Header Ads



முஸ்லிம் தலைமைகள் வாய்ச் சொல்லில் வீரரடி..!



ஏ.ஆர்.ஏ.பரீல்

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, 
வஞ்சனை சோல்வா ரடீ! - கிளியே! 
வாச் சோல்லில் வீரரடி. 
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, 
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! 
நாளில் மறப்பா ரடீ!
-மகாகவி பாரதியார்

நாட்டில்  பள்ளிவாசல்களுக்கெதிராக சவால்கள் சங்கிலித் தொடராக நீண்டு செல்கின்றன. தம்புள்ளை பள்ளிவாசலில் ஆரம்பித்த தாக்குதலும் தடைகளும் இன்று ராஜகிரியவில் கால் பதித்துள்ளன.

குடிசன  மதிப்பீட்டின்படி முஸ்லிம்களின் சனத்தொகை 28 இலட்சமாகும். 2500 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், 220 க்கும் மேற்பட்ட அரபு மத்ரஸாக்கள், 2500 க்கும் மேற்பட்ட குர்ஆன் மக்தபுகள், 450 அஹதியா பாடசாலைகள், 61 காதி நீதிபதிகள், நூற்றக்கணக்கான இஸ்லாமிய அமைப்புக்கள், ஜமாத்துக்கள்,  தரீக்காக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை நாம்  பெற்றுள்ளோம்.

6000 க்கும் மேற்பட்ட ஆலிம்களையும் 2500 க்கும் மேற்பட்ட ஹாபிழ்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர்களையும் எமது சமூகம் உள்ளடக்கியிருக்கிறது. இவை அனைத்தும் இலங்கை முஸ்லிம்களின் சோத்துக்கள் இச் சோத்துக்கள் தொடராகப் பாதுகாக்கப்பட வேண்டும். இவை பாதுகாக்கப்பட வேண்டுமெனில் எமது சமூகத்தின் அடிப்படைகள் சீராக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் அல்குர்ஆன், அல் ஹதீஸ் ஆகிய மூலாதாரங்களின் அடிப்படைகளில் கட்டி எழுப்பப்பட வேண்டும். அந்த அடிப்படைகளை 5 முக்கிய கூறுகளாக வகுக்கலாம். ஈமான், இபாதத், முஆமலாத், முஆஷராத் மற்றும் அக்லாக் என்பனவே அவை.

இன்று இந்த அடிப்படைகளை வளர்ப்பதற்காகவும் நிலை நாட்டுவதற்காகவும் தேவையான  முயற்சிகள் மேற்கொள்ளப்படாததினாலேயே பல்வேறு பயங்கர விளைவுகள் ஏற்படுகின்றன  என்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் செதி மடல் கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு  கவனத்திற்கொள்ளப்பட வேண்டும்.

இரு வாரங்களுக்கு முன்பு ராஜகிரிய ஒபேசேகரபுரவில் நடைபெற்ற சம்பவம் முஸ்லிம் சமூகத்தை பீதிக்குள்ளாக்கியுள்ளது. ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலுக்கு மாலை 7.30 மணியளவில் பௌத்த பிக்குவின்  தலைமையில்சென்ற குழுவினர் அங்கு தொழுகை நடாத்தப்படக்கூடாது என்று கோஷமெழுப்பியிருப்பதுடன் தொழுகைக்கும் இடையூறு விளைவித்திருக்கிறார்கள். பள்ளிவாசலை மூடும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து நான்கு தினங்கள் பள்ளிவாசல் மூடப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட பள்ளிவாசல் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 500  முஸ்லிம் குடும்பங்கள் பள்ளிவாசல் எல்லைக்குள் வசிக்கின்றன. இப் பிரச்சினை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் பள்ளிவாசல் நிர்வாக  சபை மூலம் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர்,  சிரேஷ்ட அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பினரும் வெலிக்கடை பொலிஸுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் பௌத்த  பிக்குகளுக்கிடையில் சமரசமொன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க சமாதான முயற்சிகளில் ஈடுபட்டார்.

நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் சகல மதத்தினருக்கும் மத அனுஷ்டானங்களுக்கான உரிமையும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை எவராலும்  தடை செய முடியாது என்பதை எடுத்து விளக்கிய பிரதி பொலிஸ் மா அதிபர் எதிர்வரும் 25 ஆம் திகதிவரை குறிப்பிட்ட பள்ளிவாசலில் தொழுகைகள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார். 25 ஆம் திகதிக்குப் பின்பு பள்ளிவாசலின் பதிவு தொடர்பான ஆவணங்களை  கலாசார அமைச்சுக்கு சமர்ப்பித்து சட்ட ரீதியான உரிமையினை  உறுதி செது கொள்ளும்படியும் அவர் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.

குறிப்பிட்ட  பள்ளிவாசலுக்கு தொழுவதற்காக வெளியிடங்களிலிருந்தும் மக்கள் வருவதாக பௌத்த குருமார் பொலிஸாரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து வெளியிடங்களிலிருந்து தொழுகைக்கு வருவது நிறுத்தப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் பள்ளிவாசல்  நிர்வாக சபைக்கு உத்தரவிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை மேயர் ஜானக ரணவக்க பள்ளிவாசல் மூடுவதற்கு அனுமதிக்க முடியாதெனவும் முஸ்லிம்களின் சமய கடமைகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசல் சட்டவிரோதமானது. ஒபேசேகரபுரவிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ராஜகிரிய ஜும்ஆ பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ளது. ஆகையால் ஒபேசேகரபுர முஸ்லிம்கள் ராஜகிரிய ஜும்ஆ பள்ளிவாசலையே பயன்படுத்த வேண்டும்" என்பதே பௌத்த பிக்குகளின் வாதமாகும்.

தொடராக நான்கு நாட்கள் மூடப்பட்டு தராவீஹ் மற்றும் ஐவேளைத் தொழுகைகள் தடைப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரின் உத்தரவுக்கிணங்க தற்போது பள்ளிவாசல் திறக்கப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிம்களின் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்ட  இரண்டாவது சம்பவம் இதுவாகும். இதற்கு முன்பு குருநாகல் தெதுறு ஓயாகம பள்ளிவாசலிலும் இது போன்ற சம்பவம் இடம்பெற்றது. அங்கு நோன்பு துறக்கும் நேரத்தில் பௌத்த பிக்குவின் தலைமையில் வருகை தந்த குழுவினர் பள்ளிவாசலின் முன்னால் கதிரை போட்டு வெள்ளை புடவை விரித்து அமர்ந்து பிரித் ஓதி பள்ளிவாசலை மூடிவிடும் படியும் தொழுகையை நிறுத்தும் படியும்  கோஷமெழுப்பிளிருந்தனர். அன்றைய தொழுகைக்கு தடையேற்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் பிரதேச அரசியல்வாதிகளினதும் பொலிஸாரினதும் தலையீட்டினால்  சுமுகமாகத் தீர்க்கப்பட்டது என்றாலும் நோன்பு முடிவுக்கு வந்ததும் மீண்டும் பள்ளிவாசலுக்கு எதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படலாம்  என பிரதேச மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கிறார்கள்.

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை நோக்குவோமென்றால் அப்பிரச்சினை தற்காலிகமாகவே தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு எவ்வகையிலும் இடமளியோம்  என முஸ்லிம் அரசியல்வாதிகள் சவால் விட்டுள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட தம்புள்ளை ரங்கிரி விகாரை பிரதம குரு இனாமலுவே சுமங்கள தேரர் பள்ளிவாசலை அகற்றும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். 

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை தான் சுமுகமாகத் தீர்ப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ள நிலையிலேயே தேரரின் இந்த செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சில தினங்களுக்கு முன்பு ஜனாதிபதி தம்புள்ளைக்கு  விஜயம் செது இனாமலுவே சுமங்கள தேரரைச் சந்தித்து தம்புள்ளை புனித பிரதேசம் தொடர்பாகக் கலந்துரையாடியிருக்கிறார். அங்கிருந்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு  தம்புள்ளை புனித பூமி அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்தும் படியும் பணிப்புரை வழங்கியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபை தனது ஆரம்ப நடவடிக்கைகளை ஏற்கனவே பூரணப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் புனித பூமி பிரதேசத்துக்குள் குறித்த பள்ளிவாசல் செயற்பட அனுமதிக்கப்படுமா? என்பது சந்தேகத்துக்கிடமாக உள்ளது.  பள்ளிவாசலை அங்கிருந்து அகற்றுவதற்கு  முன்னின்று  செயற்பட்டுவரும் இனாமலுவே சுமங்கள தேரர் பள்ளிவாசல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் அங்கிருந்து அகற்றப்படுமென ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து  வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக்கிழமை  கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன,   தம்புள்ளை புனித பூமி  பிரதேசத்தில் பள்ளிவாசல் இருப்பது பிரச்சினையில்லை என்று இனாமலுவே சுமங்கள தேரர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அண்மைக் காலமாக  நாட்டில்  இடம்பெற்று வரும் பள்ளிவாசல்களுக்கெதிரான செயற்பாடுகள் ஒரு திட்டமிட்ட சதி  என்று ஜனாதிபதி தன்னைச் சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம் ஒன்றியத்திடம் தெரிவித்துள்ளார். இவை திட்டமிட்ட சதி என்றால் ஏன் நாட்டின் தலைவரால் சதிகாரர்களைக் கண்டுபிடித்து இந் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளியிட முடியாது என்ற கேள்வியை நிச்சயம் சுதந்திரக் கட்சிக்காரர்கள் அன்று எழுப்பியிருக்கமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

