Header Ads



முஸ்லிம் சமூகத்தை பதவிக்காக விலை பேசுகின்ற அரசியல் தரகர்கள் குறித்து விழிப்படைய வேண்டும்

அஸ்லம் எஸ்.மௌலானா

இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் இருப்பை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அனைத்து முஸ்லிம் மக்களும் அணிதிரள வேண்டியது மிகவும் அவசியமாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருமான ஏ எம் ஜெமீல் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகான சபைத் தேர்தல் தொடர்பாக சாய்ந்தமருதில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு வேட்பாளர் ஜெமீல் மேலும் பேசுகையில் கூறியதாவது,

"இந்த நாட்டில் அரசியல் அநாதைகளாக இருந்த முஸ்லிம் சமூகத்தினை ஒன்று திரட்டி நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றியது முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமாகும். சிதறிக் கிடந்த முஸ்லிம் மக்களை ஒரு குடையின் கீழ் ஒன்று திரட்டி நாட்டின் அரசியல் அந்தஸ்துள்ள பிரஜைகளாக மாற்றிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையே சாரும். ஆனால் இன்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் தோன்றிய சில புல்லுருவிகள் அரசியல் பதவிக்காக சோரம் போனதால் முஸ்லிம்களின் பேரம் பேசும் அரசியல் பலம் சற்று பலவீனமடைந்துள்ளது.

1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை- இந்திய ஒப்பந்தத்திலும் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதான ஒப்பந்தத்திலும் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்ட சூழ்நிலையில் முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்பட்ட எழுச்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய உறுதியான தலைமைத்துவமும் முஸ்லிம்களையும் பேச்சுவார்த்தையின் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வெண்டும் என்ற கோஷத்துக்கு வலுவூட்டியது.

முஸ்லிம்களை ஒரு இனமாக ஏற்றுக் கொள்ள மறுத்த தமிழ்த் தலைமைகள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் முஸ்லிம்களினதும் தாயகம் என்கின்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டமைக்கு முஸ்லிம்களின் அரசியல் அதிகாரமே அடிப்படையாக அமைந்தது.

12 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டமை, பல உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றிக் கொண்டமை போன்ற காரணங்களினால் முஸ்லிம் சமூகத்தின் உரிமையை தைரியத்துடன் பேசுகின்ற சக்தியாக முஸ்லிம் காங்கிரசை பரிணமிக்க செய்தது.

ஆனால் பின்னர் முஸ்லிம் காங்கிரசுக்குள் இருந்து அதன் வாக்கு வங்கி மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களான சிலர் தாம் அமைச்சராக வேண்டும் என்ற சுயநலப் போக்கினால் பிரிந்து பிரதேச ரீதியாக சிறுசிறு கட்சியை அமைத்துக் கொண்டதால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து ஆட்சியாளர்களிடம் இருந்து நீதியான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை, பள்ளிவாசல்களின் பாதுகாப்பு, மதச் சுதந்திரம் போன்ற விடயங்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் குரல் எழுப்புகின்ற போது, அமைச்சர் அதாவுல்லா போன்றவர்கள் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்து அரசுக்கு நல்ல பிள்ளைகளாக தம்மை இனம் காட்ட முற்படுகின்றனர். இது நமது சமூகத்தின் பாரிய சாபக்கேடாகும்.

ஆனால் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து வருகின்ற போதிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சராக பதவி வகிக்கின்ற போதிலும் கட்சியும் தலைமைத்துவமும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து மிகத் துணிகரமாக உரத்துக் குரல் எழுப்பி வருகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்காகவே இத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் களமிறங்கியுள்ளது. இத்தகைய தீர்மானத்தை மேற்கொண்டு தனித்துப் போட்டியிடும் தைரியமும் பலமும் அமைச்சர்கள் அதாவுல்லா, ரிசாத் போன்றவர்களிடம் கிடையாது.

அதனால் தான் முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிட எடுத்த முடிவை கோமாளித்தனமானது என்று அமைச்சர் அதாவுல்லா குறிப்பிட்டுள்ளார். உண்மையில் முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ், அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணம் என்பது முஸ்லிம் காங்கிரசின் இதயமாகும். இந்நிலையில் கிழக்குத் தேர்தல் தொடர்பாக கட்சியின் கீழ் மட்டத்தில் இருந்து உயர் மட்டம் வரை பரந்துபட்ட ரீதியில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களின் விருப்பம், கட்சியின் பாதுகாப்பு, சமூகத்தின் அபிலாசை என்பவற்றைக் கருத்திற் கொண்டே எமது தலைமைத்துவம் தூரநோக்குடன் மிகவும் சாணக்கியமாக இத்தேர்மானத்தை எடுத்துள்ளது.

