முஸ்லிம் காங்கிரஸ் தனிப்பட்ட நபர்களின் ஆளுமைகளினால் கட்டிக்காக்கப்பட்ட இயக்கமா..?
by Abdul Waji
கட்சிக்குள் மீண்டும் தீவிரமடைந்து வரும் உள் முரண்பாடு.
கிழக்கு மாகாண சபை கலைக்கப்படப்போகிறது என்ற செய்தி வெளியாகிய நாளில் இருந்து தினம் தினம் பல சுவாரசியமான செய்திகளும்,பரபரப்பான செய்திகளும் வெளிவந்த வண்ணமே உள்ளன. இந்த வரிசையில் மிக அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம் அரசியலில் பேசப்பட்டு வருகின்ற ஒரு விடயம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்குள் தீவிரமடைந்து கொண்டு வரும் தலைவர்-தவிசாளருக்கிடையிலான உள் முரண்பாடாகும். இது பற்றிய ஒரு கண்ணோட்டமே இந்தப் பதிவாகும்.
ஊடகங்களில் இவ்வாறான ஒரு உள் முரண்பாடு பற்றி ஊகங்களின் அடிப்படையிலும், அனுமானங்களின் அடிப்படையிலும் பேசப்பட்டு வந்தாலும் கடந்த 20.08.2012 அன்று ஏறாவூரில் இடம்பெற்ற அமைச்சர் பசீரின் தனிப்பட்ட அரசியல் பொதுக்கூட்டமொன்றில் அவர் ஆற்றிய உரை இவ்வாறான ஒரு உள்முரன்பாட்டினை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அமைச்சர் பசீரின் உரையினை சுருக்கிப் பார்க்கும்போது அவர் சொல்ல வருகின்ற விடயத்தினை பின் வருமாறு நோக்கலாம்.
"தான் ஆயுதப் போராட்ட அரசியலிலும்,ஜனநாயக அரசியலிலும் முப்பது வருட அனுபவங்களைக் கொண்ட ஒரு பழுத்த அரசியல்வாதி.மர்ஹூம் அஷ்ரபின் காலத்திலும்,பின் ரவூப் ஹக்கீமின் காலத்திலும் கட்சி பெற்ற வெற்றிகளுக்கு வியூகம் அமைத்துக் கொடுத்த பிரதானி. தான் அமைத்துக் கொடுத்த வியூகங்களை கட்சி தட்டிக் கழித்த போதெல்லாம் அது தோல்வியே கண்டுள்ளது. கட்சிக்காக தனது மூளை வளத்தினையும், உழைப்பினையும்,சொந்தப் பொருளாதாரத்தினையும் அர்ப்பணித்துள்ள தனக்கு சில நியாயமான சுய அரசியல் விருப்பங்கள் உள்ளன. தனக்குள்ள திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தி அதனை அடைந்து கொள்வேன். தற்போதுள்ள இலங்கை அரசியல் சூழலில் கட்சியின் தலைவரை விடவும் தன்னையே இந்த அரசாங்கம் கனதியாகப் பார்க்கின்ற சூழல் உள்ளது. எனவே இத்தகைய ஒரு சாதகமான ஒரு சூழ்நிலையின் அடிப்படையிலும்,கடந்த காலங்களில் பல வெற்றிகரமான வியூகங்களை அமைத்தவன் என்ற அடிப்படையிலும் இம்முறையும் தான் நினைக்கின்ற படியே எல்லாம் நடைபெறும்." இந்த உள்ளடக்கத்தினைக் கொண்ட உரையின் இறுதிப் பகுதியில் தான் செயற்படுத்த நினைத்துக் கொண்டிருக்கின்ற வியூகத்தின் ஒரு அங்கமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் சாகிர் மௌலானாவை வெல்ல வைக்க வேண்டுமென்ற தனது விருப்பத்தினை வெளிப்படையாகவும் மிக இலகுவாக விளங்கிக் கொள்ளும் வகையிலும் தான் கட்சியின் பொறுப்புவாய்ந்த தவிசாளர் என்ற அடிப்படையில் இது கட்சியின் அடிப்படைகளுக்கு முரணானது என்ற எதுவித தயக்கமும் இன்றி கூறி முடிக்கின்றார்.
