Header Ads



அரபுப் புரட்சியும், இலங்கை அரசியல் இஸ்லாமும்


(தமிழர்களின் பார்வையில் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் அரபுப் புரட்சி எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதை வெளிக்காட்டுவதற்காக இக்கட்டுரையை பதிவிடுகிறோம்)

யமுனா ராஜேந்திரன்

gtn

இந்தியா, இலங்கை, வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இஸ்லாம் குறித்த விவாதங்கள் 'இஸ்லாமிய வெறுப்பு' மற்றும் 'பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்' எனும் கருத்துக்கட்டுக்கள் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. சமவேளையில் மேற்கிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் தாரிக் ரமடான் போன்றவர்கள் மேற்கிலும் அமெரிக்காவிலும் வாழும் இஸ்லாமியர்கள் எவ்வாறு தாராளவாத அரசியல்-சந்தைப் பொருளாதார அமைப்புக்கும் இஸ்லாமிய வாழ்முறைக்கும் இணக்கத்தை ஏற்று வாழ்வது என்பது குறித்துப் பேசுகிறார்கள்.

எமது நாடுகளிலும் இத்தகைய கருத்துக்கட்டுக்களைச் சுற்றியே எமது விவாதங்களும் அமைகிறதேயல்லாது, இஸ்லாமிய அரசியலில் இருக்கும் 'பன்முகப் போக்குகள்' குறித்தும் அதனது இன்றைய செயல்வடிவமான 'அரபுப் புரட்சியின் பெறுபேறுகள்' குறித்தும் விவாதக்கட்டுக்கள் உருவாகவில்லை. இஸ்லாமிய சமூகங்களில் உள்ள அரச எதிர்ப்பாளர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், அறிவுஜீவிகள் போன்றவர்களின் பாத்திரம் குறித்து ஜியாவுதின் சர்தார் மற்றும் ஹமித் தபாஸி போன்றவர்கள் பேசிவருபவை எமது விவாதக்கட்டுக்குள் வருவதேயில்லை.

இலங்கையில் பேரினவாத இலங்கை அரசு, தமிழர் அரசியல், இலங்கை அரசியல் இஸ்லாம் எனும் இந்த முப்பரிமாண   அரசியலைப் பார்க்கிறபோது, இலங்கை அரசியல் இஸ்லாமினுள் அரபு நாடுகளில் தோன்றியிருப்பது போன்ற தாராளவாத-இடதுசாரி மற்றும் சிவில் சமூக அறிவுஜீவிகள் என்பவர்கள் இஸ்லாமிய அரசியலுக்குள் இன்றைய நிலையில் உருவாகவேயில்லை.

குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான தமிழர்களின் நிலைமையை இலங்கை அரசியல் இஸ்லாம் எவ்வாறு அணுகுகிறது என்பதனைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். விடுதலைப் புலிகளின் அதிகாரம் ஆட்சி செலுத்திய காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து பெருந்தொகையாக முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டது தமிழர்களின் நினைவுகளில் அவமானமாகக் கறையாகப் படிந்துபோயிருக்கிறது. இந்த அவமானத்திலிருந்தும் மனக்கறையிலிருந்தும் மீளமுடியாமை இன்றும் தொடருவதால் பேரினவாத அரசுக்கு எதிராக உருவாக வேண்டிய தமிழர்-முஸ்லீம் ஒற்றுமை அரசியலில் இலங்கை அரசியல் இஸ்லாமின் பாத்திரம் குறித்து தமிழ்-இஸ்லாமிய அறிவுஜீவிகள் மௌனம் காத்து வருகிறார்கள்.

தமிழ் அரசியல் கட்சிகள், தமிழ் அறிவுஜீவிகள், தமிழ் சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் வெளியேற்றம் குறித்த தமது வெளிப்படையான மன்னிப்புக் கோரலைத் தெளிவாக முன்வைத்து வருகிறார்கள். பின் முள்ளிவாய்க்கால் யதார்த்தம் என்பது புதியதொரு தமிழர்-முஸ்லீம் ஒற்றுமை அரசியலை அவாவி நிற்கிறது. கிழக்கு மாகாணத் தேர்தலின் பின் சாத்தியப்படுமானால் முஸ்லீம் தரப்பினருடன் ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்கான தமது விருப்பையும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.

