புலிகளின் கொலைப்பட்டியலில் எனது பெயர் இருந்தது - அமைச்சர் றிசாத்
எம்.பிஸ்ரின் + இர்ஷாத் றஹ்மத்துல்லா
விடுதலைப் புலிகள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செய்த அநியாயத்துக்கு எதிராக நான் பேசியதால் .புலிகளின் முன்னுரிமை கொலைப்பட்டியலில் எனது பெயர் உள்வாங்கப்பட்டிருந்தது. இவ்வாறு அவர்கள் எடுத்த முயற்சிகள் அல்லாஹ்வின் துணையால் சிதறிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் தமது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிண்ணியா நகர சபை மைதானத்தில் இடம் பெற்றது. கிண்ணியா நகர முதல்வரும்,வேட்பாளருமான டாக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில்,
எமது சமூகத்தின் தலைமை என்று கூறிக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் அவர்கள் இந்த முஸ்லிம்களை காட்டிக் கொடுத்து செய்யும் அரசியலுக்காக அன்று மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை ஆரம்பிக்கவில்லை. ஆனால் இன்று என்ன நடக்கின்றது நாளுக்கு நாள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி மக்களை பிழையாக வழி நடத்தி தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ள அரங்கேற்றப்படும் சதிகள் ஏராளம். இதற்கு திருமலை மாவட்ட முஸ்லிம்கள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காக இரவு பகலாக நாம் மக்களை தெளிவுபடுத்திவருகின்றோம்.
இந்த தேர்தல் என்பது மிகவும் முக்கியமான தொன்று. திருமலை மாவட்ட மக்கள் இதனை தீர்மானிக்க தவறும் போது, அந்நியச் சமூகம் உங்களை அடக்கியாளும் கடிவாளத்தை நீங்களே உங்களுக்கு இட்டவர்களாகவே மாறும் அவல நிலையேற்பட்டுவிடும். அதிலிருந்து நாம் மீளுவதற்கு எமது ஆயுதமாக எமது வாக்கினை பயன்படுத்துவோம். இன்று தமிழ் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ள பயங்கரமான அறிவிப்பு குறித்து பேசா மடந்தைகளாக இருந்துவிட முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ்-தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்து ஆட்சி அமைக்கும் போது, பிரிந்து நிற்கின்ற வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படும் என கூறியுள்ளார். அய்யா சம்பந்தன் அவர்கள் ஆதரவு வழங்கிய புலிகள் இயக்கம் தான் வடக்கில் முஸ்லிம்களை துரத்தினார்கள். மூதுரில் ஹபீப் மஹம்மத் அவர்களைம், மன்னாரில் அரசாங்க அதிபராக இருந்த மக்பூல் அவர்களையும் கொண்றனர். அதே வேளை முஸ்லிம் என்ற காரணத்தாலும், முஸ்லிம் சமூகம், நாடு பிளவுபடக் கூடாது என்று செயற்பட்டதாலும் தான் மூதுரிலிருந்து முஸ்லிம்கள் புலிகளால் விரட்டப்பட்டனர்.
காத்தான்குடியில் சுஜூது செய்த எமது சகோதரர்கள் சுட்டும்,வெட்டியும் கொல்லப்பட்டனர். அழிஞ்சுப் பொத்தானையில் வதைக்க வதைக்க முஸ்லிம்கள் கொல்லப்பட்னர். இது போன்ற எத்தனை அநியாயங்களை அவர்கள் செய்தார்கள்.முஸ்லிம்களின் புனிதப் பள்ளிவாசல்கள் புலிகளால் துவம்சம் செய்யப்பட்டதுடன், நீர்தடாகங்களாக மாறியது அது யாருடைய காலத்தில் என்பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.
இன்று தம்புள்ள பள்ளிவாசல் குறித்து ரவூப் ஹக்கீம் அவர்கள் பேசிவருகின்றார். தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் குறித்து மக்கள் உண்மையினை அறிந்து கொண்டார்கள். இந்த நாட்டின் தலைவர் ஜனாதிபதி அவர்கள் தெளிவாக முஸ்லிம்களின் மத உரிமைகள் பேனப்படும் என்பதை கூறியுள்ளார். தம்புள்ள பள்ளிவாசலில் இன்றும் தொழுகை நடக்கின்றது, தராவிஹ் கூட இடம் பெற்றது.ஒரு சில பெரும்பான்மை கடும் போக்காளர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களது தனிப்பட்ட லாபங்களுக்கும்,அரசியலுக்காகவும் செயற்படுவதை வைத்துக் கொண்டு நாம் முழு பெரும்பான்மை சமூகத்தையும் துரோகிகளாக பார்க்க முடியாது.
