Header Ads



மூதூர் ஜபல் நகர் மலை புத்தர் சிலையும், ரெஜினோல்ட் குரேயின் செல்லாப்பேச்சும்..!


மூதூர் முறாசில்

'மூதூர் பிரதேசத்திலுள்ள ஜபல் நகர் மலைப்பகுதியில் பௌத்த விஹாரையோ புத்தர் சிலையோ ஒரு போதும்  அமைக்கப்படமாட்டாது. சகல இனங்களுக்கும் பொதுவான அம்மலையை  ஒரு மதத்தவரது வழிபாட்டுக்கு    அரசாங்கம்  வழங்காது. அம்மலைப்பகுதியில்  தொல்பொருள் சான்றாதாரங்கள் இருப்பின் அதனைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு மட்டுமே சிலருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது...'

மேலேயுள்ள இக்கூற்றுக்குச் சொந்தக்காரர் சிறு கைத்தொழில் மற்றும் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே ஆவார்.

மூதூர் பிரதேச செயலகப் பரிவிலுள்ள பௌத்தர்கள் எவரும் வசிக்காத ஜின்னா நகர் கிராம உத்தியோகத்தர் பரிவில்,   ஜபல் நகரில் அமைந்திருக்கும் மலைப்பகுதியில் சேருவில விஹாரையின் தலைமை மதகுரு தலைமையில் ஓரு குழுவினர்  விஹாரையொன்றை  அமைப்பதாக பரபரப்பான செய்தியொன்று வெளியாகிக் கொண்டிருந்தது. அவ்வேளையில்   மூதூர் பிரதேசத்திற்கு 2012.06.17ஆம் திகதியன்று விஜயம் செய்த அமைச்சர் ரெஜினோல்ட் குரே மூதூர் பிரதேச முக்கியஸ்தர்களோடு கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டார். அப்போதே அமைச்சர் மேற்கண்ட கருத்தை தெரிவித்திருந்தார்.

 அமைச்சர் தான் மூதூரில் கூறிய கருத்தை மேலும்; உறுதிப்படுத்தும்  வகையில் அன்றைய தினம் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் பத்திரிகையாளர் மகா நாட்டை ஏற்பாடு செய்து அதே கருத்தை மீளவும் வலியுறுத்தியிருந்தார். அமைச்சரின் இக்கருத்து தேசிய ஊடகங்களிலும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்பட்டது.

 ( அப்பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரும் இந்நாள் ஜனாதிபதியின் இணைப்பாளருமான நஜீப் அப்துல் மஜீத் 'ஜபல் நகர் மலையில் சிலை வைப்பதை ஓரு போதும் அனுமதிக்க மாட்டோம்' என்று ஆக்ரோஷமாக கூறியிருந்தார். அது வேறு கதை)

அமைச்சரின் கூற்றினை மூதூரைச் சேர்ந்த பொது மக்களில் அனேகர் நம்பினார்களோ என்னவோ தெரியாது. ஆனால் ஜபல்நகரில் விஹாரை அமைப்பது சம்பந்தமாக அவர்கள் காட்டிய எதிர்ப்பு அல்லது அது சம்பந்தமான பேச்சு படிப்படியாக குறைந்து, மறைந்து சென்றதை மட்டும் அவதானிக்க முடிந்தது.

இருந்த போதும் அமைச்சரவை அந்தஸ்துள்ள ஓரு அமைச்சரின் கூற்றை முழுமையாக பொய்ப்பித்து  2012.08.03ஆம் திகதி   புத்தர் சிலையொன்று குறித்த மலையடிவாரத்தில் வைக்கப்பட்டுவிட்டது. வைக்கப்பட்டுள்ள அச்சிலை சிறிதாக இருந்த போதும் பிரமாண்டமான சிலையொன்றை இம்மலையின் உச்சியில் வைப்பதற்கான முன்னேற்பாடாகவே இச்சிலை வைக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் கருதுகின்றனர். இக்கருத்தினை உரிய தரப்பினரும்  முற்றாக மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிலை சம்பந்தமான  இந்த  'சீக்கிரட்' கதை ஒருபுறம் இருக்கட்டும். அமைச்சரின் கூற்றில் மேலே குறிப்பிடப்படாத முக்கியமான தொடர் வாசகம் ஒன்றும் உள்ளது. அதுதான் ' அம்மலைப்பகுதி புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுமென்றோ, அதன் மூலம் மலையோடு இணைந்த தொழில் வாய்ப்புக்கள் பாதிக்கப்படுமென்றோ எவரும் அச்சம் கொள்ளத்தேவையில்லை...' என்பதாகும்.

இங்கு அமைச்சர் கூறிய 'மறை' வாக்கியத்தை சிலைவைக்கப்பட்டுள்ள இப்போதய சந்தர்ப்பத்திற்கேற்ப   'நேர்' வாக்கியமாக்கிப் பார்த்தால் மூதூர் மக்கள் எதிர் நோக்கவிருக்கும் விபரீதம் தெளிவாகத் தெரிகிறது. உண்மையும் அதுவே !

எது எவ்வாறாக இருந்தபோதும் குறித்த இடத்தில் வைக்கப்பட்டுள்ள பௌத்த சிலைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதோ அல்லது அவ்விடத்தில்   நிர்மாணப்பணியில் ஈடுபட்டுவரும் பௌத்த சகோதரர்களுடன் நேரடியாகச் சென்று முரண்பட்டுக்கொள்ள முனைவதோ  சரியான வழிமுறையாக ஓருபோதும்  அமையாது.

எனவே, ஜபல்மலை விவகாரமானது ஏனைய இன மக்களது இருப்புக்கு அல்லது தொழிலிக்கு பாதகமான நிலைமையை ஏற்படுத்தும் என்று கருதினால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகி நல்லதோர் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முனைப்புடன் செயற்படுவதே சிறந்த வழிமுறையாகும்.  இவ்வழிமுறையில் தனிப்பட்டவர்களோ, பொது நல சங்கங்களோ ஈடுபாடு செலுத்துவதில் எத்தகைய தடையும் இல்லை!   

1 comment:

  1. இந்த பௌத்த காட்டுமிராண்டிகளின் ஆதிக்கத்தில் ஆயுத கலாச்சார வெள்ளை வான் கலாச்சாரத்திலும் அல்லது டிப்பர் மோதி அரசியல் வாதிகளை கொல்லும் ஆட்சி நடக்கும் கல் வணங்கிகளின் விகிதாசார அடிப்படையில் நோக்கும் போது மிகவும் நூதனமாகத்தான் போகவேண்டியுள்ளது புலிவால்கள் போல் நாம் வெளிநாடுகளில் இருந்து கொமென்ட்ஸ் அழுத்துவதை போல் இல்லை இந்த கொலைகார சிங்கள மௌனம் சாதிக்கின்ற அடாவடி செய்கின்ற அவர்களுக்கு எப்போதும் ஆள் கடத்தத் கொல்ல எப்போதும் ரெடியாக இருக்கும் அரசு மறைவாக இப்படியான கீழ் தரமான சூழ்ச்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் போது இந்த மீனவ கிராம மக்கள் என்ன செய்ய முடியும்

    ReplyDelete

Powered by Blogger.