மஹிந்த ராஜபக்ஸ நியாயம் பெற்றுத்தர வேண்டும் - பாராளுமன்றத்தில் அமைச்சர் றிசாத்
புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடியேறுவதைத் தடுப்பதற்கு எஞ்சியுள்ள புலிகளின் ஆதரவாளர்கள் முயற்சி செய்து வருவதாக கைத்தொழில் அபிவிருத்தி வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விசேட கவனம் செலுத்தி நியாயம் பெற்று தர வேண்டும் எனவும் அவர் கூறினார். நான் நாட்டின் நீதித்துறையை உச்ச அளவில் மதித்து செயற்படுபவன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்கா சபைக்கு கொண்டு வந்திருந்த சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது, எமது நாடு முப்பது வருட காலப் பயங்கரவாதத்திலிருந்து விடுபட்டு துரித பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. கடந்த வருடம் 8.2 சதவீத பொருளாதார வளர்ச்சியை நாம் அடைந்தோம்.
அதே வளர்ச்சியை இவ்வருடமும் பெற்றுக் கொள்ள கூடிய சூழலை எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.
இவ்வாறான நிலையில் மன்னார் நிலைமை தொடர்பாக இச்சபையில் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். இதனை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண் டும். நான் மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த சமயத்திலும் இன, மத பேதம் பாராமல் சேவையாற்றியுள்ளேன்.
ஜனாதிபதியின் தலைமையில், அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டல்களின்படி சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்திருக்கின்றேன். நான் ஒரு போதும் இன, மத ஒதுக்கல் செயற்பாடுகளில் ஈடுபட்டவன் அல்லன். மன்னார் மாவட்டத்தில் கூட ஐயாயிரம் தமிழ் மக்களை மீளக்குடியேற்றியுள்ளேன்.
வட மாகாணத்தில் காலா காலமாக வாழ்ந்து வந்த முஸ்லிம்களைப் புலிகள் தான் பலவந்தமாக வெளியேற்றினர். இதனால் சுமார் 22 வருடங்கள் அகதி முகாம்களில் எமது முஸ்லிம்கள் தங்கினர். உடுத்த உடையுடன் முஸ்லிம்களை வெளியேற்றிய புலிகள் அம்மக்களின் சொத்துக்களையும், இருப்பிடங்களையும் அபகரித்தனர்.
என்றாலும், 2009ம் ஆண்டில் புலிப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டு நாட்டிற்கு அமைதியான சூழலை எமது ஜனாதிபதி பெற்றுத் தந்தார். இதன் பயனாக புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தமது சொந்த இருப்பிடங்களில் மீளக் குடியேறச் சென்றார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில்தான் உப்புக்குள முஸ்லிம்கள் தமது பாரம்பரிய மீன்பிடித் தொழில் இடங்களை இழந்திருப்பதை உணர்ந்தனர். அவர்களது இடங்களில் விடத்தல்தீவு மீனவர்கள் தொடர்ந்தும் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
ஆனால் உப்புகுள முஸ்லிம்கள் அமைதியான முறையில் மீளக்குடியேறவும், அவர்களது பாரம்பரிய தொழில்களில் ஈடுபடவும் இடமளிக்க வேண்டும். உப்புகுள முஸ்லிம் மீனவர்களின் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும். இங்கு வாழும் சகல இன, மத மக்களும் ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழ வேண்டும்.
Post a Comment