தம்புள்ள சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தம்புள்ள ரன்கிரி விகாரைக்கு சென்று விகாரதிபதியுடன் தெளிவான செய்தியினை சொல்லிவிட்டு வந்துள்ளார். ஜெனிவாவில் எமது நாட்டுக்கு எதிராக புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்கமைய கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யும் பணிக்காக உலக முஸ்லிம் நாடுகள் வழங்கிய ஆதரவை மறந்து செயற்பட முடியாது.இலங்கையில் உள்ள அதிகப்படியான முஸ்லிம்கள் எமது நாட்டுக்காக இறை பிரார்த்தனைகளை செய்தார்கள்,பள்ளிவாசல்களுக்கு முன்பாக ஆரப்பாட்டங்களை செய்தார்கள்,இந்த ஒத்துழைப்பினாலும் தான் இன்று எமது நாடு பாதுகாக்கப்பட்டுள்ளது.அதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.அதனால் முஸ்லிம்களின் மதக் கடமைகளுக்கு தடைகளை போடும் வேலைகளை செய்ய வேண்டாம் என்று கேட்டுள்ளார்.இது தான் நடந்துள்ள விடயம்.ஆனால் துரதிஷ்ட வசம் இந்த விடயத்தை திரிவுபடுத்தி ரவூப் ஹக்கீம் அவர்கள் மேடைகளிலே, இன்னும் தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தை வைத்து வாக்கு சேகரிக்கும் வேலையினை செய்கின்றார்.
கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.அவர் ஜனாதிபதியாக வந்தால் பள்ளிகளில் பாங்கோசைக் கேட்காது என்ற வதந்திகளை கூறி அரசுக்கு எதிராக எதிர் கட்சி அரசியல் செய்துவிட்டு, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அமைத்ததும்,வலிந்து வந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு, மீண்டும் அவருக்கு எதிராக பேசிக் கொண்டு ,அதே அரசாங்கத்தில் இருந்து கொண்டு போலி பிரசாரங்களை செய்யும் அசிங்கமான அரசியல் கலாசாலரத்துக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை சென்றுள்ளது.அன்று தலைவர் அஷ்ரப் அவர்கள் உரிமை அரசியலையும்,சலுகை அரசியலையும் செய்தார்,ஆட்சியினை தீர்மாணிக்கும் பலமிக்க கட்சியாக முஸ்லிம் காங்கிரஸை பயன்படுத்தினார்.முஸ்லிம்களின் உரிமைகளை பெறுவதில் கடும் போக்குடன் செயற்பட்டார்.சலுகைகள் கிடைக்கும் போதெல்லாம் அதனை சமூகத்திற்காக பெற்றுக் கொடுத்தார்.இன்று உரிமையுமில்லை,சலுகையுமில்லை,என்ற நிலையில் முஸ்லிம்களை அழித்து அவர்களது ஜனாஸாக்களின் மீது அரசியல் செய்யும் அணியுடன் சரணாகதி அரசியல் பிழைப்பு நடத்தும் அளவுக்கு ரவூப் ஹக்கீம் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை கொண்டுசென்றுள்ளார்.
இந்த நாட்டின் அரசாங்கம் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்ததென்பதை யாவரும் நன்கறிவர்.அப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு எவரும் முட்டுக் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்பதை கடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்கள் நிரூபித்துக் கட்டியுள்ளனர்.இந்த நிலையில் அந்த அரசாங்கத்தில் இருந்து கொண்டு தான்“ எமது மக்களது பாதுகாப்பு,இருப்பு.உத்தரவாதங்கள் என்பனவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.அதனை மறந்து செயற்பட முடியாது.திருமலை மாவட்ட மக்களுக்கு சரியான அரசியல் தலைமைத்துவங்கள் இருந்திருந்தால் இன்னும் எத்தனையா விடயங்களை சாதித்து காட்டியிருக்க முடியும்.இனியும் ஏமாந்த சமூகமாக எமது மக்கள் இருக்க முடியாது.அரசியல் மாற்றம் ஒன்று வர வேண்டும்,அதற்கான சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் தான்,கிண்ணயா பாரிய அபிவிருத்திகளை கண்டுள்ளது.இன்னும் எத்தனையோ திட்டங்கள் நடை முறையில் உள்ளன.இவைகளெல்லாம் எமக்கு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு,ஏமாற்று அரசியல்வாதிகளின் பின்னால் செல்லப் போகின்றீர்களா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,அதற்கு எதிராக திருமலை மாவட்ட மக்கள் இருக்கின்றார்கள் என்ற செய்தியினை கொண்டு சென்று தமது அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ள போலிகளை பரப்பும் அணியின் சதி வலையில் நீங்கள் விழுந்துவிடாதீர்கள்.எமது அணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உங்களது வாக்குகளை பெற்றுக் கொடுப்பதன் மூலம்.நாட்டுக்கும்,சர்வதேசத்திற்கும் இலங்கை முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்கும் ஒரு வாய்ப்பு இது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
வடக்கில் வாழும் மக்களின் உரிமைகளுக்காக ,தேவைகளுக்காக நான் குரல் கொடுக்கும் போது,எனது குரல் வலையினை நசுக்கி என்னை அழித்துவிடுவதற்கு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றது.என்மீது அபாண்டங்களை சமத்தி எனது அரசியல் செயற்பாட்டுக்கு முடிச்சுப் போட நினைத்த சக்திகளின் சதிகளை அல்லாஹ் தவிடு பொடியாக்கியுள்ளதுடன்,எமது முஸ்லிம சமூகத்தின் விமோசனத்திற்கான செயற்பாட்டை ஒன்று பட்டு முன்னெடுப்பதற்கான சக்தியினை மேலும் விரிவுபடுத்தியுள்ளான்.புகழ் அனைத்தும் அல்லாவுக்கே.என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,தொழிலதிபரும்,வேட்பாளருமான அப்துல் ரஸ்ஸாக் (நளீமி),உட்பட பலரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment