Header Ads



கிழக்குத் தேர்தல்: மு.கா.வின் முன்னுள்ள இன்னுமொரு கண்டம்..!

தம்பி

கிழக்குத் தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிடுவதென்பது அந்தக் கட்சியின் தீர்மானமல்ல. தேர்வாகும்! ஆசனப் பங்கீடு தொடர்பில் மு.கா. கேட்டதை ஆளும் கட்சியினர் கொடுத்திருந்தால் மு.கா.வையும் வெற்றிலைச் சின்னத்தில்தான் நாம் கண்டிருக்க முடியும். அரசாங்கத்தோடு பிணங்கிக் கொண்டு கிழக்குத் தேர்தலில் மு.கா. போட்டியிடுவதற்கு 'கொள்கை' எனும் விடயம் காரணமல்ல. அப்படிச் சொல்வதானது மு.காங்கிரசின் கொள்கை என்பது - வேட்பாளர் ஆசனப் பங்கீட்டு எண்ணிக்கையின் பின்னால் ஒளிந்திருக்கிறது என்றாகிவிடும்!

ஆனாலும், 'கொள்கை' மீது கொண்ட பிடிப்புக்காகவே தாம் வெற்றிலைக் கூட்டணியில் சேராமல் தனித்துப் போட்டியிடுவதாக – மு.கா.வின் உயர் தலைவர்கள் கூறிவருகின்றனர். அப்படிக் கூறுவது பொய் அல்லது அரசியல் ஆகும். பொய்க்கும் அரசியலுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியானது மிக நுண்ணியது!

கிழக்குத் தேர்தலில் மு.கா. தனித்துப் போட்டியிடுவது கொள்கைக்காக இல்லை என்றாலும் கூட, அந்த முடிவில் ஒருவகைத் தன்மானம் இருப்பதை அவதானிக்க முடிகிறது. 'எதைத் தந்தாலும் உன்னோடுதான் இருப்பேன்' என்பது ஒருவகை அரசியல். 'இதைத் தந்தால்தான் உன்னோடு சேர்ந்திருப்பேன்' என்பது இன்னொரு வகையான அரசியலாகும். முதலாவதுக்குப் பெயர் சரணாகதி அரசியல், இரண்டாவதின் பெயர் இணக்க அரசியல்!

சரணாகதி அரசியலில் தன்மானம் இருக்காது. சரணாகதி அரசியல் செய்கின்றவர்களால், அரசாங்கத்தோடு இப்படியெல்லாம் தேவைப்பட்ட போது பிணங்கிக் கொண்டு வெளியேற முடியாது!

மு.காங்கிரஸ் என்பது - முஸ்லிம் மக்களின் மனச்சாட்சி என்கிறார் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம். கிழக்குத் தேர்தலில் மு.காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் அதிகபட்ச முஸ்லிம் மக்களின் மனநிலையாகவும் இருந்தது. ஏதோவொரு வகையில் மக்களின் அந்த மனநிலையோடு மு.காங்கிரசின் அரசியல் இப்போதைக்கு ஒத்துப் போயிருக்கிறது.

கிழக்குத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே மு.கா. தலைவரின் விருப்பமாக அமைந்திருந்ததை அவரின் பல்வேறுபட்ட உரைகள் உணர்த்தியிருந்தன. அந்த விருப்பத்தினை நேரடியாக நிறைவேற்றியிருந்தால் மு.காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலரை அரசுக்குப் பலி கொடுத்திருக்க நேர்ந்திருக்கும். அதனால், மிகத் தந்திரமாக இந்த விடயத்தில் மு.கா. தலைவர் தனது காய்களை நகர்த்தி - தனது விருப்பத்தினை அடைந்திருக்கின்றார் என்பது சிலரின் பார்வையாகும்.

கிழக்குத் தேர்தலில் எந்தக் கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. கூட்டாட்சிதான் சாத்தியமாக வரும் என்பது ஏராளமானோரின் அனுமானமாக இருக்கிறது. அவ்வாறானதொரு நிலையில், தமது கட்சி - அரசுக்கு ஆதரவு வழங்கும் என்று மு.காங்கிரசின் மூத்த தலைவர்கள் இப்போதே பேசத் தொடங்கி விட்டனர். அப்படி ஆதரவு வழங்க வேண்டி வருகின்றதொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களின் மனச்சாட்சியினை மு.காங்கிரஸ் - மீண்டும் முறை தொட்டுப் பார்த்துக் கொள்தல் அவசியமாக இருக்கிறது.