இந்த உள்முரண்பாடுகளின் பின்னணி என்ன?
கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் மரணத்தோடு கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியிலும் தோன்றிய புதிய நிலைமைகளும், உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டிருந்த புதிய திருப்பங்களும்,அதனையொட்டிய வெளிநாட்டு சக்திகளின் விருப்பங்களும் புதிதாக தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த ரவூப் ஹக்கீமுக்கு பசீர் சேகுதாவூத் அவர்களை தனக்கு நெருக்கமாக வைத்துக் கொண்டு அரசியல் செய்ய வேண்டிய ஒரு கட்டாய சூழலை ஏற்படுத்தியிருந்தது. இந்த தவிர்க்க முடியாத சூழலுக்குள் சிக்கிக் கொண்ட ரவூப் ஹகீம் அவர்கள் அப்போது அரசு-புலி ஜெனீவா பேச்சவார்த்தை நடைபெற்று வந்த சூழலில் பசீர் சேகு தாவூதை தனது தலைமைத்துவ இருப்புக்கு பயன்படுத்திக் கொண்ட அதே வேளை, பசீர் சேகு தாவூதும் அதற்குப் பகரமாக தனது சொந்த அரசியல் இலக்குகளை அடைவதற்கு தலைவர் ரவூப் ஹகீம் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார்.
இந்த சூழலில் அரசு-புலி பேச்சுவார்த்தையில் அதிருப்தி கண்ட கட்சிக்குள் இருந்த ஒரு பிரிவினரும், பசீர் சேகு தாவூத் அவர்களின் சொந்த அரசியலுக்காய் பலியாக்கப்பட்ட அல்லது ஓரங்கட்டப்பட்ட ஒரு பிரிவினரும் கட்சிக்குள் இருந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்டத் துவங்கியிருந்தனர். தமது எதிர்ப்புகளுக்கு எவ்வித பலாபலன்களும் கிடைக்கவில்லை எனக் கண்ட இந்தப் பிரிவினர் கட்சித் தலைவருடன் முரண்பட்டு கட்சியை விட்டு வெளியேறத் துவங்கினர். அன்றிலிருந்து இன்று வரை "பசீரின் பிடியில் ஹகீம் சிக்குண்டுள்ளார்", "கட்சியின் முடிவுகளில் பசீர் செல்வாக்குச் செலுத்துகின்றார்", "பசீரின் தீர்மானங்களின் அடிப்படையிலேயே கட்சி வழி நடாத்தப்படுகின்றது","கட்சியின் தீர்மானங்களில் பசீரின் ஆதிக்கம் கட்சியை பிளவு படுத்தி, பலவீனப்படுத்துகிறது" போன்ற விமர்சனங்கள் கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் தீவிரமடைந்து வந்துள்ளன. இது தொடர்பில் கட்சியின் தலைவருக்கு மிக நெருக்கமான புத்தி ஜீவிகளும்,அபிமானிகளும் அவரை எச்சரித்த போதிலும் கூட அதனை அவர் அவர் தட்டிக் கழித்தே வந்துள்ளார்.
தலைவர்-தவிசாளர் விரிசல் தற்போதுதான் வெளிப்படையாகத் தெரிந்திருந்தாலும் கூட அது கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்துக்கு முன்பே கருக்கட்டத் துவங்கி, உறங்கு நிலையில் இருந்து வந்ததாக முஸ்லிம் காங்கிரசின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கட்சி தலைவரின் தயவின்றி (தேசியப் பட்டியல்) பசீர் சேகு தாவூத் தனது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேறொரு உபாயத்தினை கைக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். எனவே, இலங்கையின் 18 வது அரசியல் சீர் திருத்த யாப்பு சமர்ப்பிக்கப்பட இருந்த வேளையில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரோடு நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட பசீர் சேகு தாவூத் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம்,ஹரீஸ் ஆகியோரை இணைத்துக் கொண்டு அரசாங்கத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக முஸ்லிம் காங்கிரஸ் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரவூப் ஹக்கீமின் காய் நகர்த்தல்கள் அதனை தடுத்து விட்டதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், மிக அண்மைக் காலமாக அரச சக்திகளாலும்,தம் சுய அரசியல் நலன் சார்ந்து கட்சிக்குள் இருந்து கொண்டு அரசுடன் ஒத்துழைப்பவர்களாலும் அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப தீர்மானங்கள் திணிக்கப்பட்டு வருகின்ற நிலையில்,கட்சி தொடர்ச்சியாக பலவீனமடைந்து கொண்டே வருகின்றது என்ற விமர்சனம் கட்சியின் அதி உயர்பீடத்துக்குள்ளும்,கட்சியின் ஆதரவுத் தளங்களிலும் மிகவும் வலுவடைந்து வந்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் தலைவருக்கு கட்சியின் சகல மட்டங்களில் இருந்தும் குறிப்பாக அதன் ஆதரவுத் தளத்தில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்துள்ளன. இந்நிலையில்தான் நிகழ்வுகளின் போக்குகளையும் அதன் எதிர்கால அபாயங்களையும் நிதர்சனமாக உணர்ந்து கொண்ட ரவூப் ஹகீம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுப்பதோடு, தனது அரசியல் அணுகுமுறைகளையும் மாற்றியே ஆக வேண்டிய மிகவும் கட்டாயமான சூழலுக்குள் தள்ளப்பட்டிருந்தார்.
இவ்வாறான ஒரு சூழலில்தான் கிழக்கு மாகாண சபை கலைப்பு தொடர்பான ஊகங்களும், அதனையொட்டிய "முஸ்லிம் முதலமைச்சர்" கோசங்களும் கிழக்கில் களைகட்டத் துவங்கியிருந்தன. இந்தக் காலப்பகுதியிலேயே "கிழக்கின் முதலமைச்சர் வேட்பாளர் ரவூப் ஹகீம்தான்" என அரசாங்கம் ஒருதலைப் பட்சமாக அறிவித்திருந்தமையும், அதனை ரவூப் ஹகீம் மறுத்திருந்தமையும் இங்கு நினைவு கூறத்தக்கது. இந்தக் கால கட்டத்தில் நபர்களும், அரசியல் கட்சிகளும் தம் சுய அரசியல் நலன் சார்ந்தும் கட்சி நலன் சார்ந்தும் இரகசியமாகவும்,வெளிப்படையாகவும் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதிலும்,வியூகங்களை அமைப்பதிலும் ஈடுபடத் துவங்கியிருந்தனர்.
இந்தக் கால கட்டத்தில் பசீர் சேகு தாவூத் அவர்கள் அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்களுள் பிரதானமான ஒருவரும்,ஜனாதிபதியின் சகோதரருமாகிய பசில் ராஜபக்சவை சந்தித்து பேச்சவார்த்தைகளை நடாத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து வந்த நாட்களில் அமைச்சர் பசீர் சேகு தாவூத் ஏறாவூர் நகர சபை தவிசாளரும் சுதந்திரக் கட்சியமைப்பாளருமாகிய சாகிர் மௌலானாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட வைப்பதற்கு கட்சியின் ஒப்புதல் இன்றி தனிப்பட்ட முறையில் மேற்கொண்டு வந்தார். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடு சேர்ந்தே போட்டியிட வேண்டுமென்று வழமை போல் பசீர் சேகு தாவூதினால் திணிக்கப்பட்ட முடிவும், மௌலானாவை முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட வைக்க வேண்டுமென்ற அவரது தனிப்பட்ட அரசியல் நலன் சார்ந்த முடிவும் கட்சி உயர் மட்டங்களிலும், சமூக இணைய வலைப்பின்னல்களிலும் பலமாக விமர்சிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் தொடர்ச்சியாக தனது ஆட்சேபத்தினை தெரிவித்து வந்ததோடு கிழக்கு மாகாணத்திலிருந்து ஹசன் அலி அவர்களது நிலைப்பாட்டுக்கான ஆதரவும் அதிகரித்து வந்தது. இந்நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அவரது ஆலோசகர்களும் கட்சி முக்கியஸ்தர்களும், அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டினை முறித்துக் கொள்வதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இக்கட்டத்தில்தான் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலில் தமக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கித் தரப்பட வேண்டுமென்ற முஸ்லிம் காங்கிரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸ் தாம் தனித்துப் போட்டியிடுகின்ற முடிவை வெளியிட்டதை தொடர்ந்தும் பசீர் சேகு தாவூதின் முயற்சி தோல்வி கண்டது.
மௌலானாவுக்குப் பின் மறைந்திருக்கும் பசீர் சேகு தாவூதின் அரசியல் என்ன?
மாறிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசினது உள்ளக நிலைமைகளும்,ஆதரவுத் தளங்களும் இனிமேலும் தனக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை என்பதை துல்லியமாக விளங்கிக் கொண்ட பசீர் சேகு தாவூத் மௌலானா அவர்களை வைத்து தனது அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பதற்கான வியூகங்களை அமைத்தார். அதற்கான அரச உயர் மட்ட அங்கீகாரமும் கிடைத்திருந்தது. அதாவது, சுதந்திரக் கட்சி உறுப்பினராகிய மௌலானாவை முஸ்லிம் காங்கிரசில் போட்டியிட வைத்து வெல்லச் செய்து முதலமைச்சராக்குவது. அவ்வாறு செய்யும்போது தனது பிறந்த மண்ணிலே பெரும் வாக்கு வங்கியை வைத்திருக்கின்ற, தனது அரசியல் வாழ்வுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகின்ற மௌலானாவை முதலமைச்சர் ஆசனத்துக்குள் முடங்கச் செய்து விட்டு அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மௌலானாவின் ஆதரவாளர்களின் வாக்குகளின் உதவியோடு பாராளுமன்றம் சென்று தனது நீண்ட நாள் கனவாகிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவியைப் பெறுவது என்பதே அந்த வியூகமாகும்.
ஆனால் கட்சிக்குள் அவரது முனைப்பு தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து கட்சிக்குள் உருவாகியிருக்கும் புதிய நிலைமைகளும் பசீர் சேகு தாவூத் அவர்களின் முஸ்லிம் காங்கிரஸ் அரசியலை மேலும் கேள்விக் குறியாக்கி விட்டுள்ளது. மர்ஹூம் அஷ்ரப் அவர்களோடு நெருக்கமாக இருந்தவரும் கட்சியின் முன்னாள் அதியுயர் பீட உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹ்மதின் மீள் இணைவும்,மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக அவர் களம் இறக்கப்பட்டமையும் அமைச்சர் பசீர் சேகு தாவூதுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.
எனவேதான், தற்போது தன்னை சுதாகரித்துக் கொண்டுள்ள அமைச்சர் பசீர் சேகு தாவூத் இந்த தேர்தலில்,
1. தனது முன்னாள் அரசியல் எதிரியான ஹாபிஸ் நசீர் அஹ்மதை தோற்கடிப்பது
2. அலி சாகிர் மௌலானாவை வெல்ல வைப்பதோடு தேர்தலில் வெற்றி பெரும் ஓரிரு உறுப்பினர்களோடும் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களோடும் அரசாங்கத்துடன் இணைந்து தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை பெறுவது.
ஆகிய வியூகங்களின் அடிப்படையில் தனது அடுத்த கட்ட நகர்வில் இறங்கியுள்ளார். இதன் வெளிப்பாடே அண்மையில் ஏறாவூரில் அவர் ஆற்றிய உரையாகும்.
கட்சி என்ன செய்யப் போகிறது?
பசீர் சேகு தாவூதின் உரையானது அவரது சொந்த அரசியல் நலன்களுக்காக செய்யப்பட்ட ஒரு உபாயமாக யாரும் இலகுவில் தட்டிக் கழித்து விட முடியாது. கட்சியின் பொறுப்பு வாய்ந்த ஒரு பதவியில் இருக்கும் அவரது உரையானது கட்சியின் மரபுகளையும்,கட்டுக் கோப்புகளையும் தகர்த்து எறிந்துள்ளதோடு அதன் தலைமைத்துவத்துக்கும் சவால் விடுத்துள்ளது.மாத்திரமல்லாது ஒரு தனி மனிதனின் ஆளுமையின் மூலம் அவரது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப கட்சியினை வழி நடாத்திச் செல்ல முடியும் என்ற விம்பத்தினையும் கட்டமைத்துள்ளது. இது அக்கட்சியின் மீது ஆதரவாளர்களுக்கு எஞ்சியிருக்கின்ற எச்ச சொச்சங்களையும் சிதைத்து விடுகின்ற ஒரு ஆபத்தான சமிக்ஞையாகும்.
அமைச்சர் பசீர் சேகு தாவூதின் உரை மீதான தன்னிலை விளக்கத்தினை அதன் ஆதரவாளர்களுக்கு அளிக்க வேண்டியது அக்கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்களையே சார்ந்து நிற்கின்றது. அவ்வாறில்லாதவிடத்து அது ரவூப் ஹகீம் அவர்களின் தலைமைத்துவ பண்புகள் மீதும்,ஆளுமையின் மீதும் பசீர் சேகு தாவூத் அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்ற கேள்விக்குறியினை உண்மைப்படுத்துவதோடு,அஷ்ரபின் மரணம் முதல் இன்று வரை இக்கட்சியானது பசீர் சேகு தாவூத் என்ற ஒரு தனி மனிதனின் ஆளுமையின் தயவில்தான் நிலை பெற்றிருந்தது என்ற அவரது உரிமை கோரலையும் உண்மைப்படுத்துவதாக அமையும்.
கட்சி சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்த போதெல்லாம் அதனை தங்கள் தோள்களின் மீதே சுமந்தோம் என ஆத்ம திருப்தியடையும் போராளிகளும்,ஆதரவாளர்களும் இனிமேலும் விடயங்களை நிகழ்வுகளின் போக்குகளுக்கு விட்டு வைத்து விட முடியாது. இவ்வாறான எதாச்சாதிகாரமான போக்குகளை தடுப்பதற்கான ஜனநாயக வரைமுறைகளுக்குற்பட்ட அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்தே ஆக வேண்டும்.அவ்வாறு செய்யும்போது மாத்திரமே கட்சியின் மீது இருக்கின்ற சொற்ப நம்பிக்கைகளையேனும் காப்பாற்றிக் கொண்டு அதனை புனர் நிர்மாணம் செய்து கொண்டு அவர்கள் விரும்புகின்ற இலக்கை நோக்கி பயணிக்க முடியும்.இல்லாவிடின் இக்கட்சியானது வெறுமனே பாராளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும்,பிரதியமைச்சர்களையும் உற்பத்தி செய்கின்ற ஒரு தொழிற்சாலையாகவும், மக்கள் அவர்களை உற்பத்தி செய்கின்ற இயந்திரங்களாகவுமே பார்க்கப்படுகின்ற நிலைமை தவிர்க்க முடியாமல் போகும்.
முகவுரையா? அல்லது முடிவுரையின் ஆரம்பமா??
ஏறாவூரில் பசீர் சேகு தாவூத் ஆற்றிய உரையை தனது முப்பது வருட கால அரசியல் வரலாற்றின் முகவுரையாக குறிப்பிட்டிருந்தார். ஆனால்,தற்போது மாறிக்கொண்டு செல்லும் கள நிலவரங்கள் இது அமைச்சர் பசீர் சேகு தாவூதின் அரசியல் வாழ்வின் முடிவுரையாக இருக்கலாம் என்ற ஊகத்தினை அரசியல் வட்டாரங்களில் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதனை உறுதிப்படுத்துவதாகவே சமூக வலை தளங்களில் கருத்தாளர்களால் கருத்துரைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தவிரவும் ஏறாவூர் முஸ்லிம் காங்கிரசின் கோட்டை என்று வர்ணிக்கப்படுகின்ற மையப்பகுதியில் அமைச்சர் பசீர் சேகு தாவூதின் கொடும்பாவி எரிக்கப்பட்டமையும்,கிழக்கின் பல்வேறு பிரதேசங்களிலும் எழுந்து வரும் எதிர்ப்பலைகளும் இதனையே சொல்லுகின்றன.
இனி வருங்காலங்களில் அமைச்சர் பசீர் சேகு தாவூதின் அரசியல் வாழ்வு என்பது இத்தேர்தலில் அலி சாகிர் மௌலானா, நசீர் ஹாபிஸ் ஆகியோரின் வெற்றி தோல்விகளிலேயே தங்கியுள்ளது. எனவே, இது அமைச்சர் பசீர் சேகு தாவூதின்அரசியல் வாழ்வின் புதிய அத்தியாயத்தின் முகவுரையா அல்லது அரசியல் வாழ்வின் முடிவுரையா என்பது அடுத்து வாரங்களுக்குள் தீர்மானிக்கப்பட்டு விடும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்
மிக அருமையான கண்ணோட்டம்.தலைவர் ரவூப் ஹகீம் அவர்கள் கடந்த காலங்களில் எவ்வாறு ஒரு சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டிருந்தார் என்பதற்கும்,பசீர் சேகு தாவூத் எப்படி உள்ளுக்குள் இருந்து கொண்டே கட்சியை அழித்துள்ளார் என்பதற்கும் இக்கட்டுரை சாட்சி பகர்கிறது.
