Header Ads



முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை தடுக்க முடியாது - ரூபிகா சாந்தனி

நூர் ஷிபா

கிழக்கு மாகாணத் தேர்தல் அண்மித்து வரும் வேளையில் அங்கு ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக அமையுமென எதிர்பார்க்கப்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதான வன்செயல்கள் அங்குமிங்கும் தலைதூக்குவதாக முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளன.

நேற்றிரவு (21) 11.30 மணியளவில் திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்தில் 12 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் திருமதி. ரூபிகா சாந்தனி என்ற வேட்பாளரின் வேன் வாகனத்திற்கு தீமூட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்த வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளது.

திருமதி ரூபிகா இரவு 11.30 மணியளவில் அந்த வேன் தீப்பற்றி எரிவதை தாம் வீட்டிலிருந்து அவதானித்ததாகவும் உடனடியாக 119 என்ற அவசர பொலிஸ் இலக்கத்திற்கு அதுபற்றி அறிவித்ததாகவும், பரவிய தீயை அயலாரின் உதவியுடன் அணைத்ததாகவும் கூறினார்.

மகளின் வீட்டில் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த தமது கணவரும், மகனும், மருமகளும், குழந்தைகளும் தெய்வாதினமாக ஆபத்திலிருந்து தப்பிவிட்டுதாக அவர் கூறினார்.

தமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு இந்த அசம்பாவிதத்தை தாம் கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் சொன்னார்.   பொலிஸார் இது தொடர்பான வாக்குமூலங்களை இரவும், இன்று காலையும் பதிவு செய்ததாகவும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு பந்துல விஜயவர்தன, தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் திரு. அருண, திருகோணமலைக்கு பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. நூலக ரத்னாயக்க, அப் பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ உயர் அதிகாரி உட்பட பலர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் திருமதி. ரூபிகா தெரிவித்தார்.

தமது கட்சிக்கும் தமக்கும்  திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் ஆதரவை சகித்துக்கொள்ள முடியாத தீய சக்திகளே இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இவ்வாறான கோழைத்தனமான செயல்களால் முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை தடுத்து நிறுத்துவிட முடியாதெனவும் கூறினார்.

இவ்வாறிருக்கத்தக்கதாக அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் தியபெதும என்ற கிராமத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அலுவலகமொன்று எரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிலால் டி சில்வா, கட்சியின் தெஹியத்தகண்டிய சிங்களப் பிரதேச அமைப்பாளர் எம்.எப்.எம். ரவூப் ஆகியோர் தெரிவித்தனர். அந்த முஸ்லிம் காங்கிரஸ் கிளையின் செயலாளர் சுனில் என்பவருக்கு சொந்தமான இடத்திலேயே அந்த அலுவலகம் அமைந்திருந்தது.

ஏறாவூரிலும் முஸ்லிம் காங்கிரஸ் தீவிர ஆதரவாளர் ஒருவரின் கடை எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

No comments

Powered by Blogger.