Header Ads



''நீங்கள் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை” – பைஸர் முஸ்தபாவுக்கு பதில் மடல்!

 ஒமர் பாறூக்

பைசர் முஸ்தபா அவர்களே..!
 
”நீங்கள் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளை”  என்பதனை உங்கள் பேச்சில் நிரூபித்திருக்கின்றீர்கள்.  ஏனென்றால் இந்த உரையை ஒரு முஸ்லிம் எழுதித் தந்திருக்க முடியாது. அவ்வாறு எழுதித் தந்திருந்தால் அவர் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது.

ஏனென்று கேட்கின்றீர்களா? ”பள்ளிவாயல்கள் இறைவனின் இருப்பிடம்” என்று உங்கள் உரையில் கூறப்படுகின்றது. பள்ளிவாயல் அல்லாஹ்வின் இல்லம் என்று சொல்லப்பட்டதனைக் கொண்டு அங்கு அல்லாஹ் வசிக்கின்றான் என்று மனிதகளோடு அல்லாஹ்வை ஒப்பிட்டிருப்பது ஷிர்க் ஆகும்.

அல்லாஹ்வின் இல்லம் என்பதன் அர்த்தம் ”அல்லாஹ்வை வழிபடும் இடம், அதில் மற்றொருவருக்குப் பங்கில்லை” என்பதுதான். மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என நீங்கள் சொல்லியிருப்பது, விரும்புவது வாஸ்த்தவம்தான். மக்களது விருப்பமும் அதுவே. ஆனால் மற்றொரு மதத்தவரின் மதச் சுதந்திரத்தை அவமதிப்பதும் மறுப்பதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்பதனைத் தாங்கள் அறியாதிருக்க மாட்டீர்கள். தம்புள்ளை பள்ளிக்குள் பிரித் ஓதியதும், திருக்கோயில் விநாயகர் ஆலயத்துக்குள் புகுந்து பிள்ளையார் சிலையை தூக்கிக்கோண்டு போனதும் அடுத்த மதத்தவரின் மத உரிமையின் மீது அத்துமீறும் செயலல்லவா? இதனைச் செய்தவர் யார்? சிறுபான்மை மக்களா? இல்லையே! பௌத்தத் துறவிகளின் கைங்கர்யம்தான் இவை.

பௌத்தத் துறவிகள் செய்தார்கள் என்பதற்காக சட்டத்தில் குற்றம் என்று சொல்லப்பட்டிருப்பவற்றிலிருந்து விலக்களிக்கப்படுமா? இச்செயல்களுக்கு முழு பௌத்த சமூகமும் பொறுப்பிலை என்பது நாமறிந்த விடயம். நீங்கள் சொல்வது போல அரசுக்கும் இதில் சம்பந்தம் இல்லை என்றே வைத்துக் கொள்வோமே.

அவ்வாறிருந்தால், இலங்கையின் சட்டங்களின் பிரகாரம் குற்றவாளிகளாகக் காணப்படும் இந்த மதத்தீவிரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்த இந்த அரசு இதுவரை முன்வராதது ஏன்? அரசின் இந்த மௌனத்துக்கு நீங்கள் தரும் ”தப்ஸீர்” என்ன? மௌனம் சம்மத்தின் அடையாளமா? மன்னார் நீதவான் வீதிக்கிறங்கி மக்களின் உரிமைக்கு எதிராக எடுத்த நடவடிக்கையினால் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு தான் பொறுப்பல்ல என அமைச்சர் றிஷாத் மறுக்கின்றபோதும் அவருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டிருக்கின்றது. அவர் நாளை ஆஜராகியாக வேண்டும்.

நீதிக்கு முன் அனைவரும் சமன் என்றிருந்தால் பள்ளிவாயல் மற்றும் கோயில்களுக்குள் அத்துமீறுகின்ற இந்த மதத் தீவிரவாதிகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்துமல்லவா? ஆனாலும் எதிர்வரும் முதலாம் திகதி பௌத்த மதம் சொல்லும் மிருக வதைக்கு எதிராக தான் போராடப்போவதாக முன்கூட்டியே எச்செரிக்கை விடுத்திருக்கும் அமைச்சர் மேர்வினுக்கு இன்னும் கடிவாளமிடப்படவில்லை.

மிருக வதை மட்டும்தான் பௌத்தத்தில் பாவமா? வீதிக்கு வீதி திறந்திருக்கும் மதுபானக் கடைகளை பௌத்த மதம் அங்கீகரிக்கின்றதா? தமிழ் கூட்டமைப்போடு சேர்ந்து மு.கா. ஆட்சியமைக்க திட்டமிட்டிருப்பதாக நீங்களும் அரசில் இருக்கும் முஸ்லிம் எம்.பி.க்களும் அடிக்கடி கூறிவருகின்றீர்கள். அதற்கான எந்தவொரு ஆவணத்தையோ அத்தாட்சியையோ நீங்கள் மக்கள் முன் வைக்கவில்லை. இது அரசுக்கு ஏற்பட்டிருக்கும் அச்ச உணர்வின்வெளிப்பாட்டுக்கு நீங்கள் ஊது குழல்களாகச் செயற்படுகின்றீர்கள் என்பதனையே காட்டுகின்றது. முடிந்தால் செப்டம்பர் 6ம் திகதிக்கு முன்னர் அவ்வாறான ஆதாரம் ஒன்றையேனும் கொண்டுவர முயற்சியுங்கள். நாங்கள் நம்புகின்றோம்.

அரசை விமர்சித்துக் கொண்டு ஏன் இன்னும் மு.கா. அரசுடன் ஒட்டிக் கொண்டுள்ளது? என்று காட்டமாக் கேட்டிருக்கின்றீர்கள். தமையன் விடும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதற்காக வீட்டை விட்ட வெளியேற வேண்டுமா என்ன?

இந்த நாட்டை அமுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் இன முறுகலில் முஸ்லிம் சமூகம் கணிசமான அளவு உயிர் உடைமை உள்ளடங்கலாக பலவிதமாகவும் பாதிக்கப்பட்டிருப்பதனை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும் உண்மையான சமாதானம் எட்டப்படுவதில் தாமதம் காட்டப்படுகின்றது என்பது உண்ணாட்டு வெளிநாட்டுக் குற்றச்சாட்டுகள்.

ஆனால் இந்த சமாதானத்தை எட்டுவதில் பல தடங்கல்கள் இருப்பதனை மறுப்பதற்கில்லை. ஆனாலும் சாத்தியமான சந்தர்ப்பங்களிலும் தேவையற்ற
அசமந்தம் காட்டப்படுவதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே யதார்த்தமான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு களத்தில் கால அவகாசம் தேவைப்படுகின்றது என்பது தவிர்க்கமுடியாததாகும்.

எனவே, சமாதான செயற்பாடுகளை வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஜெனீவா தீர்மானத்தின் போது அரசுக்கு அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தி முஸ்லிம் சமூகம் தனது தேசாபிமானத்தை நிரூபித்திருக்கின்றது. அதற்காக தனக்கு அநீதி இழைக்கப்படும்போதும் அரசுக்கும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என அரசும் அதன் முகவர்களும் எதிர்பார்ப்பது அபத்தமானதாகும். அரசு எது செய்தாலும் அதுவெல்லாம் சரி என்று ஒத்துப்பாடுவது சரணாகதி அரசியலாகும்.

அதனைச் செய்வதற்கு மு.கா. தான் தயாரானாலும் முஸ்லிம்கள் தயாரில்லை. அரசோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட தயாரானபோதும் இறுதி நேரத்தில் மு.கா. தனித்துப் போட்டியிடும் நிலை மு.கா. வுக்கு ஏற்பட்டமை இதனால்தான்.

மு.கா. என்பது ஹகீமுடையதோ, பஷீர் சேகுதாவுதுடையதோ அல்லது அஷ்ரபுடையதோ அல்ல. அது மக்களுடைய இயக்கம். தனிநபர்களுக்கு மரணம் என்று ஒன்று இருக்கின்றது. ஆனால் மக்களுக்கு மரணம் இல்லை. அழிவுதான் இருக்கின்றது. அந்த அழிவிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் தேவையும் உரிமையும் அவர்களுக்கு இருக்கின்றது.

சிறுபான்மையினருக்கு பிரச்சினைகள் உண்டு என ஏற்றுக்கொள்ளும் நீங்கள் அதனைப் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்க்க வேண்டும் என சொல்லியிருப்பதனையும் நாம் வரவேற்கின்றோம். ஆனால், அந்தப் ”பேச்சுவார்த்தையைச் செய்வதற்கான நிகர்த்த சக்தி” சிறுபான்மைச் சமூகங்களுக்குத் தேவைப்படுகின்றது. அதுதான் மக்கள் ஆணை. அந்த ஆணையைக் கோருகின்ற களம்தான் இன்று திறக்கப்பட்டிருக்கின்றது. அதில்தான் அரசும் ஏனய கட்சிகளும் இறங்கியிருக்கின்றன. உங்கள் பக்கம் மக்கள் ஆணை இல்லை என்பதனால்தான் நீங்கள் சரணாகதி அரசியல் செய்கின்றீர்கள்.

மக்கள் ஆணையை தன் பக்கம் வசீகரித்து சிறுபான்மை மக்களின் ”பேச்சுவார்த்தை நடாத்தும் ஆற்றலை” மழுங்கடிக்க பேரினவாத செலுத்து விசைகளால் இயக்கப்படும் இந்த அரசு முனைப்புக் காட்டுகின்றது. ஆனால் இந்தப் ”பேச்சுவார்த்தை நடாத்துவதற்கான ஆற்றலை” சிறுபான்மைச் சமூகங்கள் தக்கவைத்துக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கின்றது. ஏனெனில் எங்கு நீதி இல்லையோ அங்கே தற்காப்பு யுக்திகளை வகுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

அதனை ஜனநாயக வழியில் அடைந்து கொள்வதற்கான வழிமுறையே தேர்தல்கள். எனவே, மக்கள் அவர்களது சுயத்தை அவர்களாகவே நிர்ணயித்துக்கொள்ள அவர்களுக்கு இருக்கும் சந்தர்ப்பத்தை உங்கள் சுயத்துக்காக தாரைவார்க்கச் சொல்லாதீர்கள். சமூகத்தை விற்று பிழைப்பு நடாத்தச் சொல்லாதீர்கள்.

சமூகத்தை சமூகத்திடமே விட்டுவிடுங்கள். இன்று மு.கா. என்றொன்று இருப்பதனால்தான் உங்களைப் போன்றவர்களுக்கு அரசில் கதிரைகள் ஒதுக்கப்படுகின்றன என்பதனை உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். வெறுமையில் சஞ்சரித்துக் கொண்டு வெற்று அறிக்கைகள் விடுவதனை விடுத்து நிஜ உலகின் யாதார்த்தத்துக்கு வாருங்கள். வரலாறு தேவையற்றவற்றைத் தாங்கி நிற்பதில்லை, சந்ததிக்கு விட்டு வைப்பதுமில்லை என்பதனை ஞாபகத்தில் வைத்திருங்கள்.
 

5 comments:

  1. umar farook avargalea nalla karutthai eluthi erukkireenga walththukal ennum walarha thankaludaiya arivu.

    ReplyDelete
  2. அமைச்சரு பைசர் முஸ்தபாவின் பதில் : இன்னுமும் அவ்ரு எழுதி தரல்ல, அது வருமட்டும், கீ கிக் கீ கீக் கீ கி க்கீ கீ கி க்கீ கீகீகீ.......

    ReplyDelete
  3. ஆக நீங்கள் சொல்கிறீர்கள் முஸ்லிம்களின் நடத்தையால் வானத்தில் முடிவு செய்யபட்டு பூமியில் அல்லாஹ்வை மறந்து தான்றோன்றிதனமாக வாழ்ந்துகொன்டிருக்கும் பெரும்பான்மை முஸ்லிம்களினால் அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்த சோதனைகள் ஸ்ரீலன்காவையும் விட்டு வைதிருக்காத இந்த சந்தர்பத்தில் முஸ்லிம் தங்களை சுயபரிசோதனை செய்து அல்லாஹ்வின் பக்கம் மீள்வதட்கு முதலிடம் கொடுப்பதைவிட ஸுபஹ் தொழுகையும் அதிகம்பேரிடம் இல்லாத ஒரு அரசியல் கட்சிக்கி வாக்களிப்பதன் மூலம் எல்லாம் சரியாகிவிடும் என்றா???

    முஸ்லிம்கள் அல்லாஹ்வின் பக்கம் மீளாதவரை எந்த கட்சியின் அரசியல் பலத்தை கொண்டும் எதனையும் செய்ய முடியாது அதை நாபகமூட்டியதன் பின்னர் அடுத்தவர்களுக்கு உபதேசிப்பது மிக பொருத்தம் நெருக்கடிகளுக்கு முதல் காரணம் என்ன என்பதை தேடகூடாதா???

    ReplyDelete
  4. Fashlin Mohammed, இஸ்லாத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என்று சொல்லுகின்றோம். தாய் மாமனின் மனைவியின் ஜனாசவை 5 வயது மருமகன் பார்க்கலாமா என்பதற்கு இஸ்லாத்தில் தீர்வு தேடுகின்றோம். மிகப் பெரிய பிரச்சினைகளுக்கெல்லாம் இஸ்லாத்தின்ல் தீர்வு இருக்கின்றதா என்று கொஞ்சம் கூடச் சிந்திப்பதில்லை.

    பொருளாதாரப் பிரச்சினை வந்துவிட்டால், எங்கெங்கோ சென்று ஆலோசனை பெறுகின்றோம். சகாத்தை சரியாக கணக்குப் பார்த்துக் கொடுத்தோமா, பொருளாதாரத்தில் வட்டி கலந்துள்ளதா, சேமிப்புக் கணக்கில் இருந்த வட்டியையும் சேர்த்து மீள பெற்றிருக்கின்றோமா, நமது காசோலைகள் வங்கி மேலதிகப் பற்றின் வட்டியுடன் பணமாகின்றனவா, என்பது குறித்துக் கொஞ்சம் கூடச் சிந்திப்பதில்லை.

    இன்று இலங்கையில் நாம் எதிர்நோக்கும் அச்சம் நிறைந்த, ஒற்றுமையற்ற நிலைக்கு மார்க்கம் சொல்லியுள்ள தீர்வு என்ன என்பது குறித்து தூய மனதுடன் ஆராய்ந்து உள்ளோமா?

    ReplyDelete
  5. தனக்கும் எழுதத்தெரியும் என்பதற்காக சிலர் எழுதத்துவங்கி விட்டார்கள் போலும்!இன்று முஸ்லிம்களிடத்தில் எல்லாம் உண்டு ஆனால் அல்லாஹ்வின் ரசூல் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் அழகிய மன்மாதிரி(உஸ்வதுல் ஹஸனாஹ்)இல்லை அல்லாஹவின் ரசூலிடம் அடுப்படி தொடக்கம் அதிகாரம் செலுத்துபவர்கள் வரை பின்பற்றக்கூடிய முன்மாதிரி இருக்கிறது.நபிகள் (ஸல்)அவர்களைத் தொடர்ந்த கலீபாக்களில் உமர் கத்தாப்பின் ஆட்சிக்காலத்தை உலக வரலாற்றில் பொண்னெழுத்தால் எழுதனும் என்று வரலாற்றாசிரியர்கள் மெச்சும் அளவுக்கு இருந்தது ஆனால் இன்று அடுப்படியில் உள்ளவர் முதல் ஆட்சி அதிகாரத்துக்கு வர துடிப்பவர்களை காணும் உலகம் இஸ்லாத்தை,இஸ்லாமியர்களை கண்டு முகம் சுளிக்கும் அளவுக்கு உள்ளது. இதற்கு முஸ்லிம்கள் அணைவரும் பதில் சொல்லக்கடமைப்பட்டுள்ளார்கள். சிந்தனையற்ற போக்கு,இயக்கங்களாகவும்,குழுக்களாகவும் பிரிந்து நின்று தமக்குள் போட்டுக்கொள்ளும் சண்டை, முஸ்லிம் அல்லாதவனிடம் நியாயம் கேட்டுப்போகும் தண்மை,அல்லாஹ்வின் வீட்டில் நியாயததுக்கு பதில் அநியாயம் தலைதூக்கியுள்ளமை,அல்லாஹ்வின் வீட்டை பரிபாலிப்பவர்கள் ஜாஹில்களை விட மிக மோசமானவர்களாக இருப்பது,உலமாக்கள் வெறும் மாக்களாக மாறியுள்ளமை போன்ற இன்னொரன்ன காரணிகள் தான் முஸ்லிம்களை அல்லாஹ்வின் உதவியும்,ரஹ்மத்தும் வந்து சேர்ந்து விடாமல் தடுக்கின்றது என்பது என்னுடைய கருத்தாகும். இதிலிருந்து விடுபட என்னால் என்ன செய்ய முடியும் என்பதையாவது நாம் ஒவ்வொருத்தரும் சிந்திப்போம்,ஒன்று படுவோம்.
    செய்யத் N தீன்

    ReplyDelete

Powered by Blogger.