முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் கேட்பது சமூக நலனுக்காகவா..?
நன்றி - விடிவெள்ளி
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்புடன் இருந்து கொண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மாத்திரம் மரச் சின்னத்தில் தனித்துக் கேட்கும் முடிவை எடுத்தமையானது மக்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் சமூகத்தின் மத்தியில் முரண்பட்ட கருத்துக்களையும் தோற்றுவித்துள்ளது என்றே கூற வேண்டும். கிழக்கு சப்ரகமுவ வடமத்திய மாகாண சபைகள் கலைக்கப்பட்டு செப்டம்பர் 8ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் இறுதி வேளையில் எடுத்த முடிவினை கிழக்கு மாகாணம் வரவேற்கின்றதா? என தமிழ் பேசும் சமூகங்களின் பல்துறை சார்ந்தோரிடம் வினவினோம்
தொகுப்பு: எஸ்.அஷ்ரப்கான்
ஏ.அற்புதன் (கல்முனை சேனைக்குடியிருப்பு)
தமிழ் பேசும் மக்களுடைய உரிமைகள், சமூக நலன்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை தமிழ் பேசும் மக்களை சார்ந்துள்ள கட்சிகளுக்கு உள்ளது. அந்த அடிப்படையில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துக் கேட்பது போல் மு. காவும் தனித்துக் கேட்கும் முடிவுக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த முடிவு தமிழ் பேசும் மக்களுடைய பொருளாதாரம், சுயநிர்ணயம், உரிமைகள் என்பவற்றை பாதுகாப்பதற்கான வழியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ஏலவே, மு.கா. அரசாங்கத்துடன் இணைந்து இருந்து செயற்பட்ட வேளையில் தமிழ் பேசும் மக்கள் அதிருப்தி அடைந்த நிலையில் காணப்பட்டார்கள். தற்போதைய இந்த கருத்தொற்றுமை தமிழ் பேசும் சமூகங்களுக்கு மத்தியில் வலுவானதாக தொடர வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
இதனை எமது அரசியல் தலைவர்களும் உணர்ந்து எதிர்கால சுபீட்சமான வாழ்விற்கு வழியமைத்துத்தர வேண்டும். கடந்த கால கசப்பாண உணர்வுகளை மறந்து நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இனங்களுக்கிடையே ஒற்றுமையுடனும், விட்டுக் கொடுப்புகளுடனும் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்தப் பாடுபட வேண்டும். இந்த நாட்டில் எமது சமூகங்கள் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துவதுடன், பெரும்பான்மைகளுக்கு எமது பலத்தை நிரூபிக்கும் தருணத்தில் நாம் இருக்கிறோம்.
எமது ஒற்றுமையைக் குலைக்கக்கூடிய வகையில் இன்று தேசிய ரீதியாக பல்வேறு சதிவலைகள் பின்னப்பட்டு வலுகிறது.யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் பரவாயில்லை. எமக்கு நிம்மதியான சந்தோசமான அச்சமற்ற நிலை ஏற்பட வேண்டும். அதற்கான முதல் வெற்றியை நாம் அடைந்து விட்டோம் என்ற நிம்மதி எமக்கு தற்போது தமிழ் பேசும் தலைவர்களால் ஏற்பட்டுள்ளது.
ஏ.எல்.எம்.தாணீஸ் (தோப்பூர்)
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.காவைத் தவிர்த்து ஏனைய பிரதான முஸ்லிம் கட்சிகள் இரண்டும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் களமிறங்கியுள்ளமையானது மு.காவினால் எதிர்பார்க்கப்படுகின்ற முழுமையான வெற்றியை பெற்றுத்தருமா? என்ற கேள்வியை எழுப்புகின்றது. அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது அபிவிருத்தி என்ற விடயத்தில் பூச்சியமாக உள்ள மு.கா. வெறும் உரிமை கோஷங்களை மட்டும் முன்வைத்து அரசியல் செவது மக்கள் மத்தியில் வெறுப்பையே கொண்டு வருவதை சென்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளில் சில இடங்களை முஸ்லிம் காங்கிரஸ் பறிகொடுத்தமையிலிருந்து நமக்கு தெளிவாகிறது.
அதுமட்டுமல்லாமல் அண்மைக்காலமாக முஸ்லிம் மதத்தலங்கள் காணிகள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்களை தட்டிக்கேட்கும் திராணியற்றவர்களாகவே எமது முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறராகள்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வியூகம் வெற்றியளித்தால் கூட முஸ்லிம் கட்சிகள் ஒன்று சேராதவரை எமது சமூகம் மாற்று இனத்தவர்களிடம் கைகட்டி நிற்பதை யாராலும் தடுக்க முடியாமல் போகலாம். இந்த அடிப்படையில் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமைப்பட வேண்டிய தருணத்தில் முஸ்லிம் காங்கிரஸின் முடிவினால் எதிர்பார்ப்பு சிதறுண்டு போனமை வருந்தத்தக்க விடயமே.
எஸ்.முபாரக் (சாய்ந்தமருது)
மு.கா. அரசுடன் இணைந்து கேட்டிருந்தால் அது தமிழ் மக்களை ஆத்திரமூட்டியிருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் அரசாங்கமும், சிங்கள மக்களும் எம்மை பிழையான கண்ணோட்டத்தில் பார்த்திருக்க வாப்புண்டு. இந்தவகையில் தனித்து தேர்தலில் நிற்பது சிறந்த முடிவாகும். இருப்பினும், இம் முடிவு மக்களின் நன்மைக்காக எடுக்கப்பட்ட முடிவல்ல. மாறாக ஆசனம் குறைக்கப்பட்டதற்காகவும், கட்சியிலுள்ள சிலரின் விருப்புக்கு அமையவுமே எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.
