மையான பௌத்தர்கள் இதனை அங்கீகரிக்கவில்லை. இந்த நாட்டில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இருக்கின்றன. அவை இயங்குவதற்கு யாரும் தடை போடவில்லை. இப்புனித நோன்பு காலத்தில் நடைபெறும் இப்தார்களில் பௌத்த தேரர்கள் பங்குபற்றி முஸ்லிம்கள் தொடர்பாக தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இந்தப் பின்னணி தொடர வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களுக்கு தொடர்ந்து பிரச்சினைகளின்றி நிம்மதியாக தம் மதக் கடமைகளை நிறைவேற்றி வாழக்கூடியதாக இருக்கும்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மேடைகளில் இவ்வாறான பிரச்சினைகளை பிரஸ்தாபிப்பதனை முஸ்லிம் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற பிரச்சினைகளை பேச வேண்டிய இடங்களில் பேசுங்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த அரசின் ஒரு பங்காளிக் கட்சியாக இருக்கின்றது என்பதனை மறந்தே அதன் பல அபேட்சகர்கள் மேடையில் பேசுகிறார்கள். இக்கட்சி எதிர்காலத்திலும் அரசுடனே இருக்கப் போகின்றது. அமைச்சர், பிரதியமைச்சர் பதவிகளை தாங்கி நிற்பது இதனையே உணர்த்துகின்றது.
இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்னும் இருக்கும் மூன்று வாரங்களில் முஸ்லிம் அபேட்சகர்கள் நிதானத்துடன் செயற்படுவதனை இக்கட்சித் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். நிதானமிழந்தால் ஏற்படப்போகும் ஆபத்து பயங்கரமானது. இன்று முழுநாடும் கிழக்கு மாகாணத் தேர்தல் பற்றி விசேடமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இதனை உணர்ந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் தம் பேச்சுக்கள் அறிக்கைகளை நிதானமாக மேற்கொள்ள வேண்டும்.
இதேநேரம், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையிலான மோதலும் பகிரங்கத்துக்கு வந்துள்ளது. புனித நோன்பு என்றும் பாராது மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு உடைமைகளையும் சேதமாக்கியுள்ளனர். அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை சமூகம் மிக வெறுப்புடன் பார்க்கின்றது. ஒரு கட்டத்தில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்றாகச் செயற்பட இணக்கம் கண்டிருந்தனர். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் முன் இந்த வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் மறந்து முஸ்லிம் கட்சித் தலைவர் என்று கூறுபவர் மிக மோசமாக நடந்துள்ளார். கருத்துக்களை கருத்துக்களாலே வெல்ல வேண்டும். வன்செயல்மூலம், ஆயுத பலம் மூலம் கருத்துக்களை வெற்றி கொள்ள முடியாது. அட்டாளைச்சேனை சம்பவத்தை முழு முஸ்லிம் சமூகமும் வெறுப்புடனே பார்க்கின்றது. புனித நோன்பில் முஸ்லிம்கள் இப்படியா நடக்கின்றார்கள் என்று மற்றவர்கள் கேட்கின்றார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்களது பொறுப்பற்ற நிதானமிழந்த செயற்பாடுகளால் இன்று முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
A useful editorial.
ReplyDeleteTo all politicians!Please, never speak communalism because we live with people having differnt faiths.
The consequences will be imminent if these people are continuously involved in this act merely for votes! In my opinion blaming or criticising the government for its conduct is quite acceptable but targeting the whole sinhala community is unfair because only a handful of them are engaged in such activities and the majority never tolerate such acts.
The so called muslim leaders are a bunch of jokers.
ReplyDeleteThat's right Brother Ikram,
ReplyDelete