ஆனால் இத்தகைய ஒரு தேவைப்பாடு அமைச்சர் அதாவுல்லாவுக்கு கிடையாது என்பது உலகம் அறிந்த விடயம். ஓர் ஊரை மட்டும் மையப்படுத்தி அரசியல் செய்கின்ற அவர் முழுக் கிழக்கு மாகான மக்களின் விருப்பத்தையோ பெயரளவிலான அவரது கட்சியின் பாதுகாப்பு பற்றியோ முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் குறித்தோ சிந்திக்க வேண்டிய தேவை கிடையாது. தவிர அரசாங்கத்தின் தயவில் அரசியல் செய்கின்ற அவரிடம் சமூக ரீதியாக சிந்தித்து தனித்து போட்டியிடுகின்ற துணிச்சலும் கிடையாது.

ஆகையினால்தான் தனது இயலாமை, அரசியல் பலவீனம் போன்றவற்றை மறைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தை விமர்சித்து காலம் கடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் அவர் இருக்கிறார். இதையிட்டு பரிதாபப்படுவதைத் தவிர வேறு எதுவும் எம்மால் செய்ய முடியாது. இந்த விடயத்தில் மக்கள் தெளிவடைய வேண்டும். அமைச்சர் அதாவுல்லா போன்று முஸ்லிம் சமூகத்தை பதவிக்காக விலை பேசுகின்ற அரசியல் தரகர்களின் தேர்தல் கால நடவடிக்கைகள் குறித்து வாக்காளர்கள் விழிப்படைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்" என்று கூறினார்.

2 comments:

  1. why do u criticise only athavulla why do not you critcise your uncle Nijamueen?

    ReplyDelete
  2. சகோதரரே, பேரம் பேசும் அரசியல் செய்தால் மு.கா. வுக்குள் ஏற்பட்ட பிளவுகள் தவிர்க்க முடியாததே. ஏனெனில் பேரம் பேசுபவர்களை அதிகார வர்க்கத்தினர் எப்போதும் பலயீனப்படுத்தவே தருணம் பார்த்திருப்பர். அதற்கு நமது அதாஉல்லா மற்றும் உள்ளவர்களைப் போன்றவர்கள் பலியாகி சமூகத்தின் பலத்தைச் சிதறடித்துவிடுவர். இது மிக ஆபாத்தானது.
    நமக்கு இன்று தேவை பேரம் பேசும் அரசியலோ அல்லது அதாஉல்லா போன்றவர்களின் இலாபமீட்டும் அரசியலோ அல்ல. மாறாக பங்களிப்புச் செய்யும் அரசியலே. நமது அரசியல் மூதாதைகளான டி.பி. ஜாயா, சேர் றாஸீக் பரீத் போன்றவர்கள் இதனை நமக்குச் செய்து காட்டினர்.
    பங்களிப்புச் செய்யும் அரசியலின் மூலம் இந்த நாட்டின் குடிமக்கள் நாங்கள் என்ற வகையில் முழுத் தேசத்தினதும் அபிமானிகளாக நமது கடமையைச் செய்வதன் மூலம் நமது சமூகத்தின் பாதுகாப்பை உயர் மட்டத்திலிருந்து செயற்படுத்துவதுடன் இனவாதிகளின் குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிக்க வேண்டும்.
    இதன் மூலம் நாட்டுக்கும், ஏனய சமூகங்களுக்கும் முன்மாதிரியான அரசியல் கலாச்சாரத்தை நாம் ஏற்படுத்திக் காட்ட வேண்டும்.

    அது சரி தம்பி ஜெமீல் நீங்கள் ஷீஆக்களின் அபிமானியாகி அவர்களின் கொள்கையை கிழக்கில் பதிப்பதற்காக அவர்களது தரகராகக் களமிறங்கியுள்ளீர்கள் என்று பரவலாகப் பேசப்படுகின்றதே! மக்கள் விழித்துக் கொண்டு வெகுநாளாகிவிட்டது என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.