Header Ads



"பத்ரு" களம் தரும் படிப்பினை...!


அபூ யாசிர்

இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய ""பத்ரு"போர் ரமழான் 17ல் நடைபெற்றது. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது. சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டிய அந்த "பத்ரு" போரின் வயது இன்றைக்குச் சற்றொப்ப 1430 ஆண்டுகள்.

இறை மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் அறப் போராட்டத்தில் அயராது ஈடுபடும் நெஞ்சுரத்தை அளிப்பதற்காகவே இஸ்லாமிய வழிபாடுகள் அனைத்தும் விதியாக்கப்பட்டுள்ளன. எனவேதான் நோன்புக்கும் அறப்போருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதை பார்க்க முடிகிறது.
ஆறு ஒட்டகங்களையும் இரண்டு குதிரைகளையும் மிகக் குறைந்த ஆயுத வசதிகளையும் கொண்ட 313 முஸ்லிம்கள், ஆயுதம் தாங்கிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறைஷ்களை எதிர்த்தனர் என்றால், அந்த முஸ்லிம்களின் நெஞ்சுறுதியையும் இறை நம்பிக்கையையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

நோன்பு வைத்துள்ளோமே இச்சமயத்தில் எப்படிப் போராடுவது என்றெல்லாம் அவர்கள் தயங்கிக் கொண்டிருக்கவில்லை. இறை நெறிக்கு ஓர் ஆபத்து என்ற போது தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை.

இறைவன் அளித்த உயிர் அவனுடைய மார்க்கத்திற்காக அவனுடைய வழியிலேயே அர்ப்பணமாவதை நபிதோழர்கள் பெரும் பேராய்க் கருதினார்கள். இறைநெறியை நிலை நாட்டுவதையும் அதற்காக உழைப்பதையும் மையமாகக் கொண்டே அவர்களின் வாழ்க்கை சுழன்றது. அந்த 313 முஸ்லிம்களின் வாழ்வோடு எதிர்கால இஸ்லாத்தின் வாழ்வும் வளர்ச்சியும் பின்னிப் பிணைந்திருந்தன. இறைநெறியை அழிக்க முனைந்தோரை எதிர்த்துப் போரிடும்படி இறைக்கட்டளை கிடைத்த உடனேயே அந்த சிறுபான்மை சத்தியக் குழுவினர் போருக்குத் தயாராகிவிட்டனர். ஆர்ப்பரித்து வரும் குறைஷ்களின் படையை எந்த இடத்தில் சென்று சந்திப்பது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்களும் தோழர்களும் கலந்து ஆலோசித்தனர். பல போர்த் திட்டங்களை வகுத்தார்கள். போருக்காக இஸ்லாமியப் படைகள் முகா மிடும் இடங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்க முடிவு செய்த போது நபிதோழர்களில் ஒருவர் இது இறை அறிவிப்பா அல்லது தங்களின் சொந்த முடிவா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "இது இறை அறிவிப்பு அல்ல, என் சொந்த முடிவு’ என்று கூறியதும், அந்த நபி தோழர் தண்ணீர் வசதியுள்ள மற்றோர் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு சென்று முகாமிடலாம் என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்கள் அத்துடன் எதிரிகளின் போர் நிலைகளையும், தந்திரங்களையும் வேவு பார்த்து வருவதற்காக ஒற்றர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

"பத்ரு" போர் களத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகச் சிறந்த படைத் தளபதியாகச் செயல்பட்டார்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் அறிவை மட்டுமே பெரிதாக எண்ணாமல் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருந்தார்கள். இறைவனிடம் இருகையேந்தி இறைஞ்சினார்கள். "இறைவா! எங்களுக்கு துணை புரிவதாக நீ அளித்த வாக்கை நிறைவேற்று. சத்தியத்திற்காகப் போராடும் இந்தச் சிறுகுழு இன்று அழிந்து விட்டால் இனி உலகில் உன்னை வணங்கிட எவரும் இருக்க மாட்டார்கள்’ என உருக்கமாக பிரார்த்தனை செய்தார்கள்.

அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் வந்து, "அல்லாஹ்வின் உதவி நமக்கு நிச்சயம் உண்டு; கலங்காதீர்கள்’ என்று ஆறுதல் கூறினார். அந்த சிறுபான்மை சத்தியக் கூட்டம் "நாங்கள் இறைவனுக்காகவே’ என்று முழுமையாக முன்வந்தபோது இறைவனும் தன் அருளைப் பொழியத் தொடங்கினான். போர் நடைபெறும் வேளையில் மழை பெய்வித்தும், வானவர்களை அனுப்பியும் இன்னும் பல்வேறு வடிவங்களில் அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்தான். அவர்களின் பாதங்களை வலுப்படுத்தி இறுதி வெற்றியையும் அளித்தான். நபியவர்களோ, நபிதோழர்களோ இந்த வெற்றி குறித்து சிறிதும் கர்வம் கொள்ளக்கூடாது என்பதற்காக இறைவன் பின்வரும் குர்ஆன் வசனத்தை அருளினான். "உண்மையாதெனில், நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. அல்லாஹ் தான் அவர்களைக் கொன்றான். மேலும் (நபியே!) நீர் எறிந்தபோது, உண்மையில் எறிந்தது நீரல்லர்; மாறாக அல்லாஹ்தான் எறிந்தான். (8:17)

இந்த அருள்நெறி வசனங்களுக்கேற்ப அந்த ஆரம்ப கால முஸ்லிம்களும் விளங்கினார்கள். அவர்கள் தங்களின் அறிவையும் ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்தியே போரிட்டனர் என்றாலும், அவற்றைக் கொண்டுதான் வெற்றி பெற்றோம் என்று சிறிதும் கர்வம் கொள்ள வில்லை. இறையருளின் துணைகொண்டே வெற்றி பெற்றோம் என்று உறுதியாக நம்பினர். இறைவனுக்கு நன்றியும் செலுத்தினர். இவ்வாறு அனைத்து பண்புகளையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் கொண்டு வந்து சமநிலைப் படுத்தியது "பத்ரு" போரின் தனிச்சிறப்பாகும். ""பத்ரு" போரில் எந்தெந்த நியதிகளைக் கடைபிடித்ததால் இறை யுதவி அவர்களுக்கு கிடைத்ததோ அந்த இறை நியதிகள் எந்தவித மாற்றமும் இன்றி இன்று வரை அப்படியே உள்ளன. தன்னுடைய அள வற்ற அருட்கொடைகளின் கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இறைவனும் வழங்கக் காத்திருக்கிறான். ஆனால்ஸ

அந்த இறை நெறிகளைப் பின்பற்ற நம்மில் ஒருவரேனும் உண்டா? இறைவனின் அருட் கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வம் நம்மில் எத்தனைப்பேரிடம் இருக்கிறது? நம் உள்ளத்தைத் தொட்டுப் பார்த்துப் பதில் சொல்ல வேண்டும். இன்றுகூட இறைநெறியை -இஸ்லாத்தை முழுமையாக நிலைநாட்டும் பணி நம் முன் உள்ளது. பத்ரு தோழர்களிடம் இருந்த அதே துடிப்பும், உணர்ச்சியும் இன்று நமக்கும் தேவைப்படுகிறது.

இறைநெறியை நிலைநாட்டியே தீருவோம் எனும் உறுதியோடு நம்மிடம் இருக்கும் வாய்ப்பு வசதிகளையும் ஏன் தேவைப்பட்டால் நமது உயிர்களையும் கூட இறைவழியில் அர்ப்பணிக்கத் தயாராகி விடவேண்டும். அதற்காக மறைமுக கொரில்லாத் தாக்குதல், மனித வெடிகுண்டு, தற்கொலைப் படை என இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான செயல்களில் சுய விளக்கம் கூறி ஒருபோதும் ஈடுபடக் கூடாது. அப்படி இறைவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்தால் இறையுதவி எப்படியெல்லாம் கிடைக்கிறது என்பதை நாம் நம் கண்களாலேயே கண்டு கொள்ளலாம்.

1430 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற "பத்ரு" போரை இன்று நினை வூட்டுவதன் நோக்கம், நம்முடைய உள்ளத்திலும் சத்திய வேட்கை கொழுந்து விட்டெரிய வேண்டும் என்பதற்காகவே. அந்த சத்தியச் சுடர் நமது செயல்களில் வெளிப்பட்டு சுற்றி யுள்ள தீமைகளை எல்லாம் சுட்டுக் கரித்து விட்டு ஓர் ஒளிமிக்க புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே!

"பத்ரு" போரிலிருந்து கிடைக்கும் படிப்பினை:

"பத்ரு" போர் தரும் படிப்பினைகளை நம் உள்ளத்தில் பதியவைக்க வேண்டும். (1) பெரும் பான்மை மக்கள் ஒரு விவாதத்தை ஏற்றுக் கொள்வதால் அது சத்தியமாகிவிடாது. அவர்கள் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொள்ளவில்லையெனில் அது அசத்தியமாகிவிடாது. சத்திய வாதிகள் சிறுபான்மையினராய் இருந்தாலும் இறைவன் சத்தியவாதிகளுடன்தான் இருப்பான்.