உண்மையில் இந்த தேர்தலில் 3 பிரதான முஸ்லிம் கட்சிகளும் ஒன்றாக இணைந்து களத்தில் குதித்திருக்க வேண்டும். அதுவே சிறந்த முடிவாக இருந்திருக்கும். ஆனால் பதவியைக் காப்பதற்காக பாரிய வரலாற்றுத்தவறையும் சமூகத் துரோகத்தையும் முஸ்லிம் கட்சிகள் செதுள்ளன.
எந்த முஸ்லிம் தலைவருக்கும் முஸ்லிம் முதலமைச்சர் வரவேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ உண்மையில் கிடையாது. அவர்களுடைய நோக்கமெல்லாம் எவர் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. எதை விற்றாவது தன்னுடைய பதவியை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமேயாகும். அமைச்சுப் பதவியை அனுபவிக்கும் போட்டியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் உடைந்தது. அவ்வமைச்சுப் பதவியைப் பெற்றவர்கள் கூட அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் வந்தபோதும் காத்திரமான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவோ அமைச்சுப்பதவியை துறக்கவோ அரசாங்கத்தை விட்டு வெளியேறவோ இல்லை. இவர்களது கட்சிகள் சமூகத்திற்கான கட்சிகளல்ல. மாறாக சிலரின் சுய இலாபத்திற்கான கட்சிகளே.
கே.சுபைர் (வாழைச்சேனை)
கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணையாது தனித்துக் கேட்பது முட்டாள் தனமான முடிவாகும். அரசியல் கள நிலவரத்தில் இதற்கு முதல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களின் பக்கம் சார்ந்து முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க வாப்பிருந்தும் அதையெல்லாம் துச்சமாக எண்ணிவிட்டு சுயலாபத்திற்காகவும், புத்தி சாதுரியமற்ற முறையிலும் முடிவுகளை எடுத்தமையால் பல்வேறு இன்னல்களை எமது சமூகம் கண்டது.
இப்போதும் அரசின் ஆதரவுடன் தனித்துக் கேட்பதாக பாசாங்கு செகின்றனர். கிழக்கு முஸ்லிம்கள் விழித்து விட்டார்கள். தேர்தல் காலங்களில் மாத்திரம் வருவதும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் காங்கிரஸ் என்றால் மரக் குச்சியை வேட்பாளராக நிறுத்தினாலும் மக்களின் வாக்குண்டு என்ற நிலை மாறி வருகிறது. இறுதிவரை அரசுடன் இணைந்து கேட்பது என்று கூறிவிட்டு இறுதியில் தனித்துக் கேட்கப் போகின்றோம் என்று இத்தருணத்தில் எடுத்த முடிவு தலைவரின் சுயநலத்தையே காட்டுகின்றது.
அஷ்ரபிற்குப் பிறகு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது சமூதாயத்திற்கு என்ன விடியலைப் பெற்றுத்தந்துள்ளது? எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மு.கா. பூச்சியமே. எனவே, அரசுடன் இணைந்து தேர்தல் கேட்டிருந்தால் அதுவே மக்கள் மத்தியில் பெரு வரவேற்பைப் பெற்றிருக்கும்.
எம். இப்ராலெப்பை (அஷ்ரப் நகர், ஒலுவில்)
நான் அஷ்ரப் நகரில்கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறேன். எமது வாழ்விடங்களை விட்டு இன்று நாங்கள் வெளியேற்றப்பட்டுள்ளோம். இதனைத் தட்டிக்கேட்டு உரிய தீர்வைப் பெற்றுத்தர முடியாத நிலையிலேயே எமது தலைவர்கள் உள்ளனர். இவ்வாறு நடுத்தெருவில் விடப்பட்டுள்ள நாம் எந்தவொரு அரசியல்வாதியையும் நம்பத்தயாராக இல்லை. இதனால் மாற்று வழிகளையே கையாள வேண்டி உள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் தனித்துக் கேட்கும் முடிவை எடுத்தாலும், ஆட்சியமைத்தாலும் கூட எமக்குரிய அதிகாரங்கள், உரிமைகள் பெற்றுக் கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அதிகாரத்தின் ஊற்றாக ஆளுநர் உள்ளமையால் தமது அதிகாரங்களை முதலமைச்சர் முதற் கொண்டு, சகல உறுப்பினர்கள் வரையிலும் செயற்படுத்த கட்டுப்பாடுகள் இருக்கும் என்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவினால் எதிர்காலத்தில் எந்த காத்திரமான தீர்வும் எமது சமூகங்களுக்கு எட்டப் போவதில்லை. இதனால் எந்த முடிவினை கட்சிகள் எடுத்தாலும் நாங்கள் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை.
தங்கள் சுயநலமன்றி சமூக நலன் கிஞ்சித்தும் கிடையாது மரதிட்கு மரம் பட்டமரமாகி கொண்டிருப்பதையும் இன கலவரத்தை தூண்டும் ஆக்ரோஷமான இனகுரோத மேடைபேசுக்கள் பேசபடுவதுமே மரம் வங்குரோத்து அடைந்துவிட்டதை தெளிவாக காட்டுகிறது
ReplyDelete