தமிழ் - முஸ்லிம் உறவுக்கு எதிரான தீயசக்திகள் - பார்க்க மறுத்த பக்கங்கள்..!
மாகாண சபைத் தேர்தற் களம் சூடு பிடித்துவரும் - குறிப்பாக தமிழ் முஸ்லிம்களின் கவனம், பெரும்பாலும் தேர்தலின்பால் திசைத் திரும்பியிருக்கும் இக்காலக்கட்டத்தில் கடந்த புதன் கிழமை (ஜுலை 18) முதல் புதுப்பிரச்சினை ஒன்று, நாளிலும் பொழுதிலும் பூதாகாரமாக்கப்பட்டு வருவது, வேதனைக்கும் ஒருவகையில் வெட்கத்திற்கும் உரியதாகும், ஏனென்றால், 'மெய்ப் பொருள் காண்பதே அறிவு' எனப் படித்துப் பட்டம் பெற்றவர்களே, 'கண்ணால் காண்பதும் பொய் - காதால் கேட்பதும் பொய் - தீர விசாரித்தறிவதே மெய்' என்ற இலக்கண வரிகளை மறந்தவர்களாக கச்சைக் கட்டிக்கொண்டு அணிதிரண்டு நிற்பதனாலாகும்.
நடந்த சம்பவத்தையும், தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளையும், சில பின்னணிகளுடன் உரசிப் பார்க்கும்போது, தமிழ் பேசும் வடபுலத்து முஸ்லிம்களை பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த சொந்த இடங்களில் மீள குடியேற விடாமல், ஊமைத்தனமாகத் தடுக்கும் நடவடிக்கைகளின் வெளிப்பாடாகவும், தம் சதிவலை திட்டங்களுக்கு பெரும் நந்திச்சிலையாக குறுக்கே நிற்கும் ஆளும் தரப்பின் அமைச்சரவை அந்தஸ்துள்ள - தன் சமுதாய மக்களை பாரம்பரிய மண்ணில் மீள்குடியேற்றஞ் செய்யத் துடிப்புடன் பணியாற்றிவரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஏதேனும் ஒரு வழியில் பலமிழக்கச் செய்து, முகவரி இழக்கச் செய்வதற்கான திட்டமுகமாகவேயிருப்பது புரிகிறது.
குறிப்பிட்ட புதன்கிழமையில் நீதிபதி வழங்கிய தீர்ப்பு, தங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்ட தொனியில் அமைந்ததை எண்ணியே முஸ்லிம்கள் சாத்வீகமான முறையில் தம் அதிருப்தியை காட்டினர். அப்போது அவ்விடத்தே காவலிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இந்த சாத்வீகப்போராட்டத்திற்கு கண்கண்ட சாட்சியாவர். மன்னார் நீதவான் நீதித்துறையின் கண்ணியம் காக்கும் கருப்பு நிற அங்கியுடன், புனிதமான நீதிமன்றத்தின் மேற்பீடத்தை விட்டிறங்கி தெருவுக்கு வந்து ' கண்ணீர்புகை வீசும்படியும், துப்பாக்கிப் பிரயோகம் செய்யும்படியும்' நிதானம் தப்பக்கூடாத அந்த நீதவான் கட்டளைப் பிறப்பித்ததை அடுத்தே, சாத்வீகப் போராட்டத்தின் நடுவே கொந்தளிப்பு ஏற்ப்பட்டுள்ளது.
குற்றம் இழைத்தவனைவிட, குற்றம் இழைக்கத்தூண்டும் காரணங்களே, தூண்டுபவனே உண்மையான குற்றத்திற்கு உரித்தாவார் என்ற நீதித்துறையின் அரிச்சுவடி பாடம் நம் சிந்தனைக்குரியது.
நீதி நியாயங்களுக்கு சகிப்புத்தன்மையோடு இணங்கிப் போகும் முஸ்லிம்கள், நீதவான் வழங்கிய தீர்ப்பில் திருப்தியுறாமல், தம் அதிருப்தியை சாத்வீக முறையில் வெளிக்காட்ட முனைந்தது ஏன்?
மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர் சங்கத்திற்கு சொந்தமான கோந்தைப்பிட்டி மீன்வாடியை விடத்தல்தீவு கத்தோலிக்க மீனவர்கள் அடாவடித்தனமாக ஆக்கிரமித்து, தங்கள் பாவனையில் வைத்திருந்தனர். உப்புக்குளம் மீனவர்களுக்கு உரித்தான மேற்படி மீன்வாடியை மீண்டும் தமது மக்களின் பாவனைக்கு அதாவது முஸ்லிம் மீனவர்களின் தேவைக்கு மீளப் பெறுவதற்கான உரிமைப்போராட்டம், இன்றைய நேற்றைய சமாச்சாரமல்ல. கடந்த 2001முதல் நடந்து வரும் உரிமைப் போராட்டமாகும். முஸ்லிம்கள் தரப்பில் இது தொடர்பாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட இரு இனத்தாரும் அறிவர்.
சுமார் பதினொரு வருடமாக (2001முதல்) இடம் பெற்று வந்த இந்தப்போராட்;டம் எந்த இடத்திலும் வெடித்து, வெளியுலகின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் வெளிச்சத்திற்கு வராமல் இருந்ததிலிருந்தே, உரிமைகோரி போராடிய முஸ்லிம் மீனவர்கள் - குறிப்பிட்ட மீன்வாடிக்கு உரித்துடையவர்கள் அமைதியான - சாத்வீக முறையிலேயே தம் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்திருக்கின்றனர் என்பதை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா? மன்னாரிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீள குடியேறி, பிரஸ்தாப மீன்வாடியை கேட்கும்போது, கத்தோலிக்க மீனவர்கள் முஸ்லிம்களிடம் கொடுத்துவிட்டு செல்ல வேண்டும் என, அன்று புலிகளின் மன்னார் பொறுப்பாளராகவிருந்த அமுதன் என்பவரால் உடன்படிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற தகவல்களை, சட்டத்தரணிகளும் - சட்டத்தரணிகள் சங்கமும் - ஏனைய 'மெய்ப்பொருள்' அறிந்தவர்களும் தெரியாமல் இருக்க நியாயமில்லை.
முஸ்லிம்களுக்கு சொந்தமான மீன்வாடியை, புலிகளின் அப்போதைய பொறுப்பாளர் அமுதனால் செய்யப்பட்ட உடன்படிக்கைக்கு விரோதமாகவும், நீதி நியாயங்களுக்கு மாற்றாகவும் - எத்தனையோ முறை சம்பந்தப்பட்டவர்களோடு கலந்துரையாடி, வெளியேறுவதற்கான திகதிகள் (நாட்கள்) பல தீர்மானிக்கப்பட்டும், எதற்குமே அசைந்து கொடுக்காத நிலையில்தான், முஸ்லிம்கள் அதிருப்தியின் எல்லைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பதை யதார்த்தபூர்வமாக சிந்திக்க வேண்டும்.
உடன்படிக்கை - அரசியல்வாதிகளினதும், சமூகப் பெரியார்களினதும் வேண்டுதல் எதையுமே பொருட்படுத்தாமல், அசைந்து கொடுக்காமல், வெளியேறாமல் இருப்பதன் அர்த்தமென்ன? முஸ்லிம்களுக்கு வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை செய்யவிடாமல் ஆக்குவதன் மூலம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை அர்த்தமற்றதாக ஆக்கும் திட்டத்தின் பின்னே, தீய சக்திகளின் கரம் துணையிருக்கிறது என எண்ண இடமுண்டல்லவா?
இப்படியான உரியதை இழந்து நிற்கும் நிலையில், தன் சமுதாய மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென, அம்மக்களால் தம் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்றத்திலும் - வெளியிலும் குரல் கொடுப்பதில் தவறுண்டாமோ. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தம் சமுதாய மக்களுக்காக குரல் கொடுப்பது தவறென்றால், இன்று விடிவை நாடி நிற்கும் தமிழ் சமூகத்திற்காக, எத்தனையோ தமிழ்த் தலைவர்கள் பகிரங்கமாகக் குரல் கொடுத்து வருகின்றனரே........ அதுவும் தவறு எனச் சொல்லலாமா?
என்னதான் நாட்டில் அரசியல் காற்று சுற்றி சுழன்றடித்தபோதும் வடபுலத்து தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக, வன்னி மாவட்ட எம்பியான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால், தன்னாலான எல்லாப் பணிகளையும் - சேவைகளையும் செய்தே வந்திருக்கின்றார் என்பது பதிவான ஆவணங்களாகும். இதை தீயசக்திகள் மறைக்க முனைந்தாலும், அப்பாவி தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். இப்போதும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சிற்கு தினந்தோறும் பல்வேறு தேவைகளுக்காக வந்துபோகும் தமிழ் மக்கள் அமைச்சரின் தன்னலமற்ற சேவைக்கு சான்று பகர்வர்.
இதனால் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு பெருகிவரும் செல்வாக்கு - பிரபல்யம் போன்றவற்றை சீரணிக்க முடியாத தீய சக்திகள் - அரசுக்கு விரோதமான - புலி ஆதரவு சக்திகள் மதத்தையும், இனத்தையும் கருவிகளாகப் பயன்படுத்தி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குரலை அடக்க பலவழிகளிலும் முயற்சிக்கின்றனர் என்பதே உண்மை.
மன்னார் நீதிமன்றத்தின் தீர்ப்பு - நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே - சற்று தூரத்தில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களின் சாத்வீக அதிருப்தி போராட்டம் - நீதிபதியின் முஸ்லிம்களை கண்ணீர்புகை - துப்பாக்கி பிரயோகம் செய்து அழிக்கும்படி கூறிய தெரு பிரகடனம் - அதனால் ஏற்பட்ட சலசலப்பு, கொந்தளிப்பு போன்ற விஷயங்களை அறிந்து அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விஷேட விமானம் மூலம் புறப்பட்டு மாலை 3.45 மணியளவில் மன்னாரை வந்திறங்கினார். அமைச்சர் வந்திறங்கியபோது, நிலைமை சீராகி அமைதி நிலவியது. இதுவே உண்மை நிலை. அப்படியிருக்க, அமைச்சர் தூண்டிவிட்டார் தூபமிட்டார் என பழிபோடுவது உண்மைக்கு மாறானது.அமைச்சர் தள்ளாடி விமான நிலையத்தில் இறஹ்கி அரசாங்க அதிபருடன் சென்று உப்புக்குளம் மக்களை சந்தித்தமைக்கான புகைப்படங்கள்,வீடியோக்களும் ஆதாரமாக எம்மிடம் உள்ளது.அமைச்சருடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரும் பயணித்துள்ளமை இதற்கு சான்றாகும்.
மற்றது - அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தன்னை நம்பி வாக்களித்து, தம் பிரதிநிதியாகத் தெரிவு செய்து அனுப்பிய மக்களுக்கு, தமிழ் - முஸ்லிம் - கிரிஸ்தவர்கள் என்ற பேதம் காட்டாமல் அளப்பரிய சேவைகளை செய்து வருவதால், பொதுமக்களிடையே பெருகிவரும் ஆதரவு - அதனால் ஆளுந்தரப்பில் ஏற்ப்பட்டுவரும் முக்கியத்துவம் என்பன், முஸ்லிம்களை வடபுலத்தில் மீளவும் குடியேறவிடாமல் தடுக்கும் எண்ணம் ஈடேற முட்டுக்கட்டையாக இருப்பதை, தீயசக்திகளால் சகிக்க முடியவில்லை.
சில மாதங்களுக்கு முன் ஜெனிவாவில் இலங்கைக்கு விரோதமாக் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு, அரபுநாடுகளிடையே இலங்கைக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பங்காற்றல் சிறப்பானது. ஜனாதிபதி உட்பட, ஆளும் அணியின் பிரதான முக்கியத்தர்களின் கவனத்தை எல்லாம் அமைச்சரின் அரபுலக பங்காற்றல் கவரந்தது. இது அரசுக்கு விரோதமான - புலி ஆதரவு சக்திகளுக்குப் பிடிக்கவேயில்லை. வெளிக்காட்டிக் கொள்ள முடியாத இந்த வெறுப்பு, அமைச்சர் ரிஷாத் பதியுதீனை எப்படியும் ஓரங்கட்டி - செல்வாக்கிழக்கச் செய்யும் திட்டத்தை தீவிரமாக்கி வருகின்றது.
சில நாட்களுக்கு முன் மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் அவர்களுடன் மோதவிட்டு பார்த்தார்கள். அது பிசுபிசுத்துப் போயிற்று. இப்போது மன்னார் மீனவர்கள் விவகாரத்தில் உண்மை எங்கேயோ ஒளிந்திருக்க, அது புரிந்தும் புரியாதமாதிரி ஊதி ஊதி பெரிசாக்கி, அதன்மூலம் நினைத்ததை முடிக்க முனைகின்றனர். சட்டம் பயின்றவர்களை தூண்டிவிட்டு, நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டின் எல்லா இன, மத மக்களுக்கும் பொதுவான சட்டத்தரணிகளின் சங்கமே பக்கம் சார்ந்து பார்வை மங்கி அறிக்கைவிடும் அளவிற்கு தீய சக்திகளின் கை ஓங்கியிருக்கின்றது. சரிந்த பார்வை எப்போதும் உண்மையை தரிசிப்பதில்லை.
வாய்மையே வெல்லும் - சத்தியம் வென்றே தீரும் - அசத்தியம் அழிந்தே தீரும் என்று சமயங்கள் எல்லாம் சொல்வதை, சட்டம் பயின்ற காலத்திலேயே மனதில் பதித்துக் கொண்டவர்கள் கூட, தீயசக்திகளின், திருகுதாளத்திற்கு அடிமையாகி விட்டாரடகளோ ? என்பதை எண்ணும் போது, சிரிப்பதா - அழுவதா எனப் புரியவில்லை.
கிழக்கு மாகாணத்து முஸ்லிம் சட்டத்தரணிகள், இவ்விவகாரத்தில் வடபுலத்து முஸ்லிம்களும், அவர்களின் மீள்குடியேற்றத்திற்காக அயராது பாடுபடும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு வருவதும், அதற்கு சட்டம் பயின்றவர்களும், பொது அமைப்பான சட்டத்தரணிகளின் சங்கமும் இருபக்கத்து நியாயங்களையும் சீர்தூக்கிப் பாரத்து, நேரிய முடிவுக்கு வராமல், முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை எடுத்திருக்கும் அறியாமையைப் போக்கும் பொறுப்புணர்வில் தம் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு, குறிப்பாக பொது அமைப்பான சட்டத்தரணிகளின் சங்கத்திற்கு நிலைமையை புரியவைக்கும் காரியங்களிலும் இறங்கியுள்ளனர். இவையாவும் விசாரணை செய்துவரும் அதிகாரிகள் அறியாத மூடுமந்திரம் அல்ல.
நீதித்துறையின் அடிப்படை நோக்கமே, சுற்றவாளி வெற்றிபெறுவதைவிட, ஒரு நிரபராதி குற்றவாளியாக்கப்படக் கூடாதுளூ தண்டனைக்கு ஆளாகி விடக்கூடாது என்பதுதான் என்பதை நன்கு அறிந்த - படித்த சட்டத்துறை சார்ந்தவர்களே, அரசின் விசாரணை இன்னும் முடியாத நிலையில், தீர்ப்பு இன்னுமே வழங்கப்படாத நிலையில், அமைச்சர் ரிஷாத் பதியுதீனை குற்றவாளி போல காட்ட முனைவது, எந்த வகையில் நியாயம்?
பார்க்க மறந்த - பார்க்க விரும்பாத - பார்க்க விடாத இந்தப் பக்கங்களையும்,அன்றாடம் தூண்டுதல் பேரில் இடம்பெற்று வரும் சம்பவங்களையும் அலசி ஆராயும் போது, சமயம் - இனம் - சட்டம் - நீதித்துறை போன்ற எல்லாத்துறைகள் மூலமும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனை செல்வாக்கிழக்கச் செய்வதன் மூலம் வடபுலத்து முஸ்லிம்களை, ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வந்த பூர்வீக மண்ணில் அவர்களை மீளக் குடியேற விடாமல், ஓர் இனச்சுத்திகரிப்பை மீண்டும் செய்வதே தீயசக்திகளின் நோக்கமாகும் என்பது தெளிவாகிறது.
கற்றுக்கொண்ட பாடமாக, முஸ்லிம்களை இரு மணி கெடுவில் விரட்டியவர்கள் - தாம் செய்த வரலாற்று தவறால், குற்றத்தினால் இன்று முகவரி இழந்திருப்பதை உணர்ந்தும், மீண்டும் அதே வரலாற்று குற்றத்தை வேறு வழிகளில் செய்ய முனைவோர், யதார்த்த நிலையை புரிந்து - தம் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழ் பேசும் இந்து, கிரிஸ்தவ, முஸ்லிம் மக்கள் இன்று பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில், தமிழ் - முஸ்லிம் - கிரிஸ்தவர்களின் ஒற்றுமை பல வழிகளிலும், விரும்பப்படுகிறது, வற்புறுத்தப்படுகிறதுளூ வரவேற்கப்படுகிறது. இந்த ஒற்றுமையே இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களை கரை சேர்க்கும். சுதேசிய விதேசிய மட்டங்களில் இதற்குப் பல உதாரணங்களை சுட்டிக்காட்ட முடியும்.
வரலாற்றின் வாயிலாக இந்த யதார்த்ததைப் புரிந்து செயற்படாவிட்டால், தமிழ்பேசும் சிறுபான்மை இனங்களுக்கு விடியலே கிட்டாதுபோகும். எதிர்முனை கரமே ஓங்கி நிற்கும். நாம் எல்லோருமே நம் எதிர்கால சந்ததியினரை வாழவிடாது ஆக்கிவிட்ட குற்றத்திற்கு ஆளாவோம் என்பது உறுதி. தனிநபர் - தனிக்குழு நலனைவிட,ஒட்டுமொத்த சமூகத்தின் நலனே முக்கியம் என்பதை சட்டம் பயின்றோருக்கும், ஏனைய படிப்பாளிகளுக்கும் உணர்த்திட விரும்புகிறோம்.
நல்ல கருத்துத தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் றிசாத் என்பவர் என்று பார்ப்பதை விட வடக்கு முஸ்லிம்களுக்கு தலைமை தாங்கும் ஒருவா் என்று நோக்கப்படுவது தான் பொறுத்தம் என்பதை தெளிவாக இந்த கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ReplyDeleteதமிழ் ஊடகங்கள் இன்று முஸ்லிம்களது செய்திகளை பிரசுரிப்பதில் பஞசப்படுகின்றதை இதன் மூலம் பாரக்கலாம்,முஸ்லிம்கள் அடித்துக் கொள்வதை பெரிதாக காட்டும் ஊடகங்கள் 20 வருட வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் உண்மையை விழுங்கி செயற்படும் வேளையில் கலாபூசனம் சஹாப்தீனின் ஆக்கம் வரவேற்கத்தக்கது.
நல்ல ஒரு கட்டுரை. நிஜத்தை அப்படியே தோலுரித்துக் காட்டும் கட்டுரை. இதெல்லாம் அபூ மர்யம்களுக்கு (அப்பு மரியாள்களுக்கு) தெரிவதே இல்லையா?
ReplyDeleteஎஸ். எம். சஹாப்தீன் அவர்களே, "மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை" என்று எழுதியிருக்கின்றீர்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை, "ஆயர் இராயப்பு ஜோசப்"
மட்டுமே. "ஆண்டகை" என்பதனை பாவிக்க முடியாது.
இந்திய இந்துக்கள் சச்சின் தெண்டுல்கரை "கிரிகட் கடவுள்" என அறியாமையால் அழைக்கின்றார்கள் என்பதற்காக நாமும் அப்படி அழைக்க முடியாதே.
(எனது புரிதலில் தவறிருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டவும்)