Header Ads



தொழுகையும், உடல் ஆரோக்கியமும்

 
 
ஸய்யத் மன்ஸூர் அஹ்மத்

இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமைகளில் தொழுகையும் ஒன்று. தினமும் ஐந்துவேளை தொழ வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். இக்கடமையை பேணி, அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவின் கட்டளைக்கு கீழ்பணிந்து தினம் ஐவேளை தொழுபவருக்கு, மறுமையில் ஏராளமான நற்பாக்கியங்கள் உண்டு. இம்மையிலும் ஏராளமான நற்பாக்கியங்கள் கிடைக்கும்.

இவ்விதம் கிடைக்கும் நற்பாக்கியங்கள் பற்றி திருக்குர்ஆனிலும், திருநபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளன. எனவே, தொழுகை இம்மை மறுமை நற்பேறுகளை கொடுக்கக்கூடியதாகவே இருக்கிறது.

மேலும், தொழுகையை பேணுபவர்களுக்கு பல்வேறு நன்மைகளை ‘போனஸாகவும்’ வழங்குகிறது. அவற்றில் ஒன்றுதான், தொழுகை, தொழுகையை பேணுபவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியதாக இருப்பது!

மருத்துவரீதியாக தொழுகை மனிதர்களுக்கு எவ்விதம் உடல் ஆரோக்கியத்தை கொடுக்கிறது என்பதைத்தான் இக்கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்!

நமது உடலில் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் யாவும் உள் உறுப்புகளாக அமைந்துள்ளன. கண், காது, மூக்கு, வாய், கைகள், கால்கள் போன்றவை புற உறுப்புகளாக உள்ளன. மேலும், உடல் முழுவதும் ஒரு போர்வை போல தோலால் மூடப்பட்டிருக்கிறது. மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் உடலுக்குள் பாதுகாப்பாக அமைந்திருந்தாலும், உடலின் புற உறுப்புகளால் இவைகள் பாதிக்கப்படும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது! உதாரணமாக காற்றில் கலந்துள்ள கிருமிகள் மூக்கின் வழியாக உடலுக்குள் புகுந்து பல்வேறு உள் உறுப்புகளை பாதிக்கின்றன. பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.

ஆகாரம் உண்ணும் போது பல்வேறு கிருமிகள் வாய் வழியே உடலுக்குள் புகுந்து உள் உறுப்புகளை பாதிப்படையச் செய்கின்றன. தோலில் ஏற்படும் காயங்கள் வழியாக பல்வேறு கிருமிகள் உடலுக்குள் புகுந்து பல்வேறு வியாதிகளை ஏற்படுத்துகின்றன. எனவே, முக்கிய உறுப்புகள் யாவும் உடலுக்குள் பாதுகாப்பாக இருக்கிறதே என்று யாரும் அலட்சியமாக இருந்திட முடியாது! இருக்கவும் கூடாது! மாறாக புற உறுப்புகளையும் நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்! உடலின் புற உறுப்புகளை நாம் பாதுகாக்க அவசியமானது உடல் சுத்தமாகும். உடல் சுத்தத்துடன் உடுத்தும் உடைகளும் சுத்தமாக இருக்க வேண்டும். வசிக்கும் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுத்தம் தொழுகை மூலமாக நமக்குக் கிடைக்கிறது!

‘சுத்தம் சோறு போடும்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ "பரிசுத்தம் இறைநம்பிக்கையில் பாதியாகும்" என்று சுத்தத்தை பிரதானப்படுத்திக் கூறியுள்ளார்கள்! காரணம், தொழுகைக்கு பரிசுத்தம் ஒரு நிபந்தனையாகும்! உடல் சுத்தமாக இருக்க வேண்டும். உடுத்திய உடைகள் சுத்தமாக இருக்க வேண்டும். தொழக்கூடிய இடமும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தொழுகை நிறைவேறும். சுத்தம் இல்லாமல் எந்த ஒரு தொழுகையும் நிறைவேறாது!

மனிதர்களுக்கு நிறத்தையும் அழகையும் கொடுப்பது சருமமே ஆகும். மேலும், இந்த சருமம் முக்கியமான மூன்று வேலைகளையும் செய்கிறது.
 
(1) மனித உடலை ஒரு கவசம் போல போர்த்தியபடி பாதுகாக்கிறது.

(2) உடலின் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்வதில் உதவுகிறது.

(3) வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு அதை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் ஆக்குகிறது.

இத்துடன் உடல் ஸ்பரிசம், வலி, உஷ்ணம், குளிர்ச்சி போன்றவற்றையும் மனிதன் சருமம் மூலமாகவே அறிகிறான். இவற்றை மத்திய நரம்பு மண்டலத்திற்கு தெரிவிக்கும் உயிரணுக்கள் சருமம் முழுவதிலும் நிறைந்து இருக்கின்றன. இந்த சருமத்திலிருந்தே வியர்வை வெளியேறுகிறது. உடல் வறண்டு போகாமல் இருக்கவும், வெடிப்புக் காணாமல் இருக்கவும், சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாக இருக்கச் செய்யவும் ஒருவிதமான எண்ணெய்க் கசிவும் வெளியேறுகிறது.

இப்படிப்பட்ட சருமத்தில் அழுக்கு படியும் போது சருமத் துவாரங்கள் எல்லாம் அடைபட்டுப் போகின்றன. இதன்காரணமாக பலவிதமான தோல் வியாதிகள் ஏற்பட்டு உடல் நலத்தைக் கெடுக்கின்றன. மேலும், சில தோல் வியாதிகள் தொற்று வியாதிகளாகவும் இருக்கின்றன. இதனால் பொது சுகாதாரமும் பாதிப்படைகிறது! குளித்து சருமத்தை சுத்தமாக வைத்துக்கொண்டால் இத்தகைய தோல் வியாதிகளை தடுத்துவிடலாம். ஆரோக்கியமாகவும் வாழலாம்! பொதுச் சுகாதாரத்தையும் பேணலாம்!

No comments

Powered by Blogger.