தனி நபர்கள் முக்கியமல்ல, முஸ்லிம் காங்கிரஸ் வாழவேண்டும் - ரவூப் ஹக்கீம்
உரிமைகளை வென்றெடுப்பதற்கு மத்திய அரசாங்கத்தில் மட்டுமல்லாது, மாகாண சபையிலும் முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்த நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதற்கான திராணி தமக்கும் தமது கட்சிக்கும் உண்டு என்றார். அத்துடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தனி நபர்கள் முக்கியமல்லர். இந்த இயக்கம் வாழ வேண்டும். அது தான் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லைப்புறத்தில் கல்குடா தொகுதியில் ஜயந்தியாய கிராமத்தில் வியாழக்கிழமை (23) மாலை நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு உரையாற்றும் பொழுது அவர் மேலும் தெரிவித்ததாவது,
எல்லைப்புற கிராமங்களான ஜயந்தியாய, ரிதீதன்ன போன்றவற்றில் வாழும் மக்கள் நிர்வாக ரீதியான பல்வேறு பிரச்சினைகளை தொடர்ச்சியாக எதிர்நோக்கி வருகின்றனர். கல்குடா தொகுதியில் வசிக்கும் மக்கள் தமது தேவைகளை உரிய முறையில் நிறைவேற்றிக்கொள்வதற்கு படுகின்ற அவலங்களை அனைவரும் அறிவீர்கள்.
இப்பிரதேச மக்கள் தமது நிர்வாகத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து வாகரை பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அதிகார கெடுபிடிகளும் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட பகுதிகளில் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளே உள்ளன.
இவ்வாறான சூழ்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகள் நிர்வாக எல்லைகளாக குறுகிய நிலப்பரப்பையே கொண்டுள்ளன. கோரளைப்பற்று மத்தி பிரதேச சபையைப் பற்றி நாம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறோம். அது கூடுதலான நிலப்பரப்பைக்கொண்ட பிரதேசமாக அமையும்.
எல்லை நிர்ணய ஆணைக்குழுக்கள் முன்னிலையில் நாம் சாட்சியமளித்து வந்துள்ள போதிலும் அந்த நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. முன்னாள் பிரதியமைச்சர் மொஹிதீன் அப்துல் காதர் காலத்திலிருந்தே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
அரசாங்கங்கள் அமைத்த ஆணைக்குழுக்கள், காணி உரிமைகள், நிர்வாக எல்லைகள் மீள் நிர்ணயம் என்பவற்றில் உரிய கவனத்தை செலுத்த தவறிவிட்டனர்.
இன்றுள்ள மாகாண சபை போலியானது. காணி அதிகாரங்கள் போன்றவற்றோடு கூடிய கிழக்கு மாகாண சபையை வென்றெடுப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்க வேண்டும்.
கல்குடா தொகுதியைச் சேர்ந்த இப் பிரதேசத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தரிசு நிலங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. அரச காணிப் பங்கீடு உரிய முறையில் கையாளப்படாதது பெரும் குறைப்பாடாக இருந்து வருகிறது.
இப் பகுதி மக்கள் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் காட்டுத் தொழிலில் ஈடுபடுவதில் பிரச்சினைகளை நிறைய அனுபவித்தனர். இப்பொழுது யுத்தம் ஓய்ந்த பின்னரும் காடுகளுக்குச் சென்று விறகு வெட்டுதல், சேனைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுதல், தேன் சேகரித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதில் இப் பிரதேச மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
வன பரிபாலன திணைக்களம், பொலிஸ் இலாகா ஆகியவற்றால் காட்டுத் தொழில் புரியும் இப் பிரதேச மக்களில் பலர் தொல்லைக்கு ஆளாகின்றனர்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், உண்மையான அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்வதற்கும் மாகாண ஆட்சி அதிகாரத்தை எங்களிடம் தாருங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. தேர்தல் களத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம காங்கிரஸூம் மிகவும் தீர்க்கமான மும்முனைப் போட்டியில் ஈடுபட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் 80 சதவீதத்துக்கு அதிகமானால் இந்தத் தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெற்று தீர்மானிக்கும் சக்தியாக நிச்சயம் வரும்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை தனி நபர்கள் முக்கியமல்லர். இந்த இயக்கம் வாழ வேண்டும். அது தான் முக்கியம் என்றார்.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் ஹாபிஸ் நஸீர் அஹமத், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆகியோர் உட்பட அநேகர் கலந்து கொண்டனர்.
முதலில் எனக்கும் இரண்டவதாக உங்களுக்கும் உபதேசம் செய்கிறேன்.
ReplyDeleteமிக நீண்ட காலத்தின் பின் நல்லதொரு தட் துணிவுள்ள பேச்சை தலைவரிடம் இருந்து கேட்கின்றோம்...
வாழ்த்துக்கள் தலைவரே...