Header Ads



அஷ்ரப்பின் விருப்பதை மஹிந்த மூலம் செய்து முடித்தோம் - அமைச்சர் அதாவுல்லா பெருமிதம்

அரசுக்கு எதிராக முஸ்லிம்களை திசைதிருப்புவதற்கான ரணிலின் கபட நாடகமே பள்ளிவாசல்கள் மீதான வன்முறைச் சம்பவங்களாகும். இதனை சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்தி தனது வங்குரோத்து அரசியலை மூடிமறைக்க ஹக்கீம் முயற்சிப்பதாக தேசிய காங்கிரஸின் தலைவரும், உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லா தெரிவித்தார்.
 
தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நிந்தவூர் மீராநகரில் இடம்பெற்ற பிரசாரக் கூட் டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நள்ளிரவையும் தாண்டி நடை பெற்ற இக் கூட்டத்தில் அமைச்சர் ஏ.எல். எம். அதாஉல்லா மேலும் உரையாற்றுகையில்,
 
எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண்டும் கைப்பற்றும். வடக்கையும், கிழக்கையும் பிரித்து, பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பெருந்தலைவர் அஷ்ரப் விரும்பினார். அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொண்டு செய்து முடித்தோம். இதனை பொறுத்துக்கொள்ள முடியாது, சரத் பொன்சேகாவை கொண்டு வந்து அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் போடுமாறு கேட்டவர்தான் ஹக்கீம்.
 
அவருக்கு இந்த சமூகத்தைப் பற்றி அக்கறை கிடையாது. இரண்டு எம்.பி.க்களை கொண்டிருந்தும் நிந்தவூர் கிராமம் எந்த விதமான அபிவிருத்தியையும் அவர்களால் அடைந்து கொள்ளவில்லையென்றால், தமக்குக் கிடைத்த அரசியல் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த தெரியாதவர்கள் என்றே கூற வேண்டும். பெருந் தலைவர் அஷ்ரஃபினால் ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூரின் கலாசார மண்டபத்தை கட்டி முடிப்பதற்கு நான் வந்தபோது அதற்கு தடையாக இருந்தவர் சகோதரர் ஹசன்அலி.
 
நிந்தவூரின் அபிவித்திக்கு தடையாக இருந்த இவர்களுக்குப் பின்னால் நிந்தவூர் மக்கள் இன்னும் செல்வதா? கடந்த 12 வருட காலமாக மக்களின் ஆணையை வைத்துக் கொண்டு இவர்கள் எதனைச் செய்தார்கள் என்று சிந்திக்க வேண்டும். கிடைத்துள்ள அரசியல் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு மு.கா. இன்றுள்ளது.
 
30 வருடகாலம் ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழர்கள், ஜெனீவாவில் பிரேரணையை கொண்டு வந்து சர்வதேசத்தை திசை திருப்பிய போதும் இன்னும் ஒரு அங்குல நிலம் கூட இவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் முஸ்லிம் மக்களின் உணர்வுகளை தூண்டி, அவர்களை பலிக்கடாவாக்குவதன் மூலம், அதில் குளிர்காய முயற்சிக்கின்றார்கள். முஸ்லிம் மக்களை அரசுக்கு எதிராக திசைதிருப்பி ஆட்சியை கைப்பற்றுவதற்கான ரணிலின் கபடநாடகமே பள்ளிவாசல்கள் மீதான வன்முறைச் சம்பவங்களாகும். இதனை சாதகமாக பயன்படுத்தி அரசின் மீது பழியை போட்டு, சரிந்து போயுள்ள தனது வாக்கு வங்கியை சீர்செய்ய ஹக்கீம் முயற்சிக்கிறார் எனக் கூறினார்.

3 comments:

  1. பெருந்தலைவர் அஷ்ரப் ஆரம்பித்த கலாசார மண்டபத்தை நீங்கள் முடித்து வைத்துவிட்டு ”அஷ்ரப் ஞாபகார்த்த அதாஉல்லா அரங்கு” என பெயர் வைத்துவிடுவீர்களே! அதனால்தான் ஹசனலி அதற்குத் தடை போட்டார். அதனைத்தானே பொத்துவிலில் செய்தீர்கள்.

    அது சரி பெருந்தலைவர் அஷ்ரபை கௌரவிக்க உங்கள் ஊரில் என்ன செய்திருக்கின்றீர்கள்?

    நிந்தவுர் மக்கள் தன்மானம் உள்ளவர்கள், அதனால்தான் ”எவன் பொண்டி எவன் கூடப் போனாலும் இலவைக்கு இரண்டு பணம்” எனும் உங்களுடைய இலாபமீட்டும் அரசியலைச் செய்ய அவர்கள் முன்வரவில்லை.

    நிந்தவுருக்கு கல்யாண மண்டபம் கட்டுகின்ற கதையை விட்டுவிட்டு உங்கள் ஊரில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நுரைச்சோலையில் சஊதியின்னால் கட்டித் தரப்பட்ட குடியிருப்பு வீடுகளை உண்மையிலேயே சுனாமியினால் பதிக்கப்பட்ட கிழக்குக்க கரையோர மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வழியைப் பாருங்கள். யாரை சார் ஏமாற்றப் பார்க்கின்றீகள்?

    மக்கள் சுவரைப் பாதுகாக்கும் தேவையில் இருக்கின்றார்கள், நீங்களோ அதில் சித்திரம் வரைவததைப்பற்றி பேசித் திரிகின்றீர்கள்.

    சித்திரம் வரைந்தால்தானே ”பெயின்ற்” வாங்குவதற்கு கொந்தறாத்துக் கொடுக்கலாம் ”பில்” முடிக்கலாம்.

    ReplyDelete
  2. நீங்க தலைவர் மர்ஹூம் அஸ்ரfப் Sir இன் ஆசையை பற்றி பேசுறீன்களே! நல்லாவா இருக்கு?அதை விடவும் ஹகீம் Sir வாக்கு வங்கியை சீர் செய்ய நினைப்பது நல்லது தானே!

    ReplyDelete
  3. பள்ளிவாசல்களுக்கு எதிராகா நடக்கும் வன்முறையை தடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள் அதை விட்டு விட்டு வாக்கு வங்கியை நிரப்பு வதற்காக பொய்சொல்லி கபட நாடகம் ஆடதீர் அமைச்சரே இனிமேலும் உங்களது பொய்யை கேட்பதற்கு மக்கள் ஒன்னும் சின்னப்பிள்ளைகள் இல்லை வெளங்கிச்ச சொன்னது

    ReplyDelete

Powered by Blogger.