ReplyDeleteபசீர் சேகு தாவூத் தனது சொந்த அரசியல் வியூகத்துக்காக இந்தக் கட்சியை பயன்படுத்துவதற்கு இது ஒன்றும் அவரது பரம்பரை சொத்து அல்ல. இது அவர் ஈரோசில் இருந்து அரசியல் செய்த காலத்தில் பல போராளிகளின் இரத்தத்தினாலும்,வியர்வயினாலும் கட்டி எழுப்பப்பட்ட இயக்கம். இனிமேலும் சந்தர்ப்பவாதிகளின் பித்தலாட்டங்களுக்கு இக்கட்சியை பலியாக்க முடியாது. இத்தகைய உள்ளிருந்து கருவறுக்கும் துரோகிகளிடம் இருந்து கட்சியை மீட்டெடுத்து தலைவரிடம் ஒப்படைப்போம். சமூகத்தின் பெயரால் அனைவரும் ஒன்றுபட்டு சதிகளை முறியடிப்போம்.இதற்கான போராட்டத்தில் அனைவரும் ஒற்றுமைப்பட்டு வீதிகளுக்கு இறங்குவோம்.
இலங்கையில் முப்பது வருடமாக நடந்து முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன போரில் அரச படைகளால் கொல்லப்பட்ட மக்களை விட கூடுதல் தொகையான மக்களை தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அநியாயமாகக் கொன்றொழித்தனர். அதைவிட அரச படைகள் செய்யாத மிகக் கொடூரமான கொலைகளையும் அநியாயங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் செய்தனர் - முஸ்லீம் மக்களை பள்ளிவாசல்களிலும், அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களிலும் நூற்றுக்கணக்கில் கோரமாகக் கொலை செய்ததுடன், வடக்கில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லீம்களை பூண்டோடு இரண்டு மணி அவகாசத்தில் வெறும் கையுடன் விரட்டி அவர்களின் பெறுமதிவாய்ந்த சொத்துக்களை கொள்ளையடித்தனர்
ReplyDeleteசிறுபான்மை மக்கள் சிங்களப் பேரினவாதத்தை எதிர்க்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, இலங்கையில் பேரினவாதத்தை எண்ணையூற்றி கொழுந்துவிட்டு எரியவைத்த ஐக்கிய தேசியக் கட்சி பேரினவாதிகளுடன் கள்ளக்கூட்டு வைத்திருக்கிற பிரபாகரனால் உருவாக்கப்பட்ட இனவாத தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவது என்பது, ‘கண்களை விற்று சித்திரம் வாங்கிய’ கதையாகவே முடியும்.
- நல்லையா தயாபரன்
அடே.......ங்கப்பா. குடுமி சும்மா அடவில்லை.
ReplyDeleteநிட்சயமாக இது ஒரு முடிவுரை தான்... ஹக்கீமின் தலைமைதுவதில், இது வரை எடுத்த முடிவுகளில் இந்த தனித்து போட்டி இடுவது என்ற ஒரு முடிவு தான் நல்ல முடிவு, இதற்கு முந்திய அனைத்தும் முஸ்லிம் சமூகத்துக்கு தோல்விகளும் தலைகுனிவும் தான் ... இறைவன் நல்ல ஒரு சந்தர்பத்தை தலைவருக்கு கொடுத்துள்ளான்,,, இந்த முனாபிக்கிடம் இருந்து முஸ்லிம் சமூகத்தை காப்பற்றுவதட்கு... தலைவரே உடன் செயற்படுங்கள்.. அல்லாஹு அக்பர்.. அல்லாஹு அக்பர்.... அல்லாஹு அக்பர்
ReplyDeleteபஷீர் சேகுதாவுத் -
ReplyDeleteமட்டக்களப்பின் அதாஉல்லா