Header Ads



லெபனானில் சுன்னி - ஷியா பிரிவினரிடையே மோதல்

 
TN

சிரிய விவகாரத்தில் பிரிந்து செயற்படும் இரு குழுக்களுக்கிடையில் அயல் நாடான லெபனானில் மோதல் மூண்டுள்ளது. வடக்கு லெபனானில் இரு முஸ்லிம் பிரிவுகளுக்கு இடையில் தொடரும் இந்த மோதலில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
 
சுன்னி முஸ்லிம் பிரிவுக்கும் அலாவிட் ஷியா பிரிவினருக்கும் இடையில் லெபனானின் திரிபோலி நகர் வீதிகளில் இரண்டாவது நாளாக மோதல் நீடிப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. சிரியாவில் தொடரும் மோதல்களுக்கு இரு தரப்புக்கும் பிரிந்து நின்று ஆதரவு தெரிவிக்கும் இந்த இரு பிரிவினரும் எல்லைப் பகுதிகளில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அலாவிட் ஷியா பிரிவைச் சேர்ந்த சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அங்கு பெரும்பான்மையாக உள்ள சுன்னி முஸ்லிம் போராளிகளை ஒடுக்க கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக போராடி வருகின்றார்.
 
இந்நிலையில் லெபனான் பிரதமரான சுன்னி பிரிவைச் சேர்ந்த பிரதமர் நஜிப் மிகாதி திரிபோலியில் தொடரும் மோதலை உடன் நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். லெபனானின் இரண்டாவது மிகப் பெரிய நகரான திரிபோலியில் சுமார் 200,000 பேரளவில் வசித்து வருகின்றனர்.
 
‘வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுக்கின்றேன். இது லெபனான் முழுவதும் பரவிவரும்’ மோதல்களுக்காக ஆயுதங்களை கொண்டு செல்ல எவருக்கும் அனுமதிக்க வேண்டாம் என திரிபோலி வாசிகளை கேட்டுக்கொள்கிறேன்’ என லெபனான் பிரதமர் கோரினார்.
 
லெபனானின் சுன்னி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளான பாப் அல் தப்பான மற்றும் அலாவித்தின் ஜபல் முஹ்ஸின் பகுதிகளில் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதோடு நேற்று முன்தினம் இரவு கையேறி குண்டு தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. இதில் ஜபல் முஹ்சின் பகுதியைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு அதிக சுன்னி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
 
எனினும் இந்த மோதலை கட்டுப்படுத்துவதில் பாதுகாப்பு படையினர் தோல்வியடைந்துள்ளதாக மேற்படி நகர குடியிருப்பாளர் ஒருவர் பி.பி.சி. தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். ‘காலைவேளையில் அமைதியாகவே உள்ளது. ஆனால் இரவானதும் அவர்கள் செயற்பட ஆரம்பிக்கிறார்கள். இந்த மோதல் தற்போது முடிந்தபாடில்லை. அதனை அடக்குவதில் இராணுவத்தினரும் தோல்வியடைந்துள்ளனர்.
 
இந்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவம் பின்வாங்கியது. இந்த தாக்குதலில் 9 இராணுவத்தினர் காயமடைந்தனர்’ என்று அந்த குடியிருப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
திரிபேலி லெபனானில் அதிக மதப்பிரிவு மோதல்கள் இடம்பெறும் பகுதியாகும். இங்கு பெரும்பான்மையாக உள்ள சுன்னி பிரிவு முஸ்லிம்களுக்கு மத்தியில் அலாவிட் பிரிவினர் வசித்து வருகின்றனர். இங்கு அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டாலும் கடந்த இரு தினங்களாக குறிப்பிடத்தக்க அளவு மோதல் தொடர்வதாக அங்கிருக்கும் பி.பி.சி. செய்தியாளர் குறிப்பிட்டார்.
 
இதில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் நகரின் பெரும் பகுதியில் இந்த மோதல் நீடிப்பதாகவும் குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகள் சிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட லெபனானில், அந்நாட்டு அரசு சிரிய மோதல் குறித்து நடுநிலை கொள்கையை கடைபிடித்து வருகிறது. ஆனால் சிரியாவை எல்லையை ஒட்டிய லெபனான் பகுதிகளில் மோதல்கள் பரவுவதை அரசால் தடுக்க முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த வாரம் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த கும்பல் ஒன்று பல சுன்னி முஸ்லிம் பிரிவினரை கடத்திச் சென்றனர். சிரியாவில் லெபனானி ஷியா முஸ்லிம் ஒருவரை கடத்தியதற்கு பதில் கொடுக்கும் வகையிலேயே இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றது.
 
இதில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ஹஸன் அல் மக்தத் என்பவர் லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் இவர் அசாத் அரசுக்காக போராட சிரியா வந்திருப்பதாகவும் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். எனினும் இந்த குற்றச்சாட்டை ஹிஸ்புல்லா அமைப்பு மறுத்தது.
 
இதனிடையே சிரியாவின் மிகப் பெரிய நகரான அலப்போவில் நேற்றைய தினத்தில் இரு தரப்பு மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படை ஆகிய இரு தரப்பும் அலப்போவின் பெரும் பகுதியை கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். அரச படையின் வான் தாக்குதல், எறிகணை தாக்குதல்களுக்கு மத்தியில் அலப்போ நகரின் மூன்றில் இரண்டு பகுதி தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதக கிளர்ச்சியாளர்களின் சிரிய சுயாதீனப் படை குறிப்பிட்டுள்ளது.
 
“நகரின் 60 வீதமான பகுதி எமது கட்டுப்பாட்டில் உள்ளது. நாளுக்கு நாள் நாம் புதிய மாவட்டங்களை கைப்பற்றி வருகின்றோம்” என்று சுயாதீனப் படையைச் சேர்ந்த கொலனல் அப்தல் ஜப்பார் அல் ஓகைதி குறிப்பிட்டுள்ளார். அலப்போவின் 30 மாவட்டங்கள் அளவில் தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
எனினும் சிரிய பாதுகாப்பு பிரிவினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். கிளர்ச்சியாளர்கள் முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அரச தரப்பு கூறியதாக ஏ. எப். பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. சிரியாவில் நேற்று முன்தினம் நாடு பூராகவும் இடம்பெற்ற வன்முறைகளில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் கூறிப்பிட்டுள்ளனர்

1 comment:

  1. இஸ்லாத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளாமலும், ஜிஹாத் என்றால் என்ன என்பதை அறியாமலும், ஷீயாக்களின் பிறப்பை புரியாமலும் இருந்துகொண்டு, ஹசன் நஸ்ருல்லாஹ்வை கதாநாயகனாகவும், ஹிஸ்புல்லாக்களை ஜிஹாதிய போராளிகளாகவும் தப்பாக கற்பனை பண்ணிக்கொண்டு இருப்பவர்கள், தங்களின் கண்களைத் திறக்க வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டு வருகின்றது, இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete

Powered by Blogger.