இலங்கை அரசியல் இஸ்லாம் என்பது அரபுப் புரட்சிகள் போன்று வெகுமக்கள் சார்பிலான அரசியலை முன்னெடுப்பதனை விடவும், அரசுக்கும் இராணுவ அதிகாரத்துக்கும் சார்பான அரசியலையே முன்னெடுக்கிறது. அரபுப் புரட்சிகளில் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் அடிப்படை மனித உரிமைகளுக்கும் ஆன போராட்டம் என்பது முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. துரதிருஷ்டவசமாக இலங்கை அரசினால் 40,000 வெகுமக்கள் கொல்லப்பட்டார்கள் என உலக அமைப்புக்கள் சொல்லும் போதும் இலங்கையின் நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் இலங்கைச் ஜனபாதிபதியின் கீழ் அரசாங்கத்தில்  தாம் நீதியமைச்சராக இருப்பது என்பதும் ஏனைய முஸ்லீம் அமைச்சர்கள் ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் அமைச்சர்களாக வீற்றிருப்பது என்பதும் தமக்குப் பெருமையளிக்கிறது என்கின்றனர்.

ஓரு புறம் தமது கூட்டுக் குற்றவுணர்விலிருந்து மீண்டு வந்து உறவுக்குக் கைகொடுக்கும் தமிழர்தரப்பு அரசியல். மறுபுறம் அவர்களது துயர்களை முற்றிலும் மறுத்த அரசு சார்பு இஸ்லாமிய அரசியல். இந்த அரசு சார்பு அரசியல் இலங்கை இஸ்லாமிய மக்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட நிலைநாட்ட முடியாத அளவு அரசியல் இஸ்லாமை நகர்த்துகிறது.

அரசியல் இஸ்லாம் என்பது எப்பொதுமே இஸ்லாமிய சமூகத்திலுள்ள வணிக வர்க்கத்தின் சந்தைப் போருளதார அரசியலையும், முதலாளித்துவப் பொருளாதாரச் சார்பு அரசியல் நலன்களையுமே பிரதிநிதித்துப்படுத்துகிறது என்பதனை மாக்சிம் ரோடின்சன் போன்ற அரபு அரசியல் ஆய்வாளர்கள் முதல் சமிர் அமின் வரையிலான அரபு மார்க்சியர்கள் வரை சொல்லிவருகிறார்கள்.

இலங்கையில் இஸ்லாமிய மதத்தலங்கள் பெரும்பான்மை சிங்களப் பேரினவாதிகளின் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றன. பேரினவாத அரசு இதற்கு எதிரான திட்டவட்டமான எந்த அரசியலையும் முன்வைக்காத சூழலில், இலங்கை முஸ்லீம்களின் வணிக வர்க்கத்தின் அரசியல் நலன்களே அரச ஆதரவாகத் தொடர்கிறது. இச்சூழலில் இலங்கை அரசியல் இஸ்லாமின் பிற்போக்கு அரசியல் குறித்த விமர்சனங்களை அந்த சமூகத்தின் அறிவுஜீவிகள் வெளிப்படையாக முன்வைக்க வேண்டிய சூழல் உருவாகிவருகிறது.

தமது அரச ஆதரவைத் தக்க வைப்பதன் மூலம் தமது அரசியல் நலன்களைத் தக்கவைக்கும் பொருட்டு, நடைமுறை ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கமுடியாத தமிழர் எதிரப்பு அரசியல் பிறிதொரு பகுதி அரசியல் இஸ்லாமினால் முன்வைக்கப்படுகிறது. அமைச்சர் ரிசாத் பத்யுதின் இதனைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்.

மீள் குடியேற்றத்தை முழுமையாகத் தமது கையில் வைத்திருக்கிற அரசின் பிரதிநிதியான அவர் இஸ்லாமிய மக்களின் மீள் குடியேற்றத்துக்குத் தடையாக இருப்பதாக ஒரு புனையப்பட்ட, இல்லாத விடுதலைப் புலிகள் எதிர்ப்பு அரசியலை முன்வைக்கிறார். மன்னார் ஆயர், ரிசாத் பத்யுதின், மீள் குடியேற்றம் தொடர்பாக நடந்து வருகிற விவாதங்களில் எந்தவிதமான ஆதாரங்களையோ அல்ல புள்ளிவிவரங்களையோ அவர் முன்வைப்பதில்லை.

