Header Ads



மூடுமந்திரமாகவுள்ள ராஜகிரிய பள்ளிவாசல் நிகழ்வுகளில் வெளிப்படைத் தன்மை தேவை

சவ்வத்
 
மஸ்ஜிதுல்   தாருல்  ஈமான்  தொடர்பில்  உறுதியில்லாத   செய்திகள் மீண்டுமொரு  தடவை  வெளிவந்துள்ளன.  'ராஜகிரிய    பள்ளிவாசல் விவகாரத்திற்குத்  தீர்வு  எப்போது?' என்ற தலைப்பில் எம்.ஆர்.ஏ.பரீல் எழுதியுள்ள ஆக்கத்தின் படி  குறிப்பிட்ட  பகுதியைச்  சேர்ந்த மஸ்யாத் என்பவர்  தொழுகை   நடைபெறுவதில்லை   என்று  தெரிவிக்கின்றார். எனினும்  மஸ்ஜித் நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் (பெயர்?) தொழுகை நடைபெறுவதாக  தெரிவிக்கின்றார்.   முஸ்லிம்   சமய     கலாச்சார திணைக்களப்  பணிப்பாளர்  நவவி  நோன்புப் பெருநாளுடன் தொழுகை நிறுத்தப்  பட்டு விட்டதாக  தெரிவிக்கின்றார். இதில் எதனை நம்புவது?

மேற்படி  பெயரில்  ஒரு பள்ளிவசலே கிரீடா  மாவத்தையில்  இல்லை என   சில   வாரங்களுக்கு   முன்னர்    'இலங்கை  ஊடகவியலாளர் சங்கத்தின்'  உப  பொருளாளர்,  பத்திரிகையாளர்  தாஹா முஸம்மில் எழுத,  அதனைத்  தொடர்ந்து  சர்ச்சை  ஏற்பட்டு,  பின்னர்   மேற்படி மஸ்ஜித் பதிவு செய்யப் படதற்கான ஆதாரங்கள் வழங்கப் பட, சர்ச்சை முடிவுக்கு வந்தது.

மேற்படி  மஸ்ஜித் தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும் தெளிவற்ற, வெளிப்படையற்ற  தன்மை  நிலவுவதனை  அவதானிக்க முடிகின்றது.

அந்நிய மத அரசியல்வாதி  ஒருவரை  மஸ்ஜிதில் இப்தார் (?)  நடாத்த அனுமதித்ததைத் தொடர்ந்தே சர்ச்சைகள் ஆரம்பமாகின. இப்தார் எனும் இபாதத்தை, பள்ளிவாசலில் வைத்து, அல்லாஹ்வை ஈமான் கொள்ளாத ஒருவர் ஏற்பாடு செய்ய அனுமதித்ததே முதல் தவறு.

அதனை அடுத்து பெளத்த துறவிகளின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மஸ்ஜித்தை மூடிய நிர்வாகிகள், விடயத்தை ஜமியத்துல் உலமாவிடமோ, முஸ்லிம் அரசியல் தலைமைகளிடமோ கொண்டு செல்வதை விடுத்து, பிரதேச பெளத்த தலைமை மதகுருவிடம் கொண்டு சென்றமையும், அவரின் வார்த்தைகளை நம்பி பள்ளிவாசலை மூடிவிட்டு, பின்னர் அவர் இடையில் இவர்களைக் கைவிட்டு விட்டு நழுவிக் கொள்ளவே, பள்ளிவாசலை மீண்டும் திறக்க முடியாமல் திண்டாடிய நிலையில், யாழ்.முஸ்லிம் உட்பட சில முஸ்லிம் ஊடகங்களின் முனைப்பினால், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். தாஸீம், போலிஸ் பாதுகாப்புடன் தொழுகையை மூன்று நாட்களின் பின்னர் ஆரம்பித்து வைத்தார்.
 
இந்நிலையில் போலீசார், தம்மால் நோன்பு காலத்திற்கு மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என்றும், அதன் பின்னர் தொழுகையை தொடருவதாக இருந்தால், உரிய ஆவணங்களைப் சமர்ப்பித்து சட்டபூர்வ அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்னர் தொழுகையைத் தொடரும் படியும் கேட்டிருந்தனர். இது தொடர்பான செய்தி யாழ்.முஸ்லிமிலும் வெளியாகி இருந்தது.
 
ரமளானுக்குப் பின்னரும் தொழுகையைத் தொடர்வதற்கான வழிமுறை குறித்து போலீசார் குறிப்பிட்டிருந்த நிலையில், சட்டரீதியான அனுமதியைப் பெறுவதில் மேற்படி பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களில் எவ்வித செய்திகளையும் காண முடியவில்லை.

அந்நிய மத அரசியல் வாதிக்கு இப்தார் நடாத்த அனுமதி வழங்கியதனை தொடர்ந்து பிரச்சினை ஆரம்பித்த நேரத்தில், உரிய முறைப்படி, அகில இலங்கை ஜமியத்துல் உலமாவையும், முஸ்லிம் தலைமைகளையும் தொடர்பு கொள்ளாமல், பிரதேச பெளத்த தலைமை மதகுருவிடம் சரணாகதி அடைந்து, மூன்று நாட்கள் பள்ளிவாசல் மூடப்படும் நிலைக்கு காரணமாக இருந்த நிர்வாக சபையினரின் தற்போதைய முன்னெடுப்புகள் என்ன என்ற கேள்வி எழுவது நியாயமானதே. மேற்படி மஸ்ஜித் மூடப்பட்ட விவகாரத்தில், அதனை மீண்டும் திறப்பது தொடர்பில், தனது அரசியல் நலன்களுக்காக இப்தாரை ஏற்பாடு செய்த மேற்படி பிரதேச அரசியல் வாதியின் ஒத்துழைப்பும், ஆதரவும் எந்த அளவுக்கு இருந்தது என்பதும் கேள்விக்குறியே!
 
குறிப்பிட்ட பிரதேசத்தில் வசிக்கும் சாதாரண நபருக்கே 'மஸ்யாத்' என்று பெயர் குறிப்பிடப்படும் பொழுது, மஸ்ஜித் நிர்வாகத்தில் உள்ள ஒருவருக்கு பெயரோ, நிர்வாக நிலைப் பதவியோ இல்லாமல் போவது ஏன் என்று புரியவில்லை.

மஸ்ஜிதுல் தாருல் ஈமானின் நிர்வாகம் மேற்படி சர்ச்சைக்குரிய நிகழ்வுகளில் தொடக்கத்தில் இருந்தே, தெரிந்தோ, தெரியாமலோ, தவறான அணுகுமுறைகளையும், முடிவுகளையும் மேற்கொண்டுள்ளதாகவே உணர முடிகின்றது. இது இவ்வாறிருக்க, உரிய ஆவணங்களைப் சமர்ப்பித்து சட்டபூர்வ அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்னர் தொழுகையைத் தொடரும் படியான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மஸ்ஜித் நிர்வாகம் தற்போதைய நடவடிக்கைகளையும், தொடர்ந்தும் மூடு மந்திரமாகவே வைத்திருக்காமல், முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் சமூகமும்  அறிந்து கொள்ளும் படியாக மேற்கொள்வதே சரியாகும். இது குறித்து முஸ்லிம் இணைய, அச்சு ஊடகங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதே எதிர்பார்க்கப் படுகின்றது.

No comments

Powered by Blogger.