முஸ்லிம் சமூகத்துக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் உள்ளன. அவற்றில் ஏராளமானவற்றுக்கு இந்த அரசே பொறுப்புதாரியாகவும் இருக்கிறது. கிழக்கில் முஸ்லிம் மக்களின் ஏராளமான காணிகள் களவாடப்பட்டு வருகின்றன. இன்றும், அம்பாறை மாவட்டத்தின் அஷ்ரப் நகர் கிராமத்தில் தமது நிலங்களைப் பறிகொடுத்து விட்டுத் தவிக்கும் மக்களை நாம் காண முடியும். அண்மைக் காலமாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பிறகு ஆளும் அரச கட்சிக்கு மு.கா. ஆரவு கொடுக்குமாயின் - இவை குறித்தெல்லாம் பேசுதல் வேண்டும்!

இவை ஒருபுறமிருக்க, தனது தேர்தல் பிரசாரத்தின் போது, மக்களிடம் மு.கா. எதைப் பேசப் போகிறது என்பதைப் பலரும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர். வாழ்க்கைச் செலவு முதல் வாழ்வது வரை முஸ்லிம்களுக்கு இந்த அரசாங்கத்தில் பிரச்சினைகள் உள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் மு.கா. திறந்து பேசுமா என்பது கேள்விக் குறிதான்.

இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களுக்குள்ள நெருக்குவாரங்கள் குறித்து மு.கா. தனது பிரசார மேடைகளில் விமர்சிக்க முடியும். ஆனால், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 'இத்தனை நெட்ரூரங்களையும் புரிகின்ற அரசின் ஆட்சியில் எதற்காக மு.கா. இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது' என்று மனச்சாட்சியுள்ள வாக்காளன் கேட்பான். சொல்வதற்கு மு.கா.விடம் நியாயமான பதில்கள் இல்லை. எனவே, அரசுக்கு 'நோகாமல் அடிக்கும்' பிரசாரத்தினை மட்டுமே மு.கா. இந்தத் தேர்தலில் செய்ய வேண்டிவரும்!

எனவே, அரசாங்கத்தினை நேரடியாக விமர்சிக்க முடியாத நிலையில் இருக்கின்ற மு.காங்கிரசானது - மு.காங்கிரசுக்கு எதிரான அரசியலை மேற்கொண்டுவரும் அமைச்சர்கள் அதாஉல்லா மற்றும் றிசாத் பதியுத்தீன் போன்றவர்களுக்கெதிரான அரசியல் பிரசாரங்களைத்தான் கிழக்குத் தேர்லுக்காக தூக்கிப் பிடிக்கும். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளின் போது அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கும் மேற்படி அமைச்சர்களின் நடத்தைகள் மு.கா.வின் பிரசார மேடைகளில் கேலி செய்யப்படும். இது எலியை விடுத்து வாலைப் பிடிக்கும் கதைதான். என்றாலும், வாலைப் பிடிக்கும் போது – எலியும் கூடவே இழுபட்டு வரும்.

மு.காங்கிரஸ் தலைமைக்கு கிழக்குத் தேர்தல் என்பது மிகப் பாரியதொரு சவாலாகும். தனது நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பலிகொடுக்காமல் - தனித்துப் போட்டியிடும் நிலையொன்றினை அடைந்து கொண்ட மு.கா. தலைமைக்கு இன்னுமொரு சவாலும் காத்திருக்கிறது. அது - இந்தத் தேர்தலில் தனது கட்சி சார்பில் பெற்றுக் கொள்ளும் உறுப்பினர்கள் அரச தரப்புக்குச் 'சோரம்' போகாமல் காப்பாற்றிக் கொள்வதாகும்.

அதாவது, கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், அதிகமானோர் அனுமானிப்பது போல் எந்தக் கட்சியாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாததொரு நிலை உருவாகுமாயின், அங்கு கூட்டாட்சி என்பதே சாத்தியமாகும். உதாரணமாக, அந்த சந்தர்ப்பத்தில் அரச தரப்பு ஆட்சியமைக்க முயற்சிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன்போது, கட்சிகளிடம் ஆதரவினைக் கோருவதை விடவும், கட்சிகளில் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களை 'விலை' கொடுத்து வாங்குவதற்கே ஆளும் தரப்பு முயற்சிக்கும். அது ஆளுந்தரப்புக்கு லாபமும் ஆகும்!

ஆளும் ஐ.ம.சு.முன்னணி ஆட்சியமைப்பதற்காக கட்சிகளிடம் ஆதர கேட்டுச் செல்லும் போது, ஆதரவு கொடுக்கத் தயாராக இருக்கும் கட்சி நிபந்தனைகளை முன்வைக்கும். அதை ஆளுந்தரப்பு பெரிதாக விரும்பாது. எனவே, குறித்த கட்சியிலுள்ள உறுப்பினர்களை உடைத்தெடுத்து தமக்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கே ஆளுந்தரப்பு முயற்சிக்கும். மஹிந்த ராஜபக்ஷ கடந்த நாடாளுமன்றத்தில் தனக்கான பெரும்பான்மையினை அடைந்து கொள்வதற்காக, இவ்வாறுதான் ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை உடைத்தெடுத்தார்!

