லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழக உரிமம் ரத்து - இலங்கை மாணவர்கள் பாதிப்பு
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் விசா பெறத் தேவையான பரிந்துரை வழங்கும் உரிமத்தை லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திடம் இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லைக் காட்டுப்பாட்டு ஆணையம்(யூகேபிஏ) பறித்துள்ளது.
இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளில் ஆறு மாதங்கள் முன்பு கண்டறியப்பட்ட பாரதூரமான குறைபாடுகளை களைய பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ ஒரு சிறப்பு செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேறு பல்கலைக்கழகங்களில் சேர அவர்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
சில தனியார் கல்லூரிகள் மீது முன்பு இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் – ஒரு பெரிய பல்கலைக்கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை. முறையான விசா முடிந்தோர் அந்தப் பல்கலைக்கழகத்தில் படிப்பதும், போதுமான ஆங்கிலப் புலமை இல்லாதவர்கள் படிப்பதும், பல்கலைக்கழக மாணவர்களாக இருப்பவர்கள் வகுப்புக்கு ஒழுங்காக வர வேண்டும் – முழு நேர வேலைக்கு போகக் கூடாது என்ற விதி மீறப்படுவதும் இந்த நடவடிக்கை எடுக்கக் காரணம் என்று ஐக்கிய ராஜ்ஜியத்தின் குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மாணவர்கள்ஐக்கிய ராஜ்ஜியத்தில் பல்கலைக்கழகங்களுக்கு அரசால் வழங்கப்படும் நிதி பெருமளவு குறைக்கப்படுவதால் பல பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க முனைப்பு காட்டுகின்றன.
இதற்கு உள்நாட்டு மாணவர்களை விட வெளிநாட்டு மாணவர்கள் கூடுதலான கட்டணத்தை செலுத்த வேண்டும்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் கடந்த 2010 – 2011 ஆண்டில் பட்டப்படிப்பில் 48,580 வெளிநாட்டு மாணவர்களும் 79,805 வெளிநாட்டவரும் இருந்தனர். அதாவது பட்டப் படிப்பு படிப்பவர்களில் 11 சதவீதத்தினர் வெளிநாட்டவர். அவர்கள் செலுத்தும் கல்விக் கட்டணம் பல்கலைக்கழகங்களின் கட்டண வருவாயில் மூன்றில் ஒரு பங்காக இருக்கிறது.
வெளிநாட்டு மாணவர்கள் கல்விக் கட்டணம் மற்றும் பிற செலவினங்கள் காரணமாக ஐக்கிய ராஜ்ஜியத்தின் பொருளாதாரத்துக்கு 5 பில்லியன் பவுண்டுகள் கிடைக்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரித்தால் வரும் 2025 ஆண் ஆண்டு வாக்கில் இத்தொகை 17 பில்லியன் டாலர்கள் என்ற அளவுக்கு உயரும் என்று பல்கலைக்கழகங்கள் கூறுகின்றன.
ஆனால் அரசாங்கம் எடுக்கும் கடும் நடவடிக்கைகள் காரணமாக படிக்க வேண்டும் என்ற உண்மையான விரும்பம் கொண்ட மாணவர்கள் கூட ஐக்கிய ராஜ்ஜியத்தை தவிர்க்கக்கூடும் என்ற கருத்தை தேசிய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தேசிய மாணவர் சங்கத்தின் தலைவர் லியம் பர்ன்ஸ் கோரியுள்ளார்.
மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்தில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். அரசின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்து தாம் ஆலோசித்து வருவதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மால்கம் கில்லிஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment