Header Ads



முஸ்லிம் சமூகத்தை கைவிட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு 25 ஆண்டுகள்..!


(இந்தவார நவமணி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம் இது)

இந்திய - இலங்கை உடன்பாட்டு ஒப்பந்தம் ஏற்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

1987 ஆம் ஆண்டு, ஜுலை மாதம் 29 ஆம் திகதி அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதி ஜெயவர்த்தனவும் இணைந்து உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தை அமைதி வழியில் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்திய - இலங்கை உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரளவு களையப்பட்டு, தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை வழங்குவதற்காக இந்திய அமைதி காக்கும் படைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தும் காலப்போக்கில் இந்திய இராணுவத்தினருக்கும், புலிகளுக்கு சண்டை ஏற்பட்டது.

இந்தியா - இலங்கை ஒப்பந்தமானது வடக்குகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டது. இருந்தும் அம்மாகாணங்களில் வாழ்ந்த இரண்டாவது பெரும்பான்மை சமூகமான முஸ்லிம்களின் விருப்புகளை அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட இருநாட்டு தலைவர்களும் கண்டுகொள்ளவில்லை.

இக்காலப்பகுதியில் வடக்குகிழக்கு இணைந்த மாகாண சபைக்காக நடாத்தப்பட்ட தேர்தலில் புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அப்போது போட்டியிட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிடத்தக்களவு ஆசனங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியாக விளங்கியது.

இதையடுத்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் ஜனாதிபதியாக ஆர். பிரேமதாஸா பதவியேற்றார். இவர் இலங்கையில் இந்நதியப்படைகள் நிலை கொண்டிருப்பதை கடுமையாக எதிர்த்தார். இதனால் இந்தியப் படைகள் நாட்டைவிட்டு வெளியேறவேண்டியேற்பட்டது. இந்திய அமைதி காக்கும் படையைச் சேர்ந்த 1200 வீரர்கள் தமது உயிர்களை இழந்து, 2500 பேர் வரை காயமடைந்த நிலையில் இலங்கையிலிருந்து இந்தியப்படைகள் முற்றாக வெளியேறினர்.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு 25 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் தொடர்புட்ட சில தரப்பினர் தமது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் தளபதியாக இருந்த அசோக் மேத்தா இந்தியாவின் 'ரைம்ஸ் ஒப் இந்தியா' வில் எழுதிய கட்டுரையில் 'ஈழம் உருவாவதையும்இஇலங்கை பிளவுபடுவதையும் தடுப்பதில் இந்திய அமைதி காக்கும் படைகள் செயலாற்றியிருந்தன. இதன் மூலம் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை போன்றவற்றை இந்தியாவால் காப்பாற்றிக் கொள்ள முடிகிறது' என குறிப்பிட்டுள்ளார்.

'இந்தியா - இலங்கை ஒப்பந்தத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் அதற்கு பெரும் தடைகளை ஏற்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பி.பி.சி. யிடம் தெரிவித்துள்ளார்.
''இந்தியா - இலங்கை ஒப்பந்தத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் அதற்கு பெரும் தடைகளை ஏற்படுத்தினர் என்பதை மறுக்க முடியாது. எனினும் அந்த ஒப்பந்தம் இறந்து போகவில்லை என்றும், அப்படி அது இறந்து போகவும் முடியாது என்றும், இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவது இந்தியாவின் கடமை என்றும்,அதிலிருந்து இந்தியா தவறக் கூடாது'' என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பி.பி.சி. யிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை ஒப்பந்ம் நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் இந்திய அமைதி காக்கும் படையின் புலனாய்வு பிரிவுக்கு தலைவராக இருந்த கர்ணல் ஹரிஹரன் ''இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் காரணமாக இலங்கையில் மாகாண சபைகளை உருவாக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் 13 ஆவது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதை தவிர பெரும்பாலும் அந்த ஒப்பந்தம் தோல்வியே அடைந்தது'' என சுட்டிக்காட்டுகிறார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்தை கைவிட்டுவிட்டு செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம் தற்போது 25 வருடங்களை எட்டிப்பிடித்துள்ள நிலையில், இதுதொடர்பிலான எத்தகைய பிரதிபலிப்புகளும் முஸ்லிம் சமூக அரசியல் வட்டாரங்களிலிருந்து வெளியாகவில்லை. இருந்தபோதும் கலாநிதி குணதாச அமரசேகர தலைமைதாங்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், ஜாதிக் ஹெல உறுமய கட்சிகள் தற்போது இந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளதுடன், தென்னிலங்கையில் சிங்கள மக்களிடையே இந்தியாவுக்கு எதிரான அலையை உருவாக்குவதிலும் தீவிரம் காட்டிவருகின்றன.

இந்தவாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடக ஆசிரியர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டுள்ள டெய்லிமிரர் பத்திரிகையின் ஆசிரியர்கூட, இந்தியாவின் ஆதிக்கம் குறித்த தகவலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். சிங்கள, ஆங்கில ஊடகங்களும் இந்திய விரோதப் போக்கை கடைப்பிடிப்பதை நம்மால் தற்போது ஓரளவு உணரவும்முடிகிறது.

இந்திய தமிழ்நாட்டு கட்சிகள் இன்னும் தமது ஈழக் கனவிலிருந்து மீளாமை, தமிழ்நாடு செல்லும் இலங்கை அமைச்சர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், இலங்கை படைவீரர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றமை, அதனை மத்திய அரசு கண்டுகொள்ளாமை, ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தமை, தொடரும் இருநாட்டு மீனவர் விவகாரம், உள்நாட்டு யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் சீனா சார்பு நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நோக்குகையில் இருநாட்டு உறவுகளும் ''சொல்லும்படியாக இல்லை'' என்பது மட்டும் தெளிவாகிறது.

இந்தநிலை நீடிப்பது ஆரோக்கியமானதா என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் சிந்திக்கும் நேரம் இது. பாகிஸ்தானிலிருந்து வங்கதேசத்தை பிரித்துக்காட்டிய இந்தியா, ஜே.ஆர் ஜெயவர்த்தனா அமெரிக்க பக்கம் சாயும்போது புலிகள் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளுக்கு பயிற்சியும், ஆயுதமும் கொடுத்து இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்திய இந்தியா, இலங்கை தனக்கெதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளும்போது அல்லது சீனா சார்பாக இலங்கை செயற்படும்போது, இந்தியா பொறுமை காக்குமா என்பதையும் நமது ஆட்சியாளர்கள் சீர்தூக்கிப்பார்க்க வேண்டும்.

இந்தியாவுடன் பகையை ஏற்படுத்துவதும், சீனாவுடன் அதீத உறவை ஏற்படுத்துவதும் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கு சாதகமாக அமையப்போவது இல்லை. நமக்கு முன்உள்ள சிறந்த தெரிவு அணிசேரா கொள்கையை கடைபிடிப்பதுடன் எந்தவொரு நாட்டின் நலனும் எமது தேச இறைமையை பாதிக்கச்செய்யாதிருப்பதுமே என்பதை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகிறோம்.

 

No comments

Powered by Blogger.