Header Ads



தேர்தல் சரக்காக மாறிவிட்ட பௌத்த விரோத மனப்பாங்கு



(இன்றைய விடிவெள்ளி 10-08-2012 பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் இது)  

விடுதலைப் புலி பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோன்று காவியுடைப் பயங்கரவாதத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க முன்வருமாறு மு.கா. தலைவர் ஜனாதிபதிக்கு விடுத்திருக்கும் அழைப்பு பௌத்த கடும்போக்காளர்களை கடும் கோபத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

தேர்தலில் முஸ்லிம் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காகவே ஹக்கீம் இவ்வாறு கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்திருக்கிறது.

கொழும்பில் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் நல்ல பிள்ளையாக நடந்து கொள்கின்ற மு.கா. தலைவர், கிழக்குக்குச் சென்று மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் வகையில் இனவாத பிரசாரங்களை மேற்கொள்வதாகவும் ஹெல உறுமய சுட்டிக்காட்டியிருக்கிறது.

கடந்த பல மாதங்களாக பள்ளிவாசல்களை இலக்கு வைத்து பௌத்த பிக்குகள் சிலர் முன்னெடுத்துவரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் இன்று கிழக்கில் தேர்தல் பிரசார சரக்காக மாற்றம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இதற்கு முன்னர் பள்ளிவாசல் விவகாரங்கள் தொடர்பில் அமைதிப் போக்கைக் கடைப்பிடித்த அல்லது ஜனாதிபதி தீர்வு தருவார் எனச் சொல்லி வந்த முஸ்லிம் தலைமைகள் இன்று வாக்குகளுக்காக வெளிப்படையாகவே அரசாங்கத்தை விமர்சிக்கவும் பௌத்த பிக்குகளைச் சாடவும் முன்வந்திருப்பதானது அவர்களின் இரட்டை முகத்தை நன்கு அம்பலப்படுத்தியிருக்கிறது.

தேர்தலில் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட சமயம் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பௌத்த மேலாதிக்க நடவடிக்கைகள் தொடர்பில் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் ஜனாதிபதியுடனோ அல்லது அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடனோ எந்தவொரு பேச்சுவார்த்தையைத்தானும் நடத்தியிருக்கவில்லை. தமது வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமகால பிரச்சினைக்கான தீர்வைக் கேட்டு பேரம் பேச திராணியிருக்கவில்லை.

துரதிஷ்டவசமாக இன்று கிழக்கில் கால்பதித்து கூட்டம் கூட்டமாக மக்களைக் கண்டவுடன் சிலர் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார்கள். இந்த உணர்ச்சிக் கோஷங்களால் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வு வந்துவிடப் போவதில்லை.

பிரச்சினைகளைப் பேச வேண்டிய இடத்தில் பேசாதுசம்பந்தமற்ற இடங்களில் பேசுவதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. வேட்பாளர் பட்டியலில் தமது கட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களாக அரசாங்கத்துடன் முரண்டுபிடித்து பேச்சு நடத்திய முஸ்லிம் தனித்துவக் கட்சி இந்த விவகாரத்தில் மாத்திரம் எந்தவித பேரம்பேசல்களையும் மேற்கொள்ளவில்லை. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சுஜூது செய்யும் இறை இல்லங்களுக்காக வாதாட முன்வரவில்லை.

ஒருசாரார் இப்படியிருக்க என்ன நடந்தாலும் நாம் அரசாங்கத்துடன்தான் தேன் நிலவு கொண்டாடுவோம் எனக் கூறும் முஸ்லிம் தலைவர்கள் சிலர் பள்ளிவாசல்கள் தாக்கப்படவில்லை என்றும் இவற்றின் பின்னணியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாகவும் விடயத்தை திசைதிருப்பி அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி கிழக்கின் பிரதான அரசியல் பேசுபொருளாக இன்று பள்ளிவாசல்களின் தாக்குதல் விவகாரமும் பௌத்த விரோத மனப்பான்மையும் மாற்றம் பெற்றிருக்கின்றது.

இது கிழக்கு மக்களினதோ அல்லது நாட்டு முஸ்லிம்களினதோ எதிர்காலத்திற்கு ஒருபோதும் நன்மையைக் கொண்டு வரப்போவதில்லை. மாறாக இந்த இனவாதப் பிரசாரத்தின் மூலம் அரசியல்கட்சிகள் மாத்திரம்தான் நன்மையடையப் போகின்றன.

கடந்த வருடம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சரா? தமிழ் முதலமைச்சரா? என மக்கள் உணர்ச்சியூட்டப்பட்டு வாக்களிக்க உந்தப்பட்டார்கள். இன்று பௌத்த விரோதப் போக்கை வளர்த்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முற்படுகின்றன. 

பள்ளிவாசல்களுக்கு எதிராக சிலர் நடந்து கொள்கின்றார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த பௌத்தர்களையும் முஸ்லிம் சமூகத்தின் விரோதிகளாக காட்ட முற்படுவது ஆரோக்கியமானதல்ல. முஸ்லிம்களை மதிக்கின்ற, அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்கின்ற பௌத்தர்களும் பிக்குகளும் நம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நேற்று முன்தினம் கொழும்பில் விகாரை ஒன்றுக்குள் இப்தார் நடந்ததையும் அதான் ஒலிக்கப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவூட்டிப் பார்ப்பது பொருத்தமானதல்லவா?


1 comment:

Powered by Blogger.