Header Ads



ஜனாஸாக்கள் மீது சிறுநீர், குர்ஆன் எரித்தவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் - அமெரிக்கா

 
ஆப்கானிஸ்தானில், தலிபான்களின், சடலத்தின் மீது சிறுநீர் கழித்து, இழிவு படுத்திய ராணுவ வீரர்களுக்கு, உரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளது' என, அமெரிக்கா தெரிவித்து உள்ளது.
 
ஆப்கானிஸ்தானின், ஹெல்மண்ட் மாகாணத்துக்கு உட்பட்ட சாண்டலா நகரில், கடந்தாண்டு ஜூலை மாதம், தலிபான்களுக்கு எதிராக அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அப்போது, அமெரிக்க கடற்படையின் மூன்றாவது பிரிவைச் சேர்ந்த மூன்று வீரர்கள், தலிபான்களின் உடல்களை வரிசையாக கிடத்தி, அவற்றின் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இந்த காட்சிகளை படம் பிடித்து, இணைய தளம் மூலமாகவும் வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, அமெரிக்க ராணுவ அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான "பென்டகன்' சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ராணுவ நீதியின் ஒழுங்குமுறை விதிகளை மீறி, நடந்து கொண்ட மூன்று கடற்படை வீரர்கள், துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, உரிய தண்டனையும் பெற்றுள்ளனர்' எனக் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற கடற்படை வீரர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து, பின்னர் அறிவிக்கப்படும் என்றும், பென்டகன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், ஆப்கானிஸ்தானில், "குரான்' நூலை தீயிட்டு கொளுத்திய, ஆறு வீரர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க உள்ளது. "ராணுவ வீரர்கள் ஆறு பேருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
..........................................................................................................
 
ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்த 6 அமெரிக்க இராணுவ வீரர்களை தண்டிக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் ஆப்கானில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பக்ரம் விமானப்படை தளத்தின் குப்பைத் தொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த செயலைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்தினர். இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா மன்னிப்பு கேட்டார்.
 
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பிரிகேடியர் ஜெனரல் பிரையன் ஜி. வாட்சன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, ஆப்கானிஸ்தானில் சுமார் 100 குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை அமெரிக்க இராணுவ வீரர்கள் எரித்துள்ளனர்.

அங்குள்ள அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரின் அறிவுரையைக் கேட்கவில்லை. சிறை நூலகத்தில் உள்ள நூல்களை வைத்து கைதிகள் தங்களுக்கு கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர் என்று பல முறை உளவுத்துறை தெரிவித்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை எரித்த 6 இராணுவ வீரர்களை தண்டிக்குமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
 

 

No comments

Powered by Blogger.