கிழக்கு மாகாண மக்களுக்கான சகல தேவைகளும் பெற்றுக்கொடுக்கப்படும் - மஹிந்த
கிழக்கு மக்களுக்கான சகல தேவைகளும் தேசத்துக்கு மகுடம் மூலம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அம்பாறையில் தெரிவித்தார். மக்களின் அர்ப்பணிப்பாலும், நாட்டு மக்களின் தியாகத்தாலும் கட்டி எழுப்பப்பட்டுள்ள இன ஐக்கியத்தை எவரும் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் அம்பாறை நகரசபை மைதானத்தில் நேற்று மாலை நடை பெற்றது.
அமைச்சர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, பீ.தயாரட்ண, நிமல் சிறிபால.டி.சில்வா, தினேஷ் குணவர்த்ன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, லக்ஷ்மன் செனவிரட்ன உட்பட பல அமைச்சர்களும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் வேட்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்ட இதில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, நான் அம்பாறைக்கு விஜயம் செய்த போது இங்கு பெளத்த விகாரையைக் காண்கின்றேன், இந்துக் கோவிலைக் காண்கின்றேன், முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டு ஸ்தலங்களைக் காண்கிறேன். சகல இன மக்களும் இங்கு சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். நாம் அர்ப்பணிப்புடன் அரும்பாடுபட்டு வளர்த்த இன நம்பிக்கையையும், மத ஒற்றுமையையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.
சில பிரிவினர் இந்த இன ஒற்றுமையை விரும்பவில்லை. அவர்கள் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என இனங்களைப் பிரித்துப் பார்க்கின்றனர். எம்மால் அப்படிப் பிரிந்து நின்று செயற்பட முடியாது. இந்த நாட்டு மக்கள் கடந்த 30 வருடங்களாக பல துன்பங்களையும், கஸ்டங்களையும் அனுபவித்து, எமது படைவீரர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தும் நாட்டில் அமைதியும் ஒற்றுமையும் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. கிழக்குக் கிராமங்களில் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத யுகம் ஒன்று இருந்தது.
அறந்தலாவையில் பெளத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டனர். காத்தான்குடி பள்ளியில் மதவழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இத்தகைய எல்லா நிலைகளிலும் நாட்டு மக்கள் அமைதிகாத்தனர். பொறுமையுடன் செயற்பட்டனர். மக்களின் அந்த நம்பிக்கை யையும், அனைவராலும் கட்டியெழுப்பப்பட்ட இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், எவரும் சிதைக்க இடமளிக்க முடியாது.
சகல இன மக்களும் அமைதியுடன் வாழக்கூடிய சூழ்நிலையைக் கட்டியெழுப்புவது எமது பொறுப்பும் கடமையுமாகும். நாம் அபிவிருத்தியில் மட்டுமன்றி அமைதியிலும் ஒற்றுமையிலும் நாட்டைக் கட்டியெழுப்பி வருகின்றோம். நாம் பெற்றுக்கொண்டதை மீள காட்டிக்கொடுப் பதற்கு எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது. நாம் தேர்தலுக்காக அபி விருத்திகளை மேற்கொள்பவர்கள் அல்ல. தேர்தல்களை நடத்தும் அதேவேளை, சகல பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் சகல மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
அத்துடன், எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காகவும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். முக்கியமாக கல்விக்கு பெரும் செலவுசெய்து வருகின்றோம். கல்வி அமைச்சினால் மட்டுமன்றி மேலும் பல அமைச்சுக்கள் மூலம் கல்விக்கான செயற்பாடுகள் முன் னெடுக்கப்படுகின்றன. குடிநீர்த்திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் எனப் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். வரட்சி எனும் சவாலைத் தோற்கடிப் பதற்காக எழுபது பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றோம்.அத்துடன் ஆயிரக் கணக்கான நீர்ப்பாசனக் குழங்களை புனரமைத்து வருகின்றோம். ஹிங்குரான, கந்தளாய் உட்பட பல சீனித் தொழிற்சாலை கள் மீள இயங்குவதற்கும் நாம் நட வடிக்கை எடுத்துள்ளோம். சிலர் வெளி நாடுகளிலிருந்து மொலேசஸ் என்ற பதார்த்தத்தைக் இலங்கைக்கு கொண்டுவந்து சீனி உற்பத்தி செய்து மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறினர். இது நடைமுறைக்கு சாத்தியமா? எம்மால் அதை செய்ய முடியாது. நாம் இலங்கையில் சகல சீனி உற்பத்தித் தொழிற்சாலைகளையும் இயங்கவைத்து மக்களுக்கு சிறந்த சீனியைப் பெற்றுக்கொடுப்போம்.
இம்முறை கிழக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நம்பிக்கையான குழுவை நாம் நிறுத்தியுள்ளோம். அவர்கள் தொடர்பான முழுப் பொறுப்பையும் எமது அரசாங்கமும், அமைச்சரவையும் ஏற்கும். மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கைவைத்து எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும். இன, மத, பிரதேச பேதமின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை அமைதியிலும் அபிவிருத்தியிலும் கட்டியெ ழுப்புவோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
Post a Comment