தமது வாழ்வாதாரங்களை இழந்துபட்ட, படுகொலைக்கு ஆளான தமிழ் சமூகத்தின் பாடுகளை முற்றிலும் புறக்கணித்து, புனைவான தமிழர் எதிர்ப்பு அரசியலை, அரசு ஆதரவு அரசியலை முன்னெடுக்கும் இந்த வகை அரசியல் இஸ்லாமின் செயல்திட்டத்தினால் தமிழர்-முஸ்லீம் ஒற்றுமை சாத்தியமாகப்போவதில்லை.

மீளவும் நாம் அரபுப் புரட்சிகளின் சமகால நிலைமைகளுக்குத் திரும்புவோம். அரபு வெகுமக்கள் எந்த எதேச்சாதிகார அமைப்புக்களை எதிர்த்துப் போராடினார்களோ, எந்த இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்துத் தமது சிவில் சமூக உரிமைகளுக்காகப் போராடினார்களோ அதே ஒடுக்குமுறையாளர்களுடன் சமரசம் செய்து கொண்டிக்கிற அரசியல் இஸ்லாமை நாம் அங்கு காண்கிறோம். தமது ராணுவத்துக்குத் தொடர்ந்து  அமெரிக்க நிதியுதவியைக் கோருகிற, பாலஸ்தீனத்துக்கு எதிரான கேம்ப் டேவிட் உடன்படிக்கையை நிலைநாட்டுகிற அரசியல் இஸ்லாமிய அரசை நாம் எகிப்தில் காண்கிறோம்.

சமவேளையில், தமது ஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து  போராடுகிற இஸ்லாமிய சிவில் சமூக அமைப்புக்களையும் அறிவுஜீவிகளையும் நாம் அங்கு காண்கிறோம். இதுவே இஸ்லாமுக்குள் இருக்கிற பன்மைத்துவப் போக்குகள்.

விடுதலைப் புலிகளின் யாழ் முஸ்லீம் மக்களின் வெளியேற்றத்துக்கு எதிரான மிகப்பெரும் தமிழ் அறிவுஜீவிகளின் குரல் அன்றும் இருந்தது. இன்றும் கூட தமிழ் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் வலிமையாகத் தமது குரல்களை ஒலித்து வருகிறார்கள். தமிழர் அரசியல் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இன்று வெளிப்படையாக ஒற்றுமைக் கரத்தை நீட்டியிருக்கிறது.

பின் முள்ளிவாய்க்கால் யதார்த்தம் என்பது இலங்கையின் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு இடையில் ஒற்றுமை அரசியலைக் கோரிநிற்கிறது. தமிழர்கள் முஸ்லீம்களின் மீதான பேரினவாத அரசின் தாக்குதல்கள் வெளிப்படையான யதார்த்தமாக இருக்கிறது. தமிழ் சிவில் சமூகமும் அதனது கலைஞர்களும் அறிவுஜீவிகளும் என்றும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான தமிழர் அரசியலின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வந்திருக்கிறார்கள். வ.ஐ.ச.ஜெயபாலன் மற்றும் சேரன் போன்றவர்கள் இவ்வாறு குரல் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

அரபுப் புரட்சியின் பெறுபேறு போல இஸ்லாமிய சமூகத்தின் கலைஞர்களும் அறிவுஜீவிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் தமது அரசியல் தலைமைகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டும் போது இலங்கை இஸ்லாமிய அரசியலினுள்ளும் பன்முகப் போக்குகள் தோன்றும் என எதிர்பார்க்கலாம். அது அதிகார அமைப்புக்களையும் இனங்கண்டு வெகுமக்கள் எழுச்சிகளின் மூலம் தமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் என்பது அரபுப்புரட்சி இந்த உலகத்திற்குத் தந்திருக்கும் நம்பிக்கை.

6 comments:

  1. ஏன் இந்த கட்டுரையாளர் வார்தைகளால் இவ்வளவு பொய்களை கோர்வையாக புணைக்கிறார்? எந்த தமிழ் புத்தி ஜீவி சமூகம் திறத்தி அடிக்கபட்ட வடமாகாண முஸ்லிம்களிடம் பகிறங்க மன்னிப்பை கோறி உத்தியோக பூர்வ அறிக்கை இட்டு அதட்குறிய பிராயச்சித்தமாக அந்த மக்களிடம் கொள்ளை இட்ட ஐம்பதாயிரம் கோடி சொத்துக்களை மீண்டும் அந்த மக்களிடம் ஒப்படைக்கும் வேலைதிட்டதில் இறங்கி யுள்ளது?