(2) இறை நம்பிக்கை கொண்ட பிறகு, இறைவனின் கட்டளைகளுக்கும் இறைத் தூதரின் கட்டளைகளுக்கும் கீழ்படியத் தயங்குவது உள்ளத்தின் நயவஞ்சகமாகும். இறைவன் இத் தகையவர்களை விரும்புவதில்லை, வெறுக்கிறான்.

(3) இந்த நயவஞ்சகத் தன்மையும் கோழைத் தனமும் போலி வாதமும் ஒழிய வேண்டுமானால், இறைவன் நம் உள்ளத்தின் இரகசியங்களை அறிகின்றான் என்ற சிந்தனையும் அவன் முன்னிலையில் மறுமையில் நாம் நிற்க வேண்டியுள்ளது எனும் உறுதியான நம்பிக்கையும் வேண்டும். செல்வம், சந்ததிகள் மீதுள்ள பேராசைதான் இறை வழியில் தியாகம் செய்ய தயக்கத்தையும், கோழைத்தனத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே இவ்விரண்டையும் இறை நம்பிக்கையாளர்களை சோதிக்க இறைவனால் அளிக்கப்பட்ட சோதனைப் பொருட்கள் என உணர்ந்து இறை நம்பிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

(4) சத்திய வழி நடப்போர் பலவீனர்களாய் இருந்தபோதிலும் அசத்தியவாதிகள் எவ்வளவு தான் பலமுள்ளவர்களாய் இருந்தபோதும் சூழ் நிலைகளை மாற்றி சத்தியவாதிகளுக்குப் பாதுகாப்பையும் வெற்றியையும் அளித்திட இறைவனால் முடியும். "பத்ரு" போரில் வானவர் களைக்கொண்டு இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவி புரிந்ததன் மூலம் இறைவன் அதனைச் செய்தும் காட்டிவிட்டான். அதற்காக இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். இறை மறுப்பாளர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டனர். எனவே இறைவன் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தான்.

(5) இறை வழியில் தியாகம் செய்வது ஓர் இறைவணக்கமே.

இந்த உணர்வுகள், படிப்பினைகள் என்றும் பசுமையோடு இருக்க "பத்ரு" போர் நிகழ்ச்சிகள் நமக்கு என்றென்றம் படிப்பினையாக இருக்கட்டும்! வல்ல அல்லாஹ் போதுமானவன்.

1 comment:

  1. பத்ருப் போர் - ஒரு பரணி
    (நன்றி: மு.மேத்தா - 'நாயகம் ஒரு காவியம்')


    இதுஓர் இறைப் போராளியின்
    இலட்சியப் பயணத்தில்
    மனதை நிமிர வைக்கும்
    மைல் கல்!

    ஒரு கொள்கை வீரரின்
    வாழ்க்கைச் சாலையில்..
    வறண்ட பாலையில்..
    இதுஒரு சோலை..
    எதிரிகளுக்கு விடுக்கப்பட்ட
    எச்சரிக்கை ஓலை!

    உயிர்நீத்த
    பதினான்கு தியாகிகள்
    பொழிந்த குருதியால்

    ஒரு போராட்டக்காரரின்
    பதினைந்தாண்டுக் கால
    அக்கினிப் பிரவேச நெருப்பு
    அணைக்கப்பட்டது!

    ஆகாயத்தையே
    அழுக்குப் படுத்தப் போவதாய்த்
    துள்ளிக் குதித்த
    தூசிகளை..
    காற்று
    குப்பைக் குழிக்குள்
    கொண்டு சேர்த்தது!

    சூறைக் காற்றைச்
    சுருட்டிவைக்க முயன்ற
    துணிச் சுருள்கள்
    தூக்கி எரியப்பட்டன!

    எழுதப்பட்டது - வெற்றி..
    உதிர்ந்த குருதியாலும்
    உதிராத உறுதியாலும்!

    பத்ரு போர்க்களம்-
    ஓர் அதிசயமான வயல்!
    அங்கே ஓர்
    அறுவடைக்குப் பிறகுதான்..
    பயிர் செழித்தது..
    மார்க்கப் பயிர்!

