பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி புதுக் கட்சி ஆரம்பிததார்
பாகிஸ்தானில் அணு விஞ்ஞானி கான், புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். இவரது கட்சிக்கு, "தெஹ்ரிக்-இ-தகாஃபஷ் பாகிஸ்தான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் கான்.
இதுபற்றி, அணு விஞ்ஞானி ஏ.யூ. கான் கூறுகையில், வரும் தேர்தலில் நல்லவர்களை தேர்வு செய்ய இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கள் கட்சி சார்பில் பிரசாரம் மேற்கொள்ளப்படும். யாருக்கு வாக்களிக்கலாம், யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பது பற்றி இளைஞர்களுக்கு வழிகாட்டுவோம்.
ஏற்கெனவே உள்ள கட்சிகள் மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன. குறிப்பாக பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சிக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று இளைஞர்களிடம் வலியுறுத்துவோம் என்றார் கான்.
முன்னாள் ராணுவத் தளபதி மிர்ஸ அஸ்லம் பெய்க், காஷ்மீர் முன்னாள் பிரதமர் சர்தார் அதிக் அகமது கான் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் கலந்தாலோசித்த பின்னர், புதிய கட்சியை கான் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவருமான இம்ரான்கானுக்கு கான் நெருக்கமானவர் ஆவர்.
அணு ஆயுத ரகசியங்களை வடகொரியா மற்றும் லிபியா நாடுகளுக்கு கொடுத்ததாக கான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த 2004-ம் ஆண்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இப்போதைய அரசு அவரது வீட்டுக் காவல் நிபந்தனைகளைத் தளர்த்தியுள்ளது. இதையடுத்து, சமீபகாலமாக அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
Post a Comment