    உறவு வளர பகைக்கும் நியாயதிட்கும் சம்மந்தபட்டோர் பிராயசித்தம் செய்து முடிக்க வேண்டும் அல்லவா??? மத தளங்கள் குறித்து பேசுவதென்றாலும் உடைக்கபட்ட மதஸ்தளங்களை மீண்டும் முஸ்லிம்களிடம் ஒப்படைபது மற்றி பேசுவதல்லவா முதல் கடமை?


    நல்லூர் பள்ளிவாசலோ கல்லியன் காட்டு பள்ளிவாசலோ நொச்சிமுனை பள்ளிவாசலொவொ புலிகளாலா உடைக்கபட்டு கோவில்களும் ஏனைய கட்டடங்களும் கட்ட பட்டுள்ளது??? தேச விரோதிகளுக்கு தேச அபிமானத்துடனான ஒரு இனத்தின் செயட்பாடுகள் தவராக படுவதில் ஆச்சையம் ஏதும் இல்லை!!! ஆனால் ஒரு இனத்தின் நியாயமான எழுச்சி தங்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என தப்பான கொள்கையில் உள்ளோர் ஆசை வைபது அதீதமானது


    இங்கே இல்லாத உறவு குறித்தும் நடவாத நிகழ்வு குறித்தும் பேச முஸ்லிம் புத்திஜீவிகள் முட்டாள்களா என்ன???


    சுதந்திரமான ஒரு இனதிட்கு உள்ள அரசியல் முடிவெடுக்கும் உரிமையை கொச்சைபடுத்தி அவர்களின் அரசியல் நிலைபாடு தங்களுக்கு சாதமாக இல்லை என்பதட்காக அதனை வக்கிற என்னதுடனும் காழ்புணர்வுடனும் மட்டரகமாகவும் பிட்போக்குதனமாகவும் சம்மந்தமே இல்லாதோர் சித்தரிப்பதால் என்ன நட்டம் அந்த இனதிட்கு ???


    நடவாத கனவை சாத்தியமாக்க புலிகள் பல வேஷங்களில் பல அதிட்டங்களுடன் வெளியாகி உஎழுத்தாளர்களாகவும் மாறி தங்கள் இஸ்டத்திட்கு கிறுக்கி தள்ளும்கிறுக்கர்களாகவும் மாறி இருப்பதே அன்றி வேரெதையும் இந்த கட்டுரை பிரதி பளிக்கவில்லை யார் அது சேரன் யார் அது ஜெயபாலன் இவர்கள் எப்போது புலிகளின் முன்னால் புலிகளின் பாஸிசத்தை உக்கிரமாக கண்டித்தார்கள்???

    ReplyDelete
  2. நீங்கள் என்றாலும் சரி, அரசு என்றாலும் சரி முஸ்லிம்களின் மீது காட்டப்படும் பாரபட்சத்திற்கும் காழ்ப்புணர்வுக்கும் ஒருவரில் ஒருவர் சளைத்தவர் அல்ல.
    இப்போது உங்களுக்குத் தேவை உங்களது இலக்குகளை அடைந்து கொள்ள முஸ்லிம்களின் பக்கபலம். அவ்வளவுதான். இதுகால வரையும் தமிழ் கொலைஞர்களால் இழைக்கப்பட்ட அநியாயங்களால் இந்தப் பக்கபலம் கிடைக்காமல் போய்விடுகின்றதே எனும் ஆதங்கம் உங்களது எழுத்தில் மட்டுமல்ல அரசியல் தளத்திலும் இழையோடியிருக்கின்றது.
    உங்களோடு ஒற்றுமையாக வாழ நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம். நபிகள் நாயகம் கூட மதீனாவைச் சுற்றியிருந்த யுதக் கோத்திரங்களுடன் ஒப்பந்தங்கள் செய்து வாழ்ந்த முன்மாதிரி எங்களிடம் இருக்கின்றது. ஆனால் (எங்கோ இருக்கும்) யுதர்களை எனக்குச் சிறுபராயத்திலிருந்தே பிடிக்கும் ஆனால் (கூடி வாழவேண்டிய) முஸ்லிம்களை எனக்குப் பிடிக்கது என கனடாவில் போய் பறையடிக்கும் அரசியல் தலைவர்களை வைத்துக் கொண்டு என்ன இலட்ஷணத்தில் ஒற்றுமை அரசியல் பற்றிப் பேசுகின்றீகள்? சரி அது அவரது தனிப்பட்ட கருத்து என வைத்துக் கொண்டாலும் வாயளவில் ஒற்றுமை அரசியல் பற்றி நீங்கள் பேசுகின்றீர்களே அன்றி ஒற்றுமை அரசியலுக்கு முஸ்லிம்களை அழைக்கின்ற சாதகமான குறிகாட்டிகள் எதனையும் தங்கள் தரப்பு கொண்டிருக்கவில்லையே.
    முதற்கண் தங்களது தரப்பினால் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக நடைமுறையிலான ஒற்றுமை வாழ்க்கைக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்த முயற்சியுங்கள். அதன் பின்னர் அரபு வசந்தத்தின் பன்முகத் தன்மைபற்றி விவாதிக்கலாம். அதையெல்லாம் தெரியாமல் நாங்கள் வாளாவிருப்பதாக நீங்கள் கருதுவது குறித்து கவலை கொள்ள மட்டுமே முடியும். பரஸ்பர நம்பிக்கைதான் ஒற்றுமையின் அடிப்படை.

