Header Ads



அமெரிக்க, இஸ்ரேல் கோரிக்கையை நிராகரித்த பான் கீ மூன் ஈரான் செல்கிறார்

ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்பை மீறி, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார்.ஈரான் நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குறைகூறி வருகின்றன.
 
இதன் காரணமாக, ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஈரானிலிருந்து, கச்சா எண்ணெய், வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே ஈரான் தலைநகர் டெக்ரானில், வரும், 30 மற்றும் 31ம் தேதிகளில், அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட, 41 நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 21 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இதில் பங்கேற்க உள்ளதாக, ஈரான் தெரிவித்துள்ளது.
 
"ஈரான் தன்னுடைய நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு இந்த மாநாட்டை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. எனவே, ஐ.நா., பொது செயலர் பான் கி மூனும், எகிப்து அதிபர் முகமது முர்சியும் இந்த மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்' அமெரிக்காவும், இஸ்ரேலும் வற்புறுத்தியிருந்தன.
 
ஆனால், இந்த நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகள், மாநாட்டில் பங்கேற்க பான் கி மூன் முடிவு செய்துள்ளார். இந்த தகவலை பான் கி மூனின் தகவல் தொடர்பாளர் மார்டின் நெசிர்க் குறிப்பிடுகையில், "டெக்ரானில், 120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாட்டில் பான் கி மூன் கலந்து கொள்ள உள்ளார். ஈரான் மீது மற்ற நாடுகள் கொண்டுள்ள கருத்து வேறுபாட்டுக்கான காரணம் குறித்தும் அவர் அந்த மாநாட்டில் விளக்க உள்ளார்' என்றார்.

No comments

Powered by Blogger.