    இது
    இறுதித் தீர்ப்பல்ல..
    இடைக்காலத் தீர்ப்புதான்!
    ஆனால்-
    இதை வாசித்தபிறகுதான்
    அவநம்பிக்கையாளரின்
    ஆயுதக் கிடங்கு
    அழிக்கப்பட்டது..

    அதன்மீது எழுந்தது
    நம்பிக்கை யாளரின்
    நாயக மாளிகை!

    எத்தனையோ போர்கள்
    இனியும் நிகழலாம்..
    ஆனால்
    பத்ருப் போர்தான்
    சத்தியத்திற்கு முதன்முதலாய்ச்
    சாட்சியளித்தது!
    சரித்திரத்திற்கு முதன்முதலாய்ச்
    சவால் விடுத்தது!

    வானத்தை ஊமையாக்கி
    அச்சுறுத்திய இருள்
    அகன்றது..
    வைகறை
    வாய்திறந்தது!

    விண்ணும் மண்ணும்
    கைகோர்த்துக் கொண்ட
    விந்தையான வேளை அது!

    எதிரிகளுக்கு இதுவரை
    வானத்திலிருந்துதான் எச்சரிக்கை
    வந்து கொண்டிருந்தது..
    இப்போது-
    பூமியிலிருந்தும்
    புறப்பட்டுவிட்டது!

    கொடிகட்டிப் பறந்த
    குறைசியர்
    தலைக்கனம்
    தகர்ந்து
    தரைக்கு வந்தனர்!

    ஆயுதம் ஏந்திய பின்தான்
    அவர்களுக்குப் புரிந்தது
    அஹிம்சையின் பலம்!

    பத்ரு மண்ணில்
    குறைசியரின்
    சடலங்கள் மட்டுமல்ல..
    சட்டாம்பிள்ளைத் தனங்களும்
    புதைக்கப்பட்டு விட்டன!

    மூட நம்பிக்கைகளின்
    முதுகொடித்து
    அரபு மண்ணில்
    நிறுவப்பட்டதொரு
    பகுத்தறிவுப்
    பல்கலைக் கழகம்!

    'பத்ருப்' போர்க்
    களத்தில் அதன்
    கால்கோள் விழா!

    மூர்க்கப் பாதையில்
    முரடர்களாய் முளைத்திருந்தோர்
    மார்க்கப் பாதையில்
    மனிதர்களாய் மலர்ந்தார்கள்!

    முன்னூற்றுப் பதின்மூன்றுபேர்
    ஒரு வரலாற்றின்
    முன்னுரையை எழுதினார்கள்..

    அதற்கு மையாகப்
    பதினான்குபேர் தங்கள்
    பச்சை ரத்தம் முழுவதையும்
    பரிமாறினார்கள்!

    வெறும் நகரமாக இருந்த
    மதீனா
    இப்போது
    தலைநகரமாகி விட்டது..

    சாந்தி மார்க்கத்தின்
    தலைகளை நிமிர்த்தி!

    ஆன்மீகத் தலைவராய்
    அனுப்பியது மக்கா
    அண்ணலாரை
    அரசியல் தலைவராய்
    ஆக்கியது மதீனா!

    போர்ப்படைத் தலைவராய்ப்
    புறப்பட்டு வந்தவரை
    பத்ரு
    ஆட்சித் தலைவராய்
    அங்கீகரிக்க வைத்தது!

    ஆகாயம்
    வெண்கொற்றக் குடையானது..
    பூமியின்
    புதல்வருக்கு!

    ஏழைகளின் கேடயம்
    கிரீடமாகி விட்டது..
    எளியவர்களின் ஊன்றுகோல்
    செங்கோலாகி விட்டது..
    ஆனால்-
    மன்னவர் அமர்ந்திருந்ததோ
    அரியாசனத்தில் அல்ல-
    சரியாசனத்தில்!

    பெருமானாரே!
    ஓங்கிப் பறக்கிறது
    உங்கள் கொடி..
    தாழ்ந்து பணிந்திருப்பதேன்
    உங்கள் தலை?

    ஓ...
    எல்லாப் புகழும்
    இறைவனுக் கென்றோ?

    ஒரு போராளிக்கு
    எந்தப் போர்க்களமும்
    இறுதிப் போர்க்களமல்ல..
    எந்த வெற்றியும்
    இறுதி வெற்றியல்ல..

    ஏனெனில்
    இலட்சிய நாயகர்கள்
    தேகங்களால் ஆனவர்களல்ல..
    தாகங்களால் ஆனவர்கள்!

    நன்றி: மு.மேத்தா - 'நாயகம் ஒரு காவியம்'

    ReplyDelete

Powered by Blogger.