    ReplyDelete
  3. தமிழர் தரப்புக்கு முஸ்லிம்கள் தேவை படுகிறார்கள் என்பது ஏற்று கொள்ள பட முடியாதது ஸ்ரீலங்கா அரசு மீது வைக்க பட்டு இருக்கும் உலக நாடுகளின் அழுத்தங்களின் பின் தமிழ் சக்திகளே உள்ளனர் இதில் எந்த முஸ்லிம் அமைப்புகளும் இல்லை தமிழர்களின் போராட்டமே இவர்களை காக்க செய்கிறது என்பதை வசதியாக மறைத்து விடுகின்றனர் கால் புனாசி இன மொழி மத வசை பேசுதல் யததர்த்தை புரிந்து கொள்ளாமல் பிரிவினை உண்டாக்குதல் எந்த நலனையும் தராது இன்றைய சூழ் நிலையில் சிறு பான்மை மக்கள் தங்களை பாது காத்து கொள்ளும் வழிமுறை பற்றி சிந்திப்பதே சிறந்தது ஆகும்

    ReplyDelete
  4. Prema உதவி தேவைபடாதவர்கள் உபத்திரம் பன்னாமல் ஒதுங்கி போகாமல் ஏன் தங்களுக்கு சார்பாக சுதந்திரமான ஒரு இன்னோர் இனத்தை வம்புக்கிழுத்து வசைபாட வேண்டும் இங்கே ஒற்றுமை இருந்தால்தானே பிரிவினை பேச வேண்டும் வரலாற்றில் எப்போதுமே இல்லாத தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை இருப்பதாக கருதி பேசும் உங்கள் பேச்சின் வலிமைதான் யாது? வல்லாதிக்க சக்திகளின் நெருக்கடிக்கு பின்னால் நீங்கள் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற உங்கள் நினைப்பு மிக மோசமான அரசியல் சிறுபிள்ளைதனமாக இருக்கிறது
    ஏன் சிறுபான்மை இனம் சிறுபான்மை இனத்துடன் சேற வேண்டும் ஏன் சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்துடன் சேர்ந்து அதன் நன்மதிப்பை பெற்று வாழ முனைய கூடாது

    ReplyDelete
  5. பாசிலின் அவர்களுக்கு என்னுடைய நோக்கம் சிறிலங்காவில் வாழும் சகல மக்களும் சமதனத்தொடும் சகொரத்துவத்தொடும் வாழ வேண்டும் என்பதே நீங்கள் பெரும் பான்மை மக்களோடு சந்தோசமாக வாழ முடியும் என்றால் சந்தோசம் அதே நேரம் பெரும் பாமையினர் உங்களோடு முரண் படும் நேரம் உங்களுக்கு அடுத்த தேர்வை வைத்து கொள்ளுதலே புத்தி சாலி தனம் பழைய கசப்பான விடயங்களை பேசி காழ் புணர்சி உரு வாக்குவதிலேயே உங்கள் கருத்து இருக்கிறது

    ReplyDelete
  6. @ prema,

    இன்று மன்னாரிலும், யாழ்ப்பாண அரச செயலகங்களிலும் நடப்பது என்ன? முடிந்து போன பழைய விடையங்களா? இல்லை பழைய விடயங்களின் தொடரான புதிய வடிவங்களா?

    ஆயாரும், அடைக்கலநாதனும், அநீதிபதியும் பண்ணுகின்ற அக்கிரமங்கள் பழைய விடையங்களா?

    ReplyDelete

Powered by Blogger.