Header Ads



அதிகரிக்கும் வெளிநாட்டுப் பயணங்களால் ஆட்டம் காணும் குடும்பக் கட்டமைப்பு

 
(செப்டம்பர் மாத அழைப்பு இதழில் வெளியிடப்பட்ட ஆசிரியர் கருத்து)
 
அன்பான கணவன், அரவணைக்கும் மனைவி, கனிமொழி பேசும் குழந்தை, ஆரத்தழுவும் தாயும் தந்தையும் இவை, அனைவரும் ஆசிக்கும் கண் குளிர்ச்சி மிகு குடும்பக் கட்டமைப்பின் கண்கவர் பிரதிபலிப்புகள். அன்பும், அரவணைப்பும், அகமகிழ்வும் எந்தக் குடும்பத்தில் கோலோட்சுகிறதோ அங்கு தான் அறிவுத்திறனும், ஆளுமையும், அழகிய பண்பு நெறிகளும் ஒருங்கே பெற்ற ஆரோக்கியமிகு சந்ததிகள் உருவாக முடியும். ‘நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்’ என்ற முதுமொழி உணர்த்தும் வாழ்வியல் யதார்த்தமும் இதுவே.

ஆனால், உலகுக்கே வழிகாட்டவல்ல பல்கலைக்கழகங்களாய் திகழ வேண்டிய குடும்பக் கட்டமைப்புகள் இன்று குழந்தைகளை கருவறுக்கும் பலிபீடங்களாய் உருமாறி வருவது ஆழ்ந்து சிந்தித்து தீர்வு காணப்பட வேண்டிய சமூகவியல் பிரச்சினைகளில் ஒன்றாகும். எந்த சமுதாயத்தின் குடும்ப அலகு சிதைக்கப்படுகிறதோ அந்த சமுதாயத்தில் சீர்கேடுகள்; மலிந்து, அறப்பண்புகள் வழக்கொழிந்து, அபிவிருத்திப்பணிகள் அதள பாதாளத்திற்குச் சென்றுவிடும்.

ஒரு சமூகத்தின் களங்கரை விளக்காய் ஒளிவீசி வழிகாட்ட வல்ல குடும்ப அமைப்பு, மதச்சம்பிரதாயங்கள் மற்றும் இருக்கமான பண்பாட்டு நெறிகள் பின்பற்றப்படும்  இலங்கை போன்ற மண்ணில் அண்மைக் காலமாய் சிதைவுற்று  வருவது எம் விழிப்புருவங்களை உயர்த்தி நெற்றி சுருங்கச் செய்கிறது. குடும்பக்கட்டமைப்பில் அதிர்வுகள் ஏற்பட்டு, சிதைவுகள் தோற்றம் பெறுவதற்கு பின்வரும் 3 காரணிகளை பிரதானமாக அடையாளப்படுத்த முடியும்.

1. அதிகரிக்கும் வெளிநாட்டுப் பயணங்கள்

2. தொழில் புரியும் பெற்றோர்கள்(கணவன் மனைவி இருவரும்)

3. குடிக்கு அடிமைப்பட்ட குடும்பத் தலைமைகள்

இம்மூன்று காரணிகளுள் அதிகரித்து வரும் வெளிநாட்டு மோகம் சமூக தளத்தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் கொஞ்சநஞ்சமல்ல. உள்நாட்டிலிருந்து உழைத்து உருப்படியான வாழ்வை அமைக்க முடியாது என்ற சப்பைக் காரணத்தை கையில் ஏந்திக் கொண்டு, பிள்ளைகளை தனிமைப்படுத்தி விட்டு கரை கடந்து செல்லும் தாய் அல்லது தந்தை குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் நலவு நாடுகிறோம் என்ற போர்வையில் செய்யும் தீங்குகள் சொல்லிமாலாது.

பிஞ்சுப்பருவத்தில் முத்த மழை பொழியும் பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் இன்றி ஏங்கித்தவித்து உருக்குழைந்து போன குழந்தைகள் எத்தனை? அன்னையின் கையில் அமுதுண்டு, அவள் மடியில் தலைசாய்த்து, அறிவுத்தாகம் தீர்க்கும் அற்புதக்கணங்களை கைதவறவிட்ட பிஞ்சுகள் எத்தனை? பெற்ற தாயின் வெளிநாட்டு மோகத்தால் குழந்தை காப்பகங்களில் (Day Care Centers) பாசப்பிணைப்பு இன்றி கருகிக் கொண்டிருக்கும் மொட்டுக்கள் தான் எத்தனை? பெற்றோரின் பாதுகாப்பின்றி தனிமையில் விடப்பட்டதனால் வௌ்ளாட்டை வேட்டையாட தருணம் பார்த்திருக்கும் காமுக நரிக்கூட்டத்தினால் துளிர் விடும் முன்பே கற்பு பரிக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறார்கள் எத்தனை? கணவன் வெளிநாட்டில் தொழில் புரிய மலிகைக்கடை காரனோடு கள்ள தொடர்பை ஏற்படுத்தி ஓடிச்சென்ற மனைவியர் எத்தனை? பிழைக்க வந்த இடத்தில் கட்டிய மனைவிக்கு துரோகம் இழைத்து விட்டு கண்டவளுடன் தன் படுக்கையை பங்கு வைத்துக் கொண்டு உணர்வுக்கு வாய்க்கால் தேடிய கணவன்மார் எத்தனை? உழைக்கச் சென்ற இடத்தில் எஜமானர்கள் மற்றும் பிற ஆண்களால் கற்பை இழந்து, உடல் மற்றும் உள சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட சகோதரிகள் எத்தனை? உடல் பசிக்கு தவறான வழியில் தீனி தேடச் சென்றதனால் களைக்கப்படும் கருக்கள் எத்தனை? புரியப்படும் சிசுக் கொலைகள் தான் எத்தனை? பெற்றோர் இழைக்கும் தவறுகளால் ஆதரவு இன்றி அனாதைகளாக்கப்பட்ட அபலைக் குழந்தைகள் எத்தனை? இவை வெளிநாட்டுப் பயணங்களால் நம் நாடும் குடும்பங்களும் சந்தித்த சீர்கேடுகளில் சில எடுத்துக்காட்டுகள் மாத்திரமே.

சுமூகக் கட்டமைப்பின் அத்திபாரமாகத் திகழும் குடும்ப அலகு பாதுகாக்கப்பட வேண்டுமாயின் திருமணத்திற்குப் பின் வெளிநாடு செல்லும் நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். குறிப்பாக குடும்பப் பெண்கள் பணிப் பெண்களாய் படையெடுத்துச் செல்லும் போக்கு சட்டரீதியாக தடை செய்யப்படல் வேண்டும். அத்தோடு, பெண்களை வெளிநாட்டுக்கு ஏற்றும் முகவர்களுக் கெதிராய் கடுமையான சட்ட நடவடிக்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.

இது விடயத்தில் சிறுவர் மகளிர் அலுவல்கள் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்களால் ‘18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்வதைத் தடுக்கும் வகையில் விரைவில் சட்டம் கொண்டு வரப்படும்’ என்று கடந்த 21-08-2012 ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து தெரிவிக்கப்பட்ட கருத்து அனைத்து தரப்பினராலும் வரவேற்கப்பட வேண்டியதாகும். அத்தோடு, இவ்வறிவிப்பு வெற்று வார்த்தையாய் இருந்துவிடாதிருக்க சமூக பிரக்ஞையுள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஆக்கபுர்வமான எதிர் நடவடிக்கைகளிலும் களமிறங்க வேண்டும். உரியவர்கள் இது குறித்து உணர்வு பெறுவார்களா?
 

No comments

Powered by Blogger.