Header Ads



பொலன்னறுவை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை குறித்து ஆராய்வு

மர்லின் மரிக்கார்

அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தினுள் பொலன்னறுவை தொகுதியிலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்று உடனடியாக உள்ளடக்கப்படவிருக்கின்றது. இத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் சேர்க்கப்படும் என்று கல்வி பிரதி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா கதுருவெலவில் தெரிவித்தார்.
 
பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் கல்விப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஏற் பாடு செய்திருந்த விசேட சந்திப்பொன்றிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.
 
பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அஹ்மத்தின் கதுருவெல, முஸ்லிம் கொலணி இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்திற்கு பொலன்னறுவை மாவட்டத் திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், கல்விப் பணிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இச்சமயம் பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் கல்விப் பிரச்சினைகளை அதிபர்கள் பிரதியமைச்சரின் கவனத்திற்கு விரிவாக எடுத்து கூறினர்.
 
இந்த சந்தர்ப்பத்திலேயே பிரதியமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா “ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தினுள் பொலன்னறுவை தொகுதிக் கென பொலன்னறுவை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் உடனடியாக உள் ளடக்கப்படும்.
 
அதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுகின்றேன். இத னூடாக இப்பாடசாலையில் நிலவும் சகல குறைபாடுகளும் நிவர்த்திக்கப்படும். குறிப்பாக மஹிந்தோதய விஞ்ஞான தொழில் நுட்ப கூடமும் பெற்றுத் தரப்படும்.
 
பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் எமது சுகாதார அமைச்சர் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இந்த அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றேன். இத்திட்டத்தின் கீழ் பொலன்னறுவை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பெற்றோரை எதிர்வரும் 30 ஆம் திகதி சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறும் கல்விப் பணிப்பாளர்களுக்கும், அதிபர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கினார்.
 
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எம். பெளஸான் உரையாற்றுகையில், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறி சேனவுடன் இணைந்து இப்பிரதேச மேம்பாட்டுக்காக கடந்த 10 - 12 வருடங் களாக உழைத்து வருகின்றேன். அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை மூலம் பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகாலமாக நிலவிய மிக முக்கிய பிரச்சினை தீர்த்து வைக்கப்படுகின்றது.
 
அதேநேரம் இம் மாவட்ட முஸ்லிம்களின் மேம்பாட்டுக்காக அமைச்சர் மேற்கொண்டு வரும் வேலைத் திட்டங்களை எல்லோருமே அறிவீர்கள். ஆகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலில் பொலன்னறுவை மாவட்டத்தை துரிதமாக மேம்படுத்த அயராது உழைத்து வரும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் கரங்களைப்பலப்படுத்துவது முஸ்லிம்களின் பொறுப்பு என்றார்.

No comments

Powered by Blogger.