Header Ads



''நான் மௌனியாக இருக்கவில்லை'' - ஜவாத்

ஜவாத்
நேர்கண்டவர் - மப்றூக்

இவருக்கு இரண்டு பெயர்கள். அப்துல் ரசாக் என்றால் அநேகருக்குத் தெரியாது. கல்முனை ஜவாத் என்று கேட்டால் சிறு பிள்ளையும் இவர் வீட்டுக்கு வழிகாட்டும். ஜவாத் - கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினராக இருந்தவர். 1987 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து அரசியலுக்குள் நுழைந்தார். இவருக்கென்று ஓர் அரசியல் பின்னணி இருக்கிறது. கே.கே. மரைக்கார் என மக்களால் அறியப்பட்ட ஜவாத்தின் தந்தையார் - கல்முனை பட்டணசபையின் தலைவராக இருந்தவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய பிரதிப் பொருளாளராகவும், அந்தக் கட்சியின் அதி உயர்பீட உறுப்பினராகவும் பதவி வகிக்கும் ஜவாத் - கல்முனை பிரதேச சபையின் உப தவிசாளர், கல்முனை மாநகரசபையின் உறுப்பினர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் போட்டியிட்டபோது மு.காங்கிரஸ் வேட்பாளர்களில் இவர் - மூன்றாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். ஜவாத் - உரத்துப் பேசும் ஆளுமை கொண்டவர். ஆனால், எதையும் வெளிப்படையாகவும், நேரடியாகவும் பேசுவதே இவரின் பலமாகவும் - பலவீனமாகவும் இருக்கிறது.

நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் இம்முறையும் ஜவாத் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். அவரை ஒரு மாலைப் பொழுதில், நேர்காணலொன்றுக்காகச் சந்தித்துப் பேசியபோது, பகிர்ந்து கொண்டவற்றினை இங்கு பதிவு செய்கின்றோம்!

கேள்வி: கல்முனைத் தொகுதியானது – மு.காங்கிரஸையும், அந்தக் கட்சி விரல் நீட்டும் அணிகளையும் கடந்த பல தேர்தல்களில் வெற்றி பெறச் செய்துள்ளது. இந்தப் பாத்திரத்தை கல்முனைத் தொகுதி இம்முறையும் வகிக்குமா? தர்க்க ரீதியாக நிரூபியுங்கள் பார்ப்போம்!
 
பதில்: கல்முனைத் தொகுதியில், எதிர்கட்சி சார்பாக சிறந்த வேட்பாளர்கள் எவரும்  இல்லை. இதுவே, மு.காங்கிரஸ் இங்கு வெற்றி பெற்று விடும் என்பதை நிரூபிக்கப் போதுமானதாகும்.  குறிப்பாக, கல்முனைத் தொகுதியில் வெற்றிலைச் சின்னம் சார்பாக இரண்டு வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். ஒருவர் மருதமுனைக்காரர். மற்றவர் கல்முனையைச் சேர்ந்தவர். மருதமுனைக்காரர் மூன்று இலக்கங்களுக்குள்தான் வாக்குகளைப் பெறும் சாத்தியம் உள்ளது. கல்முனைக்காரர் கடந்த மாகாணசபை தேர்தலில் என்னுடன் போட்டியிட்டு, கல்முனைத் தொகுதியில் 911 வாக்குகளை மட்டும் பெற்றார். அண்மையில் நடந்த கல்முனை மாநகரசபைத் தேர்தல் போட்டியிட்ட இவர் சுமார் 5400 வாக்குகளைப் பெற்றார். அதாவது ஒரு வாக்களரிடமிருந்து 03 விருப்பு வாக்குகள் எனும் அடிப்படையிலேயே அந்த வாக்குகள் கிடைத்தன. எனவே,  5400 எனும் தொகையினை 3 ஆல் வகுத்து வரும் தொகையினைத்தான் கல்முனைத் தொகுதியில் இவர் பெறப் போகின்றார். மிகுதி வாக்குகள் அனைத்தும் மு.கா.வுக்குத்தான்!

கேள்வி: உங்கள் கணிப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் எத்தனை ஆசனங்களை வெல்லும்?
 
பதில்: அம்பாறைக்கான ஆசனங்கள் 14 ஆகும். இவற்றில் த.தே.கூட்டமைப்பும், ஐதே.கட்சியும் தலா 02 ஆசனங்களைப் பெறும். மிகுதியாக உள்ள 10 ஆசனங்களில் 06 ஆசனங்களை ஒரு கட்சியும், 04 ஆசனங்களை இன்னொரு கட்சியும் பெறும்.

கடந்த தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சுமார் 64 ஆயிரம் சிங்கள வாக்குகளையும், 48 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளையும் பெற்றுள்ளது. குறித்த 64 ஆயிரம் சிங்கள வாக்குகளில் இம்முனை சுமார் 15 ஆயிரம் வாக்குகளை ஐ.ம.சு.முன்னணி இழக்கும் நிலை ஏற்படும். ஐ.தே.கட்சியில் தயாகமகே பெரும் முன்னெடுப்புடன் தேர்தல் களத்தில் குதித்துள்ளமையும், வெற்றிலைக் கட்சியில் ஜனரஞ்சகம் மிக்க சிங்கள வேட்பாளர்கள் இல்லாமையும் - இந்த வாக்கிழப்புக்குக் காரணமாக அமையும்.

எனவே, ஐ.ம.சு.முன்னணி இம்முறை கிட்டத்தட்ட 50 ஆயிரம் சிங்கள வாக்குகளையே பெறும். இதேவேளை, கடந்த முறை வெற்றிலைக் கட்சி பெற்றுக் கொண்ட 48 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளில் சுமார் 18 ஆயிரம் வாக்குகளை இழக்க நேரிடும். காரணம், அம்பாறை மாவட்டத்தில் இம்முறை அமைசர் அதாஉல்லா மாத்திரம்தான் ஐ.ம.சு.முன்னணியில் இறங்கி வேலை செய்கின்றார். றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் சார்பில் ஒரு சில வேட்பாளர்கள் பெயரளவில் போடப்பட்டிருந்தாலும், றிசாத் களத்தில் இறங்கவில்லை. மேலும், சம்மாந்துறைத் தொகுதியில் நௌசாத் நேரடியாகக் களமிறங்கவில்லை. இது இவ்வாறிருக்க, கடந்த முறை வெற்றிலைக்கு வாக்களித்த தமிழ் மக்களில் ஏராளமானோர் இம்முறை த.தே.கூட்டமைப்புக்கே வாக்களிக்க எண்ணியுள்ளனர்.

இவை அனைத்தையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் இம்முறை ஐ.ம.சு.முன்னணி சுமார் 80 ஆயிரம் வாக்குகளைத்தான் அம்பாறை மாவட்டத்தில் பெறும்.

இதேவேளை, மு.காங்கிரசுக்கு ஏற்கனவே உள்ள 76 ஆயிரம் வாக்குகளோடு, சுமார் 10 ஆயிரம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்தாலே மு.கா. வென்று விடும். நாட்டின் இன்றைய சூழல், சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை, பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் போன்ற பல விடயங்கள் - மு.காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டிய தேவையினையும், மனநிலையினையும் முஸ்லிம் மக்களிடம் உருவாக்கியுள்ளது.

ஆக, மு.கா.வுக்கு 86 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளும் ஐ.ம.சு.முன்னணிக்கு 80 ஆயிரத்துக்கு உட்பட்ட வாக்குகளும் கிடைக்கும். அந்தவகையில் மு.கா.வுக்கு 06 ஆசனம், ஐ.ம.சு.முன்னணிக்கு 04 ஆசனங்கள். இதுதான் நடக்கும்!

கேள்வி: கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டுகின்றவர்கள் மக்கள் ஆணையினைக் காவிக்கொண்டு அடுத்த நாள் ஓடிவிட முடியாது. மக்கள் ஆணையினை அடகு வைத்து விட்டு கபடத்தனமாக விளையாட முடியாது. தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கட்சித் தலைவரைப் பயணக் கைதியாக்கிப் பந்தயமாட முடியாது என்றெல்லாம் மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மைய கூட்டங்களில் பேசி வருகின்றார். அதாவது, தேர்தலின் பின்னர் மு.காங்கிரசின் உறுப்பினர்கள் யாராவது கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டு, விலை போய் விடுவார்களோ என்று அவர் அச்சப்படுகிறார். அவ்வாறானவர்களில் - நாங்கள் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் மு.கா.வின் வேட்பாளர்களுக்கு உள்ளது. உங்களை எவ்வாறு நிரூபிக்கப் போகிறீர்கள்?
 
பதில்:  சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட தளத்திலேயே எனது அரசியல் வளர்ந்தது. கடந்த கிழக்கு மாகாணசபையில் 03 திருத்தச் சட்ட மூலங்கள் வந்தன. அவை எனது சமூகத்துக்கு ஏற்புடையதல்ல என்பதால் எதிர்த்தேன்.

அந்த திருத்தச் சட்ட மூலங்கள் சபைக்கு வந்தபோது மூன்று வகையான அச்சுறுத்தல்களை நான் எதிர்கொண்டேன். அன்பான அச்சுறுத்தல்கள், அதிகார ரீதியிலான அச்சுறுத்தல்கள் இவை போன்று ஆளுங்கட்சியினரும் அச்சுறுத்தினார்கள். எமக்கு வழங்கும் நிதி ஒதுக்கீடுகளை நிறுத்துவோம், ஒதுக்கப்பட்ட நிதிகளை மீளப் பெறுவோம், பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலிருந்து கிடைக்கும் நிதிகளைத் தடுப்போம் என்றெல்லாம் கூறினார்கள். கட்சி ரீதியாக சிலர் என்னைத் தொடர்பு கொண்டு - குறித்த திருத்தச் சட்ட மூலங்கள் தொடர்பாக நடுநிலைமை வகியுங்கள் என்றார்கள்.

ஆனாலும், எனது சமூகத்தின் நன்மை கருதி அந்தச் சட்ட மூலங்களை எதிர்த்தே நின்றேன். எனக்கு கிடைக்கவிருந்த நிதிகளை இழந்து விடுவேன் என்பதற்காகவும், என்மீது திணிக்கப்பட்ட அச்சுறுத்தலுக்குப் பயந்து கொண்டும் எனது சமூகத்தினை நான் கைவிடவில்லை. எனது விசுவாசத்தினையும் நேர்மையினையும் இதைவிடவும் வேறு எப்படி நான் நிரூபிப்பது?

எது நடந்தாலும், எனது சமூகத்தோடுதான் நான் இருப்பேன்!

கேள்வி: 'அபிவிருத்தி' அரசியல் பற்றி நீங்கள் ஏன் சிந்திக்கக் கூடாது?
 
பதில்: வீதிகள் நிர்மாணிப்பதையும், கட்டிடங்கள் உருவாக்குவதையுமே துரதிஷ்டவசமாக நம்மில் பலர் அபிவிருத்தி என்று நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். இந்தவகை அபிவிருத்தி என்பது ஒரு மாயை. அதற்குப் பின்னால் நாம் அலையத் தேவையில்லை. இந்த வகை அபிவிருத்திகளை ஒரு மாதத்துக்குள்ளோ வருடத்துக்குள்ளோ செய்து விட முடியும். மறைந்த பெருந் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் அதைச் செய்தும் காட்டினார்கள்.

தலைவர் அஷ்ரஃப் அவர்களுக்கு துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சு கிடைத்தபோது, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான இள வயதினருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கினார். இதன் மூலம் நமது மாகாணம் கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாகப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்போது, தேவையான கட்டிடங்களையெல்லாம் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் நிர்மாணித்தார்கள். சக அமைச்சர்கள் ஆச்சரியப்படும் வகையில் இதற்காக அவர் செலவு செய்தார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை அவர் நிர்மாணிக்கவில்லையா? தெ.கிழக்கு பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதியை மட்டுமே மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் வழங்கினார். அரசிடம் நிதி இல்லை என்றார்கள். ஆனால், தனது அமைச்சின் கீழ் இருந்த துறைமுக அதிகார சபையிலிருந்து நிதியினைப் பெற்று இந்தப் பல்கலைக்கழகத்தை தலைவர் அஷ்ரஃப் அவர்கள் உருவாக்கினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பற்றிய பேச்சு வந்ததால், இந்த இடத்தில் ஒரு சுவாரசியமான செய்தியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இந்தப் பல்கலைக்கழகத்துக்கான முதலாவது அடிக்கல்லினை நடுவதற்கான சந்தர்ப்பம் எனக்கே கிடைத்தது. தலைவர் அஷ்ரஃப் அவர்கள் ஜவாத் எங்கே என்று அழைத்து எனது கையால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கான முதலாவது கல்லினை நட வைத்தார். இரண்டாவது கல்லினை மறைந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மருதமுனையைச் சேர்ந்த ஜமால்தீன் அவர்களால் நடப்பட்டது. மூன்றாவது கல்லினைத்தான் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் நட்டார்கள்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உருவாக்கம் தொடர்பில் தலைவர் அஷ்ரஃ;ப் அவர்கள் அமைப்பொன்றை உருவாக்கினார்கள். அந்த அமைப்பின் செயலாளராகவும் என்னை நியமித்தார்கள். அந்தவகையில், ஒரு பல்கலைக்கழகத்தினையே உருவாக்கும் பணியினைச் செய்த அணியில் நானும் இடம்பெற்றிருந்தேன் என்பதை மிகவும் மகிழ்சியுடன் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன். 

