Header Ads



சிரியாவின் பாரம்பரிய நகரம் அழிகிறது..! ஈரானிய உளவாளிகளே கடத்தப்பட்டார்களாம்..!!

உலகப் பாரம்பரிய நகரமான அலெப்போ மீது சிரியா ராணுவத்தினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் அனைத்தும் சேதமடைந்து வருகின்றன என்று அரசு எதிர்ப்புப் படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அரசை எதிர்த்துப் போராடும் சிரியன் தேசியக் குழு தெரிவித்துள்ளதாவது,

வரலாற்று சிறப்பு வாய்ந்த அலெப்போ நகரத்தில் ராணுவத்தினர் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். சிரியாவின் வர்த்தக தலைநகரான அலெப்போ, அரசு எதிர்ப்புப் படையினர் வசம் இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது. அரசுக் கட்டடங்கள், தொலைக் காட்சி நிலையம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை குண்டு வீசி தாக்கப்படுகின்றன. இத்தாக்குதலுக்கு பாரம்பரியமிக்க இடங்களும் தப்பவில்லை. 13-வது நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டை உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்டடங்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நகரத்தின் வரலாற்றுச் சிறப்பை உணர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு சார்பில் உலகப் பாரம்பரிய நகரம் என்று 1986-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அலெப்போவின் பாரம்பரிய இடங்களை காப்பாற்றுவதற்காக, ராணுவத்தினரை எதிர்க்காமல் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் அரசு எதிர்ப்புப் படையினர் உள்ளனர். ராணுவ முற்றுகையால், ஹோம்ஸ் நகரில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உணவின்றி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிரியாவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அரசுக்கு எதிராக சர்வதேச நாடுகள் அணி திரள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அக்குழு தெரிவித்துள்ளது.

பக்தர்களை விடுவியுங்கள் - இதற்கிடையே சிரியாவில் எதிர்ப்புப் படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தங்கள் நாட்டைச் சேர்ந்த பக்தர்களை விடுவிக்க உதவுமாறு துருக்கிக்கு ஈரான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அலி அக்பர் சலேஹி, துருக்கி வெளியுறவு அமைச்சர் அகமது தாவூத்தை தொலைபேசியில் சனிக்கிழமை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

சிரியாவில் உள்ள சையிதா ஜெய்னாப் வழிபாட்டுத் தலத்துக்கு ஈரானைச் சேர்ந்த 48 பக்தர்கள் சென்றனர். பின்னர் நாடு திரும்புவதற்காக சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள விமான நிலையத்துக்கு பஸ்ஸில் வந்துகொண்டிருந்தபோது ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஒன்று அவர்களைக் கடத்திச் சென்றுவிட்டது. அவர்களை மீட்டுத் தர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது ஈரான். இதுபோன்று ஏற்கெனவே கடத்தப்பட்ட சிலரை துருக்கி அரசு மீட்டுக் கொடுத்துள்ளது.

சிரியாவில் நிகழும் உள்நாட்டுப் போரில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக ஈரானும், அரசு எதிர்ப்புப் படையினருக்கு ஆதரவாக துருக்கியும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பக்தர்கள் அல்ல... உளவாளிகள் - இதற்கிடையே அல்-அரேபியா தொலைக்காட்சிக்கு சிரியாவின் அரசு எதிர்ப்புப் படையினர் சார்பில் அனுப்பப்பட்டுள்ள விடியோ பதிவில், கைது செய்யப்பட்டவர்கள் பக்தர்கள் அல்ல; உளவாளிகள் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியது,

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஈரானின் எலைட் புரட்சிப் படையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எங்களை உளவு பார்ப்பதற்காக டமாஸ்கஸ் வந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளோம்'' என்றார்.

2 comments:

  1. போராளிகளுக்கு அல்லாஹ் விரைவில் வெற்றியைக் கொடுக்க அனைவரும் துஆ செய்வோமாக.

    ReplyDelete
  2. iran nallavargala kettavargala..

    ReplyDelete

Powered by Blogger.