Header Ads



மத உரிமைக்காக முஸ்லிம்கள் கிளர்ந்து எழும் நிலையில் உள்ளனர் - ரவூப் ஹக்கீம்



படமும், செய்தியும் - டாக்டர் ஹபீஸ்

இலங்கையில் ஆகக்கூடுதலாக விற்பனையாகும் சிங்கள வார இறுதி பத்திரிகையான 'லங்காதீப' யில் இவ்வார வெளியீட்டின் முன்பக்க பிரதான செய்தியில் 'ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தில் அரசாங்கத்திற்கு அதிருப்தி, முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையீடு. முஸ்லிம் காங்கிரஸிடம் இது பற்றி அரசாங்கம் காட்டமாக கேட்க இருக்கிறது' என்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதிலிருந்து நாம் தெளிவாக அடையாளம் காண்பது என்னவென்றால், முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரத்தின் காரணமாக, அரசாங்கம் தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவையான ஆசனங்களை பெறுவதில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதாகும்.

இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடாத் தொகுதியில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மஹா வித்தியாலயத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமத், வேட்பாளர்களான இஸ்மாயில் ஹாஜியார், ஜவாஹிர் சாலி, சட்டத்தரணி ராஸிக், தொகுதி அமைப்பாளர் ஹனிபா ஹாஜியார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் பங்கு பற்றினர்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது.  
இந்த மாகாண சபைத் தேர்தலை கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலோடு ஒப்பிட்டு நோக்க விரும்புகின்றேன். அந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிட்டதை உங்கள் மனக்கண் முன் நிறுத்திப்பாருங்கள்.
இங்கிருக்கும் கட்சி ஆதரவாளர்கள், அபிமானிகள் அப்பொழுது அடைந்த கஷ்டத்தை ஒரு கணம் நினைவூட்ட விரும்புகின்றேன். தலைமைத்துவம் இங்கு வந்து பலருடன் மன்றாடி உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்ட பொழுதிலும் நடந்தவற்றை நீங்கள் ஒரு முறை மீண்டும் திரும்பிப்பாருங்கள். எனது மன்றாட்டங்கள் பயனற்றுப்போயின.

அந்த உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒர் ஆசனம் மட்டுமே கிடைத்தது. எங்களுக்கு அது தோல்விதான். இந்த உற்சாகம் அன்று இருந்திருந்தால் உள்ளுராட்சி சபையை நாங்கள் கைப்பற்றியிருக்கலாம். அல்லது எலலோரது மனங்களிலிருந்தும் தோல்வி மனப்பான்மையை அகற்றி இருக்கலாம். ஆனால் போட்டியிடுமாறு கேட்கப்பட்டவர்கள் தலைமைத்துவத்தின் மத்தியில் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். எவறையெல்லாமோ சொன்னார்கள் அந்த தேர்தலின் போது சிலர் கட்சி மாறினார்கள்.

ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு முந்திய கட்டத்தில் என்ன நடந்தது என்பதை பார்க்காமல் தலைமைத்துவம் படுகின்ற கஷ்டத்தை அறிந்து கொள்ளாமல் இந்த விடயங்களை அணுகுவது என்பது கஷ்டமாக காரியமாகும். இந்த முடிவு வருவதற்கு முன்பு அரசாங்கத்துடன் பேச்சவார்த்தை நடத்திய காலத்தில் அனுபவித்த வேதனை எனக்குத்தான் தெரியும். சமூகம் விரும்புகின்றதை செய்ய முடியாமல் போனால் இயக்கத்திற்கு என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்லித் தெரிந்து கொள்ளத் தேவையில்லை.

விருப்பத்தோடும், தெம்போடும், உற்சாகத்தோடும் இந்த தேர்தலில் இறங்கியிருக்கின்றோம். இவையெல்லாம் ஓர் ஒற்றை ஆசனத்துக்காக மேற்கொள்ளும் முயற்சியா என்று நினைக்கின்ற போது மனம் வெடித்து விடும்போல் இருக்கின்றது. ஒற்றை ஆசனம் என்றால் கட்சி தோல்வி என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் எமக்கு மூன்று ஆசனங்களை நோக்கியதாக இல்லையைன்றால்,இந்த தேர்தல் எமது சமூகத்துக்கு பயன்படுத் தேர்தலாக இருக்க மாட்டாது என்பதை மிகத் தெளிவாக அடையாளம் காண வேண்டும். வெற்றிலைச் சின்னத்துக்கு மூன்று ஆசனங்கள் போகுமானால், அந்த ஆபத்தை எங்களது கழுத்தில் மாட்டிய கயிறாகப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் இந்த சமூகத்தின் இருப்பு, விடிவு என்பவையெல்லாம் கேள்விக்குறியாகி விடும். இதற்கான தாரக மந்திரம் என்ன என்று கேட்டால் நான் பதில் சொல்லப் போய் ஊருக்கு மந்திரி கிடைப்பதை எதிர்க்கின்ற தலைவர் என்ற விமர்சனத்துக்கு ஆளாவேன்.

மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் உயிர் வாழ்ந்த காலத்தில் பலவிதமான துரோகத்தனங்களுக்கு மத்தியில் கல்குடா தொகுதிக்கு உரித்தான பாராளுமன்ற ஆசனங்களை மூன்று முறை இழப்பதற்கு   இன்னுமொரு ஊரிலிருந்து ஆரம்பித்த தனிமனித ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்பதை மிகத்தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, கல்குடாத் தொகுதிக்கு இருக்கின்ற தார்மீகப் பொறுப்பு என்பது கட்சியின் வெற்றியா அல்லது தனி மனிதனின் வெற்றியா என்பதாகும்.

இந்த தேர்தல் ஆசனங்களின் சமன்பாட்டில் இந்த சமூகத்தை நிலை நிறுத்துகின்ற தேர்தலாகும். மாகாண சபை ஆட்சி என்பதும் அதிலுள்ள அமைச்சுப் பதவிகள் என்பதும் முதலமைச்சர் பதவியை விடவும் பெறுமானத்தில் இன்று மத்திய அரசிலும், பிராந்திய அரசிலும் சமூகம் வலுவிழந்து போய்  பெறுமானத்தை இழந்து வாழ்கின்ற கேவலத்திலிருந்து எங்களை விடுவிக்கும் தேர்தலாகும்.
அரப்பணிப்பு என்பது ஓர் ஆசனத்தைப் பெறுவதற்காக அல்ல என்பதை நாம் மிகத் தெளிவாக அடையாளம் காண வேண்டும். இந்த கல்குடாத் தொகுதிக்கான பாராளுமன்ற ஆசனம் மற்றும் மாகாண சபை ஆசனம் என்பன அல்லாஹ்வின் அருளால் நிச்சயம் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.

அதற்காக யார் யார் கால்களில் என்னென்ன கட்டுக்களைப் போட வேண்டும் என்பதை நான் தெரியாதவனல்லன். இந்த இயக்கத்தைப் பாதுகாக்கின்ற இந்தப் போராட்டமானது மிகவும் முக்கியமானது.
இது முழுக்க முழுக்க முஸ்லிம் சமூகத்தில் அத்தனை அந்தஸ்துகளையும் பணயம் வைத்து போட்டியிடும் தேர்தலாகும். இதைப் போலவே முன்னைய தனியாக கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட முதலாவது தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், தவிசாளர், செயலாயர் நாயகம் ஆகியோர் நாங்கள் எங்களின் பாராளுமன்ற ஆசனங்களை துறந்து போட்டியிட்டோம். அந்தத் தேர்தலில் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் போட்டியிட்டோம்.

இன்று நாங்கள் அதைச் செய்ய வில்லை. ஆனால் அதைவிட இரட்டிப்பாகன தியாகங்களை செய்வதற்கு மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய அவஸ்த்தையில் மக்கள் இருக்கிறாரகள். மரச்சின்னம் வேண்டும் நாட்டில் மூலை முடுக்குகளில் சிதறி வாழும் முஸ்லிம்கள் தங்கள் சமயக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்ற அந்த ஈமானிய உள்ளங்களின் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில் அதற்கான வடிகாணாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பாக்கின்ற நிலையில்தான் இத்தகைய உற்சாகம் கரை புரண்டோடுகின்றது.

நான் முதன்முதலாக  தலைமைப் பதவியேற்று இங்கு வந்த பொழுது அன்றாடம் காய்ச்சியான, கட்சித் தொண்டரான முதுகில் மூட்டை சுமக்கும் நாட்டாண்மையான ஒருவர் என்னிடம் 'எங்களது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனைக்கு விடுகின்றதா? ஏனைய கட்சியினர் அவர்களை விலைக்கு வாங்கிக்கொள்கின்றார்களே' என்று சொன்னது இன்று போல் நினைவிருக்கின்றது. மாற்றுக் கட்சியில் போட்டியிடும் நபர் எங்கள் கட்சியை காட்டிக் கொடுத்து துரோகம் இழைத்து விட்டுச் சென்ற போது கட்சியின் அடிமட்டப் போராளி கேட்ட கேள்விதான் இது!

மூன்று ஆசனங்களை வென்றெடுப்பதற்கான ஒரே வழி ஏறாவூரிலும் காத்தான்குடியிலும் மக்கள் மத்தியில் உள்ள ஆசனத்தைப் பெற முடியுமா என்ற பீதி மனப்பான்மையை அகற்றுவதாகும். இந்தப் பீதி மனப்பான்மை  மூன்று ஆசனங்களைப் பெறுவதென்ற எங்களது இலக்குகளையும், வழிமுறைகளையும் முடக்கிவிடலாம்.