ஆக, முழுமையான அதிகாரம் கையில் கிடைக்கும் போது - இந்த அபிவிருத்திகளை குறுங் காலமொன்றுக்குள் செய்து காட்ட முடியும்!

இவை ஒருபுமிருக்க, இந்த நாட்டில் நமக்குரிய உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்க முடியாததொரு நிலையில், அபிவிருத்திகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியாது. மு.காங்கிரசின் மறைந்த மூத்த துணைத் தலைவர் மரூதூர் கனி அடிக்கடி கூறுவார்ளூ 'ஒரு வீட்டுக்கு கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை, எந்தவிதமான பூட்டுகளும் இல்லை. ஆனால், வீட்டுக்குள் தொலைக்காட்சிப் பெட்டி வைத்துத் தருகிறோம் என்பார்கள். இப்படித்தான் இருக்கிறது நமது அபிவிருத்திகள்'. இது என்ன கோமாளித்தனம். பாதுகாப்பற்ற வீட்டுக்குள் எதை வைத்தாலும் களவு போய்விடுமல்லவா? உரிமைகளை இழந்த நிலையில், அபிவிருத்திகளைப் பற்றிச் சிந்திக்க முடியாது.

அபிவிருத்தி என்கிற மாயைக்கு நாம் மயங்கத் தேவையில்லை. கடந்த 30 வருடங்களாக அபிவிருத்தி என்கிற மாயைக்குள் விழுந்து விடாமல் தமிழ் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கவில்லையா. அதனால்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் இன்னும் ஆதரிக்கின்றார்கள். இது பாராட்டுக்குரிய விடயமாகும். முஸ்லிம் சமூகமும் இந்தப் பின்னணியில் நின்று சிந்திக்க வேண்டும். 

கேள்வி: கட்சிப் பாகுபாடுகளையெல்லாம் ஒரு கணம் மறந்து விட்டுச் சொல்லுங்கள், கிழக்கு மாகாணசபைக்கு எவ்வாறானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது உங்கள் விருப்பம்?
 
பதில்: அமையவிருப்பது பலமானதொரு மாகாணசபையாகும். இங்கு வருகின்ற ஒவ்வொரு உறுப்பினரும் காத்திருமானவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் தமது சமூகத்தின் பூர்வீகம், வரலாறு பின்னணி குறித்தெல்லாம் அறிந்திருக்க வேண்டும். அவை குறித்துப் பேசுகின்ற வல்லமை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். எனவே, மக்களும் இவ்வாறானவர்களைத் தெரிவு செய்ய முன்வர வேண்டும்.

அதேவேளை, அரசியலையும், நம்மைச் சுற்றி நடக்கும் விவகாரங்களையும் ஓரளவாவது தெரிந்தவர்கள் இந்த சபைக்கு வருதல் வேண்டும். உதாரணமாக, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து கிழக்கு மாகாண சபையில் பேசப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால், நல்லிணக்க ஆணைக்குழு என்றால் என்ன? இந்த அறிக்கையில் என்ன அடங்கியிருக்கிறது? நமது சமூகம் குறித்து இதில் என்ன விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன என்றெல்லாம் அறிந்தவர்களால் மட்டும்தானே அங்கு பேச முடியும். அதனால், காத்திரமுள்ளவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

கடந்த கிழக்கு மாகாணசபையில் அதிகமாக உரையாற்றியவர்களில் நானும் ஒருவன் என்பதை இங்கு மனநிறைவோடு சொல்ல விரும்புகின்றேன். எனது சமூகம் குறித்து ஒருபோதும் நான் மௌனியாக இருக்கவில்லை. கலைக்கப்பட்ட சபையில் எனது சமூகத்துக்காக உரத்துக் குரல் கொடுத்திருக்கிறேன். மாகாண சபையில் ஆற்றப்படும் உரைகள் ஆவண ரீதியாகப் பதிவு செய்யப்படுகின்றன. அவை வரலாற்றுச் சாட்சிகள்.

