மன்னார் விவகாரமும், முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும்
(02-08-2012 அன்று வெளியாகிய விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)
மன்னார் உப்புக்குளம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டமை மற்றும் அது தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறிய சம்பவங்கள் இன்று தேசிய ரீதியாக பெரும் சலசலப்பைத் தோற்றுவித்திருக்கிறது.
இந்த விவகாரத்துடன் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சம்பந்தப்பட்டதாகவும் நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் குறிப்பிட்டு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இரண்டு தசாப்த கால இடப்பெயர்வுக்குப் பின்னர் மீண்டும் தமது சோந்த இடத்தில் தொழில் புரியச் சென்ற மன்னார் உப்புக்குளம் மீனவர்களுக்கு அவர்களது தொழில் புரியும் உரிமை மறுக்கப்படுவதானது ஏற்றுக் கொள்ள முடியாததும் அடிப்படை உரிமை மீறலுமாகும்.
போர் நடைபெற்ற காலப்பகுதியில் வடக்குக் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் தமது சோந்த இடங்களில் மீளக்குடியேறி வாழத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் மன்னார் உப்புக்குளம் மீனவக் குடும்பங்களும் தமது சோந்த இடத்தில் மீள்குடியேறி தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முயற்சிக்கும் இத் தருணத்தில் அதற்கு தடை விதிக்கப்படுவதானது அவர்களது மீள்குடியேற்றத்தைக் கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கையாகும்.
இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மீனவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி இனங்களுக் கிடையில் முறுகல் நிலையை தோற்றுவிக்க முனைவதும் அரசியல் ரீதியாக சர்சசைகளைத் தோற்றுவித்து அதில் குளிர்காய முனைவதும் கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த விவகாரத்தில் கிறிஸ்தவ மீனவர்களும் முஸ்லிம் மீனவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதன் காரணமாக இதனை ஒரு மதப் பிரச்சினையாக மாற்றி அதன் மூலம் இலாபம் தேட சில சக்திகள் முனைவதையும் அவதானிக்க முடிகின்றது.
கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் நிலவிய இன மற்றும் மத முரண்பாடுகள் காரணமாக ஏற்பட்ட விரும்பத்தகாத விளைவுகளை நாம் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். அவ்வாறான விரும்பத்தகாத விளைவுகள் மீண்டும் ஏற்பட்டுவிடாதவாறு சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டியது சகலரதும் கடப்பாடாகும்.
வட மாகாண முஸ்லிம்கள் மீண்டும் தமது சோந்த இடங்களில் மீளக்குடியேறி நிம்மதியாக வாழ்வதற்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இரண்டு தசாப்த கால அகதி வாழ்க்கைக்குப் பின்னர் மீள்குடியேற விரும்பும் மக்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதில் அரசாங்கம் மாற்றாந்தா மனப்பான்மையுடன் நடந்து கொள்வதானது கவலைக்குரியதாகும். அதன் வெளிப்பாடே இந்த மன்னார் மீனவர் விவகாரமாகும்.
இருபது வருடங்களுக்கு மேலாக அகதி வாழ்க்கை வாழ்ந்து தற்போதேனும் தமது சொந்த இடங்களில் குடியேற விரும்பும் வடக்கு முஸ்லிம்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் பின்னடிப்பது ஏன் என்பது புரியவில்லை.
இறுதிக் கட்டப் போர் காரணமாக இடம்பெயர்ந்த இலட்சக் கணக்கான தமிழ் அகதிகளை சர்வதேச அழுத்தங்களின் காரணமாக அரசாங்கம் உடனடியாகவே மீளக்குடியமர்த்தியது. ஆனால் இருபது வருடங்களாக அல்லல்படும் முஸ்லிம்களை மாத்திரம் மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கம் அக்கறைகாட்டாமல் நழுவல் போக்கையே கடைப்பிடிக்கிறது.
பல்வேறு தேவைகளுக்கும் அரபு நாடுகளை நாடி கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் அரசாங்கம் வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் மாத்திரம் கைவிரித்துவிடுவதன் பின்னணி என்ன என்பதுதான் புரியவில்லை.
எனவேதான் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கம் தனக்குரிய தார்மிகக் கடப்பாட்டை உணர்ந்து செயற்பட வேண்டும். அதுமாத்திரமன்றி மன்னார் உப்புக்குளம் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கமும் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட தரப்புகளும் ஒன்றிணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.
இல்லையேல் வடக்கில் மீண்டும் ஒரு இன, மத முறுகலுக்கு வித்திட்ட துரதிஷ்டவசமான வரலாறு விரைவில் எழுதப்படலாம்.
Post a Comment