முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள் அமைச்சர்களாக அரசுடன் இணைந்திருந்தாலும்..!
தமிழர் உரிமையை நிலைநிறுத்துவதற்கு அற்புதமான சந்தர்ப்பமொன்றாகக் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ், முஸ்லிம் மக்கள் பயன்படுத்த வேண்டும். இனப்பிரச்சனைக்கான தீர்வின் திறவு கோலாகவும் அது அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசு இன்று மிகப்பெரிய பேரினவாத, மதவாத அடாவடித்தனங்களை இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விட்டுள்ளதுடன், அதற்கான தூண்டுதல்களையும் மேற்கொண்டு வருகின்றது. முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைவர்கள், அமைச்சர்களாக அரசுடன் இணைந்திருந்தாலும் அரசின் இலக்கு தமிழ், முஸ்லிம் ஆகிய சிறுபான்மை சமூகங்கள் மீது ஒரே வகையாகவே உள்ளது.
நாட்டில் இந்து ஆலயங்கள், மத வழிபாட்டு நிலையங்கள் மீது பௌத்த பேரினவாதம் முன்னெடுத்துவரும் அடாவடித்தனங்கள் போன்று, இன்று முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது கைவைக்கும் நிலைக்கு அராஜகம் தாண்டவமாடி வருகின்றது. பௌத்த பிக்குகளே முன்னின்று நடத்தும் இந்த அட்டூழியங்களுக்கு அரசின் ஆசீர்வாதமும் நிறையவே உண்டு.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கெதிராக அவர்களது மத உரிமைகளுக்கெதிராக இடம்பெற்று வரும் பேரினவாத, மதவாத அநியாயங்கள், அட்டூழியங்கள் போல் உலகில் வேறு எங்கும் இடம்பெறவில்லை. தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இந்த நாட்டில் அடையாளமுள்ள சமூகங்களில்லை என்று காட்ட முனையும் அரசின் நடவடிக்கைகள் இன்று உச்சநிலைக்கு வந்துள்ளன. ஆதிக்க வெறியாட்டம் மூலம் நாட்டை பௌத்த சிங்கள ஒற்றையாட்சி நாடாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த ஒற்றையாட்சி ஆதிக்கம் பௌத்த, சிங்கள இனவாதம் மூலம் இலங்கை முழுவதும் சர்வாதிகார முடிசூடா மன்னன் ஆட்சிக்கு இட்டுச் செல்லும் நிலைமை தோன்றியுள்ளது. இதனால்தான் சிறிய மதங்கள், இனங்கள், மனிதஉரிமை, மதஉரிமை, வாழும் உரிமைக்கு எதிராக அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.
வடக்கு, கிழக்கில் தங்களைத் தாங்களே ஆளும் உரிமை பெற்று வாழவேண்டுமென்ற இலட்சிய நோக்கு கொண்ட தமிழ், முஸ்லிம் மக்கள் இந்தப் பெரிய ஆதிக்க சக்திக்கு எதிராக நிற்பதே இலக்கு என்ற ஒன்றுபட்ட நிலையை ஏற்படுத்த வேண்டும். இதனடிப்படையில் சிறிய பிரச்சினைகளைத் தூக்கிப்பிடிப்பதைத் தவிர்த்து நாட்டில் உச்சநிலையிலிருக்கும் நம் இனங்களை, அடையாளங்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட முன்வரவேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த சிறந்த அரசியல் சாணக்கியமிக்கவர். இதனால்தான் இந்தமுறை கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் சேர்ந்து போட்டியிடுவதென முதலில் முடிவுசெய்த போது, முஸ்லிம் மக்களின் அனைத்து தரப்பினரும் அரசுடன் சேர்ந்து போட்டியிட எந்த அடிப்படையுமில்லை என்று கொதித்தெழுந்ததுடன் கூட்டமைப்பை ஆதரிக்கப்போகிறோம் என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.
தமிழர்களுக்கெதிரானவர்களாக எம்மைக் காட்ட முனையக்கூடாது, தமிழர்களுக்கெதிராக அவர்களது அபிலாஷைகளுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படக்கூடாது என்றெல்லாம் குரல் கொடுத்தனர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னரும் முஸ்லிம் மக்கள் அதே உறவோடும், உணர்வோடும், ஒன்றிணைய வேண்டும். இத்தகைய பலம், முஸ்லிம்களும், தமிழர்களும் அதனைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு வந்தால் இனப்பிரச்சினைத் தீர்விலும் சாதகமான சூழ்நிலை கனிந்து வந்துவிடும்; இனப்பிரச்சினைக்கான தீர்வின் திறவு கோலாகவும் அமைந்துவிடும்.
இந்தத் தேர்தலில் அரசு தனது முழுப் பலத்தையும், படைப்பலத்தையும், தன்கூலிப்படைகளையும் பயன்படுத்தி மக்களை இறுதி நேரத்தில் வாக்களிக் செல்லாமல் தடுக்கும் உபாயங்களை கையாளலாம். கிறீஸ்பூதம் போல், கழிவு எண்ணெய்க் கலாசாரம் போல் சேஷ்டைகளும் வரலாம். எனவேதான் நம் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் விழிப்புடன் செயற்பட்டு வாக்களிப்பு வீதத்தைக் கூட்ட வேண்டும். இதற்கான விழிப்பூட்டல்களை வாக்காளர் மத்தியில் முன்னெடுக்கவும் வேண்டும் என்றார்.
ஒன்றிணைந்து தமிழர்களாகிய உங்களுக்கு முஸ்லிம்களின் சொத்துக்களை வளங்களை ஆண்டனுபவித்து ஆட்சி செய்யும் உரிமையை தந்துவிட்டு முஸ்லிம்கள் கொத்தடிமைகளாக உங்களுக்கு சேவகம் புறிய வேண்டும்?
ReplyDeleteFASHLIN முதலில் நல்ல முஸ்லிமாக இருக்க முயட்சி செய்யவும் சமாதானத்தோடு வருகிறவனிடம் சமாதானமாக போகவேண்டும் என்பது நபி பெருமானின் வழி காட்டல் இனக்களுக்குள் முரண்பட அழைப்பு விடப்படவில்லை ஒன்று பட்டு அரசியல் சமுக இருப்பை காப்பாற்றவே கேட்கின்றனர் .என்னை பொறுத்தவரை வடக்கு கிழக்கு இணைவதை விரும்ப வில்லை ஆனாலும் அதில் வாழும் சமூகங்கள் ஒற்றுமையாக சந்தோசமாக வாழ வேண்டும் நாங்கள் இழந்த சந்தோசத்தை எங்கள் பிள்ளைகளும் இழக்க செய்யாதீர்கள் யார் தவறு செய்தலும் தண்டிக்க தவறாமலும் நல்லது செய்பவர்களை பாரட்டவும் இனங்களுக்கு இடையில் நம்பிக்கை இன்மையை ஊட்ட வேண்டாம் எதையும் சட்டப்படி அணுகும் மனநிலை யாவருக்கும் வர வேண்டும்
ReplyDelete