Header Ads



வடக்கில் 79 பள்ளிவாசல்களை புலிகள் ஆயுதங்கிடங்குகளாக பாவித்தனர் - அமைச்சர் றிசாத்

அமைச்சரின் ஊடகப்பிரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தின் பிழையான முடிவுகளே இன்றைய முஸ்லிம் சமூகத்தின் அவல நிலைக்கு காரணம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை தோப்பூர் பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் அப்துல் ரஸாக் மற்றும் ஹில்மி மஹ்ரூப் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

இன்று முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக அரசாங்கத்தின் பங்காளியாக இருந்துக்கொண்டு பொய்ப்பிரச்சாரங்கள் மூலம் இவ்வரசாங்கத்தினை விமர்சிக்கின்றனர். தற்போது நடைபெறுகின்ற மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களில் கிழக்கில் அரசாங்கத்தினை கடுமையாக விமர்சிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் வடமத்திய மாகாணத்தில் அரசாங்கத்தினை ஆதரித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச்சின்னத்தில் வாக்குக்கேட்டு நிற்கின்றது.
 
இன்று பள்ளிவாயல்கள் உடைக்கப்படுகின்றதென்று பிரச்சாரம் செய்து சகல இனங்களோடும் ஐக்கியமாக வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற முஸ்லிம்களை திசைதிருப்பி  இனவாதம்பேசி பேரினவாத சக்திகளோடு முஸ்லிம்களை மோதவிட்டு அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றார்கள். வடக்கிலே புலிப்பயங்கரவாதிகளால் 79 முஸ்லிம் பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டு  ஆயுதங்கிடங்குகளாக பாவிக்கப்பட்டபோது என்னவென்றும் பார்க்காத முஸ்லிம் காங்கிரஸிற்கு தேர்தல் காலங்களில் மாத்திரம் பள்ளி வாயல்கள் மீது அக்கறை ஏற்படுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு சமூகத்தை விற்று  அரசியல் செய்கின்ற நிலைக்கு இன்று முஸ்லிம் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. இந்த விசமப்பிரச்சாக்கரங்களுக்கு மக்கள் ஒருபோதும் செவிசாய்க்ககூடாது என்றும் தெரிவித்தார்.

30வருடகாலமாக நாங்கள் அனுபவித்து வந்த கஷ்ட,நஷ்ட துன்பங்களிலிருந்து இன்று எங்களுக்கு விடிவு கிடைத்துள்ளது. அபிவிருத்திகாணாதிருந்த எமது பிரதேசங்களில் இன்று அபிவித்தி மழை பொழிந்துக்கொண்டிருக்கிறது. மக்கள் நிம்மதியாக நாடெங்கிலும் அச்சமின்றி பயணம் செய்கின்றனர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் இந்த பொய்ப்பிரச்சாரங்களால். பெரும்பான்மை சமூகங்கள் எமது முஸ்லிம் சமூகத்தினை இனவாதிகளாக பார்க்கின்ற நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது. மூவின மக்களும் சமாதானமாகவும், சுபீட்சமாகவும் வாழ்கின்ற பிரதேசங்களில் இன்று ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்ணோடு பார்க்கின்ற அளவிற்கு முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்துள்ளன.

இவ்வாரான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட்டு இவ்வாரான பொய்ப்பிரச்சாரங்களுக்கு செவிசாய்க்காமல் நாட்டில் மலந்துள்ள சமாதானத்தையும் எமது பிரதேசங்களில் நடைபெறுகின்ற நிலையான அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு எதிர்வருகின்ற கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடும் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை வெற்றிபெறசெய்வதன்மூலம் எமது சமூகத்திற்கும், பிரதேசங்களுக்கும் கிடைக்கப்பெறும் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதோடு எமக்கு எதிராக விடுக்கப்படுகின்ற அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் எம்மை பாதுகாத்து எமக்காக குரல்கொடுக்கின்ற தலைமைத்துவத்தின் கரங்களை இம்மாவட்ட மக்கள் பலப்படுத்தவேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஹூனைஸ் பாறூக் உட்பட பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

1 comment:

Powered by Blogger.