கேள்வி: கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையில் உங்களால் செய்ய முடிந்தவை, முடியாதவை பற்றிப் பேசுங்களேன்...!
 
பதில்: கடந்த கிழக்கு மாகாணசபையின் 37 உறுப்பினர்களில் அதிக நேரம் உரையாற்றிவர்களில் முதலாவது அல்லது இரண்டாவது நபராக நான் இருக்கிறேன். இதன் அர்த்தம் என்னவென்றால், எனது சமூகம் சார்ந்து நான் அதிகமாக குரலெழுப்பியுள்ளேன். மாகாணசபையின் மூலமாக கல்விசார் விடயங்களில் கூடுதலான கவனமெடுத்துள்ளேன். சமூகத்துக்குப் பாதிப்பான 03 சட்ட மூலங்களை (நாடு நகர சட்ட மூலம், உள்ளுராட்சி திருத்தச் சட்ட மூலம், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்ட மூலம்) சபையில் எதிர்த்திருக்கின்றேன். அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர்களில் நான் மட்டும்தான் மேற்சொன்ன மூன்று சட்ட மூல விவாதங்களிலும் கலந்து கொண்டேன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தின் போது, இந்த அரசாங்கத்தினை மாகாணசபையில் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தேன்.

மாகாணசபையில் உள்ளுராட்சி திருத்தச் சட்ட மூலத்தினை எதிர்த்துப் பேசியதால், பொருளாதார அபிவிருத்தி அமைச்சினூடாக மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதியினை அரசாங்கம் தராமல் போனது. அந்தவகையில், மு.காங்கிரசின் 08 மாகாணசபை உறுப்பினர்களுக்கும் கிடைக்கவிருந்த 120 மில்லியன் ரூபாய் இல்லாமல் போனது.

ஆனால், அந்த 120 மில்லியன் ரூபாவினையும் ஓர் இழப்பாக நான் கருதவில்லை. எமது சமூகத்துக்கு எதிரான சட்ட மூலங்களை நாம் எதிர்த்தமையானது – விலை மதிப்பற்றதொரு செயலாகும். 
    
கேள்வி: இந்த நேர்காணலை எதைச் சொல்லி நிறைவு செய்ய விரும்புகின்றீர்கள்?
 
பதில்: நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் என்பது முஸ்லிம் சமூகத்துக்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு சந்தர்ப்பமாகும். 'கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை அமைத்துக் கொள்வதற்காக எங்களுடன் வாருங்கள்' என்று தமிழர்களும் - சிங்களவர்களும் முஸ்லிம்களை அழைக்கின்றனர். அப்படியென்றால், முஸ்லிம் சமூகத்திடம் ஏதோவொரு அரசியல் சக்கி இருப்பதை நாம் விளங்கிக் கொள்தல் வேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் சார்பாக முன்வைக்கப்படும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே, எமது சமூகம் சாந்தவர்கள் இந்தத் தேர்தலில் மிகச் சரியான முடிவினை எடுக்க வேண்டும். இந்த வாய்ப்பினை தவற விடுவோமாயின், 60 வருடங்கள் பின்நோக்கி நமது சமூகம் தள்ளப்பட்டு விடும். நமது மறைந்த தலைவர் சொல்வதைப் போல சரியான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகள்தான் சரியானவை ஆகும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் பிழையான முடிவுகளும், பிழையான நேரத்தில் எடுக்கப்படும் சரியான முடிவுகளும் கூட – பிழையானவைதான்!

ஆகக்குறைந்தது, இந்தத் தேர்தலில் 07 உறுப்பினர்களை மு.காங்கிரஸ் பெற்று விடுமாயின், நாம் நினைப்பவர்கள்தான் கிழக்கு மகாணத்தின் ஆட்சியில் அமர முடியும். எனவே, இந்தத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். நமது சமூகத்துக்கு செய்யும் பேருதவியாக அது அமையும்!
· 

No comments

Powered by Blogger.