மேற்சொன்னது போலானதொரு கூட்டாட்சி ஏற்படும் சூழ்நிலை உருவாகுமாயின், ஆளும் வெற்றிலைத் தரப்பானது முதலில் மு.கா.விடம்தான் ஆதரவு கேட்கும். காரணம், ஏனைய பெரிய கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்போ, ஐ.தே.கட்சியோ – ஆளும் வெற்றிலைக் கட்சிக்கு ஒரு போதும் ஆதரவு வழங்காது. எனவே, மு.கா.வுடன் நடத்தும் பேச்சுக்களில் வெற்றி கிடைக்காது போயின், மு.கா.வின் உறுப்பினர்களை 'விலை'க்கு வாங்கும் கோதாவில், ஆளும் தரப்பு குதிக்கும்.

இது கற்பனையானதொரு விடயல்ல. கிழக்குத் தேர்தலின் பிறகு இடம்பெறும் சாத்தியமான நிகழ்வுகளைத்தான் நாம் எதிர்வு கூறுகின்றோம். மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த காலங்களில் இவ்வாறு 'சோரம்' போயிருக்கின்றார்கள். இதனால், 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு காலத்தில் கோலோச்சிய மு.காங்கிரஸ், 05 உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு வாயடைத்துப் போய் நின்ற வரலாறுகள் பற்றியும் நாம் அறிவோம்.

எனவே, கிழக்குத் தேர்தலில் மு.கா.வுக்கு வாக்களிப்போர் - அந்தக் கட்சியினூடாக தாம் தெரிவு செய்ய விரும்பும் வேட்பாளர்கள் குறித்து மிகவும் கரிசணையுடன் செயற்படுதல் வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலரான நமது நண்பரொருவர். 'சோரம்' போகக் கூடியவர்களுக்கு வாக்களிப்பதென்பது – வாக்களிக்காமல் இருப்பதை விடவும் ஆபத்தானதாகும் என்று அந்த நண்பர் எச்சரிக்கைத் தொனியுடன் மேலும் கூறினார்.

இந்தச் சிக்கலைச் தவிர்ப்பதற்காக – கிழக்குத் தேர்தலில் தனது கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களிடம் மு.காங்கிரஸ் ஓர் உடன்படிக்கையில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளது. இவர்கள் மாகாணசபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் - கட்சியின் தீர்மானத்துக்கு முரணாகச் செயற்படுவதில்லை என்பதும், அவ்வாறு செயற்பட்டால் அவர்களுக்கெதிராக கட்சி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுமே அந்த உடன்படிக்கையின் சாரமாகும். கைnழுத்து வைத்து விட்டு வந்த பல வேட்பாளர்களுக்கு அந்த உடன்படிக்கையில் என்னயிருக்கிறது என்பதே தெரியாது. காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு வந்து விட்டார்கள் என்பது இதிலுள்ள மெல்லியதொரு பகிடியாகும்!

மு.காங்கிரஸ் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை பலமுறை அரச தரப்புக்குப் பறி கொடுத்ததன் கசப்பான அனுபவத்திலிருந்துதான் - முன்கூட்டியே கையெழுத்துப் பெறும் இப்படியானதொரு விடயத்தை அந்தக் கட்சி செய்கிறதோ தெரியவில்லை. ஆனாலும், இந்த உடன்படிக்கையானது சட்ட ரீதியாக பெரியளவில் வலுவானதாக இருக்குமா என்பதும் கேள்விதான்!
ஆக, கிழக்குத் தேர்தல் விவகாரத்தில் மு.கா. தலைவர் இதுவரை சந்தித்த பிரச்சினைகள், அளவில் வாழப்பழம் போலானவை என வைத்துக் கொள்வோமாயின், தேர்தலுக்குப் பிறகு மாம்பழம், அன்னாசிப்பழமை; மற்றும் பலாப்பழங்களின் 'சைஸ்'களிலான பிரச்சினைகளை மு.கா. தலைவர் முகம் கொள்ள வேண்டிவரும். அவற்றினை - ஹக்கீம் எப்படிக்; கையாளப் போகிறார் என்பதில்தான் மு.கா.வின் இன்னுமொரு எதிர்காலம் தங்கியிருக்கிறது!

