மீண்டும் இனவாதம் கக்கும் அத்வானி - அசாம் முஸ்லிம்கள் சட்டவிரோத குடியேறிகளாம்..
""அசாமில் தற்போது நடக்கும் கலவரத்துக்கு, வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறிவர்களே காரணம். சட்ட விரோத ஊடுருவலை தடுப்பதற்கு, மத்திய அரசு, எந்த முயற்சியும் செய்யாததால், பூர்விக மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது,'' என, பா.ஜ., தலைவர் அத்வானி கூறினார்.
பா.ஜ., மூத்தத் தலைவர் அத்வானி, அசாமில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். முகாம்களில் வசிக்கும் மக்களை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இதன்பின், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வங்கதேசத்தை சேர்ந்தவர்கள், சட்ட விரோதமாக அசாமுக்குள் ஊடுருவும் செயல், பல ஆண்டுகளாக நீடிக்கிறது. ஏழு ஆண்டுகளுக்கு முன், உச்ச நீதிமன்றம், இதுகுறித்து தெரிவித்தது. அதற்கு பின்னும் கூட, சட்ட விரோத ஊடுருவலை தடுக்க, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்ட விரோதமாக ஊடுருவியவர்களால் தான், தற்போது கலவரம் ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவர்கள், அசாமின் பூர்விக மக்களிடமிருந்து நிலங்களை அபகரித்துக் கொள்கின்றனர். இதனால், பூர்விக மக்கள், நிலம் இல்லாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரச்னையை தடுப்பது எப்படி என்பது குறித்து, மத்திய அரசு, சுய பரிசோதனை செய்ய வேண்டும். பிரச்னை எப்படி ஏற்பட்டது என்பது பற்றி, பிரதமரும், காங்கிரஸ் தலைவரும், தீவிரமாக சிந்தித்து பார்க்க வேண்டும். கோக்ராஜ்கரில் உள்ள முகாமில், நான் சந்தித்த மக்கள் அனைவரும், தாங்கள், வீடிழந்து விட்டதாக கண்ணீர் விட்டனர். தற்போது ஏற்பட்டுள்ள கலவரத்துக்கு, மதம் அல்லது ஜாதிச் சாயம் பூசும், மனப்பான்மை எதுவும் எனக்கு இல்லை. அசாம் கலவரத்தையும், காஷ்மீர் விவகாரத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. காஷ்மீரை பொறுத்தவரை, அங்கு ஏற்பட்ட பயங்கரவாதத்தால், அங்கு வசிக்கும் பண்டிட் மக்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர். இவ்வாறு அத்வானி கூறினார்.
Post a Comment