Header Ads



முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையானாலும் ஜனாதிபதியுடன்தான் பேசித் தீர்க்க வேண்டும்



TM
எம்.சுக்ரி
நான் பிரதியமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்தேன் என்பதற்காக ஸ்ரீலங்காக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய பஷீர் சேகுதாவூத்,
"நான் பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தேன் என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என யாரும் கூற முடியாது.
ஏனெனில் இன்று முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அதை அரசாங்கத்துடனும் ஜனாதிபதியுடனும் தான் பேசித் தீர்க்க வேண்டும். அது பள்ளிவாயல் பிரச்சினையாக இருந்தாலும் சரி, அல்லது முஸ்லிம்களுக்கு வேறு எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி அதை இன்றைய ஜனாதிபதியிடம் தான் பேசித் தீர்க்க வேண்டும்.
அன்று ரனில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரிடம் பேசினோம். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரிடம் பேசினோம். தற்போது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கின்றார் அவரிடம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் அமைச்சர் பதவியை பயன்படுத்த வேண்டும்.
ஒரு அமைச்சராக இருப்பவரால் ஜனாதிபதியிடம் இலகுவாக நேரத்தை பெற்றுக்கொள்ள முடியும் அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்யக் கூடாது என்பதே எனது கருத்தாகும்.
இந்த தேர்தலில் வேட்பாளர் நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் கிழக்கு மாகாண சபை தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது என்ற ஆலோசனை நடாத்தப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்பதாயின் தனித்துவமாக அரசியல் வேண்டும். அரசாங்கத்தை எதிர்ப்பதாயின் அரசாங்க வளங்களை பயன்படுத்த கூடாது என நான் ஆலோசனை கூறினேன்.
அந்த ஆலோசனையை நான் கூறியவன் என்ற வகையில் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்து எனக்குரிய அமைச்சு வாகனங்களையும் கையளித்துவிட்டு சுத்தமாக தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார நடவடிக்கையில் இறங்கியுள்ளேன்.
அதற்காக தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என்பதல்ல. நான் அந்த ஆலோசனையை கூறியவன் என்ற வகையில் நான் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளேன்.
எனது பிரதியமைச்சர் பதவியின் இராஜினாமாவை பயன்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்தி கட்சியின் தலைவரை இக்கட்டுக்குள் தள்ள சிலர் முயற்சி செய்கின்றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை சுய விமர்சமுள்ள கட்சியாக மாற்றியவன் நான். அன்று மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் முன்னிலையில் கட்சியின் விமர்சன மாநாட்டை நடாத்திக் காட்டியவன் நான்.
மறைந்த தலைவர் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் தேம்பி தேம்பி அழுது கண்ணைத்துடைத்துக் கொண்ட மாநாட்டை நடாத்திக் காட்டியவன் நான். தேம்பி தேம்பி எல்லோரும் அழுத வரலாற்றை முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் மறக்கமாட்டாது.
நான் பேசிய பேச்சுக்களை சரியாக விளங்கிக்கொள்ளாத சிலர் இங்கு வந்து நான் பாவ மன்னிப்பு கேட்கின்றேன் என்று கூறியுள்ளனர். இந்த கட்சியை பயன்படுத்தி பின் கதவால் சென்று கட்சியையும் சமூகத்தையும் காட்டிக்கொடுத்து அமைச்சர் பதவியை பெற்றவன் அல்ல நான் என்பதை தெளிவாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
இந்தக்கட்சியை பாதுகாக்க நான் செய்த தியாகங்களை இந்த கட்சி நன்கு அறியும். தலைவர் மற்றும் செயலாளர் நோர்வேயில் நின்ற போது இந்த கட்சியை பிடிப்பதற்கு அதாவுல்லா போன்றோர் எடுத்த சதி நடவடிக்கையிலிருந்து துணிச்சலான எனது நடவடிக்கையினால் இந்த கட்சியையும் தலைமையையும் பாதுகாத்தவன் நான்.
இந்த கட்சியை மலினப்பத்த யாருக்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம். இந்த தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றியீட்ட செய்ய வேண்டும். காத்தான்குடியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 15,000 வாக்குகளையும் கல்கடா தொகுதியில் 15,000 வாக்குகளையும் ஏறாவூரில் 10,000 வாக்குகளையும் பெற்று அமோக வெற்றி யீட்டுவோம்" என்றார்.

No comments

Powered by Blogger.