வேற்று கிரக மனிதகளுடன் சண்டை போடாதீர்கள் - நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தகவல்
‘வேற்று கிரக மனிதர்களை(ஏலியன்ஸ்) பார்த்தால் அவர்களுடன் சண்டை போடாதீர்கள்...’ என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான பிரையன் ஷ்மிட் கிண்டலாக கூறியுள்ளார். பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவதை ஆய்வின் மூலம் நிரூபித்ததால் 2011ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றவர் பிரையன் ஷ்மிட். இவர், பெய்ஜிங்கில் நேற்று முன் தினம் நடைபெற்ற சர்வதேச வானவியல் சங்க மாநாட்டில் பங்கேற்றார். அந்த மாநாட்டில் வேற்றுகிரக மனிதர்களை பற்றிய விவாதம் எழுந்தது. அப்போது பிரையன் கிண்டலாக கூறியதாவது,
வேற்றுகிரக மனிதனை எப்போது பார்ப்போம் என்று எல்லோரும் பேசத் தொடங்கி விட்டனர். அப்படியே அந்த மனிதர்களை பார்த்து விட்டால், அவர்களுடன் சண்டை போடாதீர்கள்... அது நமக்குத்தான் நல்லதல்ல. வேற்று கிரகங்களில் உள்ள ஜீவராசிகளை கண்டுபிடித்து, அவற்றுடன் தொடர்பு கொள்வதும், நம் பூமியை பற்றி சொல்வதும் மிக ஆபத்தானது என்று நினைக்கிறேன்.
ஆனாலும், இப்போது நாம் அது பற்றி கவலைபடத் தேவையில்லை. அவை நம்மை விட்டு பல லட்சம் கோடி மைல் தொலைவில் உள்ளன. அவை பூமிக்கு வர இன்னும் பல நூறாண்டுகள் ஆகலாம். அது எப்போது நடக்குமோ அப்போதுதான் நடக்கும். எதிர்காலத்தில் பிரபஞ்சம் இருள் நிறைந்ததாக இருக்கும். இதில் ஏலியன்சை பார்ப்பது சவாலாகாது. அது நடக்காமலும் போகலாம். நம்மை போல ஜீவராசிகள் வேறு கிரகங்களில் இருப்பது மிகமிக அரிதானது. இவ்வாறு பிரையன் கூறினார்.
வேற்று கிரகவாசிகள் பூமிக்கே வந்து விட்டன என்று பல்கேரிய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பல்கேரிய அறிவியல் அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வேற்று கிரகவாசிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவற்றுடன் தொடர்பு கொள்ள பல்வேறு சமிக்ஞைகளை அனுப்பி வருவதாக அவர்கள் சொல்கின்றனர். அந்த அகடமியின் விண்வெளி ஆராய்ச்சி மைய துணை இயக்குநர் லக்கிஸர் பிலிப்போ கூறுகையில், ‘வேற்று கிரகவாசிகளுக்கு பூமியில் தொடர்பு இருக்கிறது.
அவை பூமிக்கே வந்திருக்கலாம். அவற்றுக்கு 30 வகையான கேள்விகளை சில குறியீடுகள் மூலம் கேட்டிருக்கிறோம். பூமியின் பல பகுதிகளில் காணப்பட்ட சுமார் 150 குறியீடுகளை அவை அனுப்பிய பதிலாக கருதுகிறோம். அவர்கள் நம்மீது பகைமை உணர்வை கொண்டவை அல்ல. அவை நமக்கு உதவி செய்ய விரும்புகின்றன. அவற்றுடன் நேரடியாக தொடர்பு கொள்ள இன்னும் 15 ஆண்டுகள் ஆகலாம்’ என்றார்.
தினகரன் (இந்தியா)
Post a Comment