மாகாண சபைத் தேர்தலில் ஒரு சமன்பாட்டில் நாம் வெல்ல வேண்டும் என்பதில் உள்ள உபாயம் ஓர் ஒற்றை ஆசனத்தைப் பெறுவதா என்பதை மிகத்தெளிவாக நாம் அடையாளம் காணவில்லை என்றால், இந்த தேர்தலிலே நாங்கள் எந்த வெற்றியையும் அடைய முடியாது என்பதை மிகத் தெளிவாக உணரவேண்டும். கட்சியின் பாமர மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருக்கின்ற தார்மீக கடமை மூன்று ஆசனங்களை வெல்வதற்கான வழியேயன்றி வேறெதுவும் அல்ல. ஏறாவூரிலும், காத்தான்குடியிலும் மக்கள் மத்தியில் உள்ள ஆசனத்தைப் பெறமுடியுமா என்ற பீதி மனப்பான்மையை முறியடிக்க வேண்டும்.
இங்கு மட்டும் வெற்றி மனப்பான்மை, அங்கு தோல்வி மனப்பான்மை என்றால், வெற்றி வாய்ப்புக்களெல்லாம் முடக்கப்பட்டுவிடும். அத்தகைய பீதி மனப்பான்மைக்கு இப்பொழுதே அணைகட்டுகின்ற வேலையில் ஈடுபட வேண்டும்.

இந்த மண்ணை கல்குடாத் தொகுதியை யார் காட்டிக்கொடுத்தாலும,; மக்கள் முன்வந்து மரத்தை காப்பாற்றினார்கள். கட்சியை தோற்கடிக்க மேற்கொள்ளப்படும் உபாயத்தை நாம் சரிவர அடையாளம் காண வேண்டும் எங்களுக்குள் முரண்படலாம், மூன்று ஆசனங்களை நோக்கி போக முடியாதா? நிச்சயமாக முடியும். ஆதற்காக எஞ்சியுள்ள ஒரு மாத காலமும் முகாமிட்டு களத்தில் இறங்க நான் தயாராக இருக்கின்றேன்.
இன்றைய லங்காதீப பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி நாட்டுத் தலைமை கட்சித் தலைமைக்கு சொல்கின்ற செய்தி போன்று இருக்கின்றது.
எமது எதிர்த்தரப்பினர் கூட இந்தக் கட்சிக்கு வாக்களிக்கத் தயாராகிள்றனர். இந்த சமூகத்தின் அரசியல் இருப்பை இந்த தேர்தலில் மிகத் தெளிவாக நிலை நிறுத்த வேண்டும். அனைத்துப் பதவிகளையும் பந்தயம் வைத்து இறங்கும் தேர்தலாக இத்தேர்தல் மாறியிருக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் கட்சியின் வெற்றிக்காக அயராது உழைக்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன். 



2 comments:

  1. மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் உயிர் வாழ்ந்த காலத்தில் பலவிதமான துரோகத்தனங்களுக்கு மத்தியில் கல்குடா தொகுதிக்கு உரித்தான பாராளுமன்ற ஆசனங்களை மூன்று முறை இழப்பதற்கு இன்னுமொரு ஊரிலிருந்து ஆரம்பித்த தனிமனித ஆதிக்கத்தின் வெளிப்பாடு என்பதை மிகத்தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்”

    கடைசியில் நீங்களுமா பிரதேசவாததை பேசுகிறீர்கள் மக்கள் பிரதேசவாதத்தை உங்கள் தமைமைதுவதில் பார்திருந்தால் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எங்கோ பிறந்த நீங்கள் தலைமைதுவம் வகிக்கும் நிலை உருவாகி இருக்குமா? அரசியலில் கடைசி ஆயுதம் பிரதேச வாதம் அதட்கு நீங்களும் விதி விலகல்ல என்பதட்கு இந்த பேச்சு மிக பெரிய சாட்சி

    ReplyDelete
  2. தனது அற்ப அரசியல் லாபத்திற்காக, ''அரபு வசந்தம்'', கிளர்ச்சி, புரட்சி என்றெல்லாம் சோடாப் புட்டிப் பேச்சுப் பேசி, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவாத்தை ரவூப் ஹக்கீமே தூண்டி விடுவார் போலத்தான் தெரிகின்றது. அல்லாஹ் முஸ்லிம்களைப் பாதுகாக்கட்டும்.

    1970 களில் தமது அற்ப அரசியல் லாபங்களுக்காக தமிழர் தரப்பு அரசியல் வாதிகள் பேசிய இத்தகைய கிளர்ச்சியூட்டும் பேச்சுக்கள்தான்
    இலங்கையில் 30 வருடங்கள் இரத்தத்தை ஓட வைத்தன என்பதனை ரவூப் ஹக்கீம் கவனத்தில் கொள்வது நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.