அரசுடன் இணைந்து செயற்பட்டு வரும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இது  எதிர்க்கட்சியினரின் சதித்திட்டம் என்றே  அறிக்கை விடுகின்றனர். ஒவ்வொரு  பள்ளிவாசலுக்கு எதிரான சம்பவங்களின் போதும் இவ் அறிக்கைகளை  எம்மால்  வாசிக்க முடிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினர் பள்ளிவாசல் சம்பவங்களை பெரிதுபடுத்தி நாட்டின் சமாதானத்திற்கு சவால் விடுகின்றனர். அரசியல் லாபம் தேடுகின்றனர் என்று அரச தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல்  உலமா சபையும் முஸ்லிம்களை  பொறுமையைக் கடைப்பிடியுங்கள். அல்லாஹ்விடம் பள்ளிவாசல்களைக் காப்பாற்றுமாறு  பிரார்த்தனை புரியுங்கள். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்றே வேண்டுகிறது.

எமது பள்ளிவாசல்கள் நீதிமன்றங்களாக, கல்வி நிலையங்களாக,  சமாதான நிறுவனங்களாக,  குடும்பப் பிரச்சினைகளுக்கு  தீர்வு காணும் உளவியல் மன்றங்களாக இயங்கி வந்த வரலாற்றுப் பதிவுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.  இன்று பள்ளிவாசல்களுக்கு எத்தனை பேர் தொழுவதற்கு வருகிறார்கள்? பள்ளிவாசல்களைப் பரிபாலிக்கும் நிர்வாகிகள் அனைவரும் தகுதியானவர்கள் தானா? என்ற வினாக்கள் முளைவிடுகின்றன. இதனாலேயே  இன்று பள்ளிவாசல்களுக்கு சோதனைகள், சவால்கள் ஏற்பட்டுள்ளன.  அல்லாஹ்வின் சோதனையே இது" என்று இப்தார் நிகழ்வு ஒன்றில் அஷ்ஷெய்க் நௌபர் (கபூரி) முன்வைத்த கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை.

பள்ளிவாசல்கள், தக்கியாக்கள்  அதிகரித்து வருகின்றன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.  சிறிய கிராமங்களில் அருகருகில் தக்கியாக்கள் எழுந்துள்ளனவே தவிர அங்கு நடைபெறும் தொழுகைகளில் விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரே கலந்து கொள்கின்றமை வேதனையைத் தருகிறது. 

பெரும்பாலான கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கைப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் குடும்பங்கள் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை. திருமண வயதையும் தாண்டி திருமணமொன்றுக்கு வசதி வாப்புக்களின்றி முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பெண்கள் பற்றி சமூகம் அதிகம் சிந்திப்பதில்லை.

பள்ளிவாசல்கள், தக்கியாக்கள், நிறுவுவதற்கு மத்ரஸாக்கள் உருப்பெறுவதற்கு அள்ளிக் கொடுக்கும் சமூகம் இவர்களை மறந்து விடுகிறது. உதவி கேட்டுப் போனாலும் கை  விரிக்கப்பட்டு வருகிறது.  இந்த சமூக அவலங்களை் பற்றி, பள்ளிவாசல்களுக்கு சவாலான இந்த கால கட்டத்தில் நாம்  சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அரசியல்வாதிகளும், சமூகத் தலைவர்களும் சுய இலாபத்தையே இலக்காகக் கொண்டு  செயற்பட்டுக் கொண்டிருக்கும் வரை பள்ளிவாசல்களுக்கெதிரான சவால்கள்  தொடர்ந்து கொண்டே இருக்கும்...!


.

No comments

Powered by Blogger.