ஒரே வரியில் சொன்னால், கிழக்குத் தேர்தல் எனும் 'கண்டத்திலி'ருந்து மு.கா. தலைவர் தப்பித்துக் கொண்டால் - அதன் பிறகு கொஞ்ச நாளைக்கு நிம்மதியாக ஒரு பாடு 'தூங்கி' எழலாம்! சுடர் ஒளி



3 comments:

  1. மட்டகளப்பு மாவட்டதில் இவர்களுக்கு மிக பெரிய அவமானமும் கண்டமும் காதிருக்கிறது மட்டகளப்பு மாவட்டதில் இம்முறை இவர்கள் ஒரு ஆசனம் பெருவதே மிக கடினமான விடயம் அப்படி மக்கள் தேர்தலில் இவர்களை நிராகரித்தால் அதன் பின்னர் மட்டகளப்பு மாவட்ட முஸ்லிம்கள் குறித்து பேச இவர்கள் எந்த தகுதியும் அற்றவர்கள் ஆகிவிடுவார்கள்!!!

    நீதி துறையைவைதே வடமாகாண முஸ்லிம்களை இந்த பாடு படுத்தும் இந்த வேளையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து அது புலிகளை இன்றுவரை உடலாலும் உள்ளதாலும் ஆதரிக்கும் கூட்டமைப்பு ஆட்சி செய்ய கைகொடுத்து போலிஸ் அதிகாரமும் காணி அதிகாரத்தையும் சர்வதேச நெருக்குவாரங்களுடன் அரசிடம் இருந்து பெற்று மீண்டும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் காரியத்திலும் வெற்றி பெற்றால் என்ன கதியாகும் வடகிழக்கு முஸ்லிம்களின் நிலமை என்பதை சிந்திதே கிழக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க கடமை பட்டுள்ளனர் தென் இலங்கையில் மஸ்ஜிதுகள் உடைப்பு பற்றி முஸ்லிம் காங்கிரஸினறினால் பேசபடும் உணர்ச்சி கோசங்களுக்கு முன்னர் 200 மேட்பட்ட மஸ்ஜிதுஜளும் முஸ்லிம் கலாசார மையங்களும் உடைதெறியபட்ட செயல்களுக்கு தார்மீக ஆதரவு வழங்கி கொண்டிருக்கும் கூட்டமைபுடன் சேர்து கொண்டு ஆட்சி அமைக்க இதுவரை பேசிகொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் செயல் சரிதானா என்று சற்று சிந்திக வேண்டும் யார் எதை சொன்னாலும் இது வரை தென் இலங்கையில் ஒரு பள்ளி கூட உடைதெறியபட்டு புத்த விகாரை அமைக்க படவிலை என்பதே உணமை!!!

    இந்த தேர்தல் முஸ்லிம்கள் தலை நிமிர்து தனிதுவம் காப்பதா அல்லது தனிதுவ வேஷம் போட்டு தமிழர்களின் கைகளில் நம்மை கொத்தடிமையாக்க காத்திருக்கும் சக்திகளுக்கு வாக்களித்து நம் தலையில் நாமே மன் அள்ளி போடுவதா என்பதை மக்களே முடிவெடுக்கவேண்டிய தேர்தல்!!! மன்னார் விடயம் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் இனவாதம் அதிகாரத்தையும் ஆட்சியையும் கொண்டு எப்படி தனக்கு சார்பாக நடந்து கொண்டு நாட்டையும் ஊடகங்களையும் தனக்கு சார்பாக வழி நடத்தும் என்பதட்கு

    ReplyDelete
  2. நிச்சயம் இதுவே தேர்தலின் பின்னர் நடக்க இருக்கும் சமாச்சாரம். மேலும் அப்படிப்பட்டவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் கட்சியை மட்டும் அடமான வைக்க வில்லை, முழு முஸ்லிம் சமுதாயத்தினையும் அடமானம் வைக்க போகிறீர்கள் என்று.

    ReplyDelete
  3. கிழக்கு மாகாண சபையை முஸ்லிம் தமிழ் கூட்டணியே ஆட்சி செய்ய வேண்டும்.மேலும் இத்தோ்தலில் கூட்டமைப்பு மட்டுமாவட்டத்தில் 6 ஆசனங்களையும் வெற்றிலை 2 ஆசனங்களையும் மு.கா ஒரு ஆசனத்தையும் இலகுவாக கைப்பற்றும்.மேலும் இரண்டு ஆசனங்களை மூன்றில் ஒரு கட்சி பெறும்.கூட்ட்மைப்புக்கு ஒரு ஆசனம் கிடைக்க வாய்ப்பு அதிகம்.காணி பொலிஸ் அதிகாரம் மகாணசபைக்க வழங்கப்பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.