சிரியாவில் ஒரே நாளில் 180 பொதுமக்கள் மரணம்
சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ராணுவ விமான தளத்தில் ராணுவத்தினருக்கும், அரசு எதிர்ப்புப் படையினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. நாட்டின் முக்கிய இடங்களிலும் இரு பிரிவினரும் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். பீரங்கி, ராக்கெட் குண்டு வீச்சு, துப்பாக்கிச்சூடு என உள்நாட்டுப் போர் மிகவும் உக்கிரமடைந்துள்ளது. சில இடங்களில் ஹெலிகாப்டரில் இருந்தும் குண்டுகள் வீசப்பட்டன.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்பின் ஏற்பட்ட மோதலில் மட்டும் சுமார் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் அப்பாவி பொதுமக்கள் பலரும் அடங்குவர். மேற்கு ஆசிய நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாத்துக்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக நீடிக்கும் போரில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவற்றின் ஆதரவை பெற்றுள்ள அரசு எதிர்ப்புப் படையினரின் கை ஓங்கியுள்ளது. அவர்கள் இப்போது தலைநகர் டமாஸ்கஸில் புகுந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் போரிட்டு வரும் எதிர்ப்புப் படையினர் விரைவில் ஒன்று திரண்டு, ஒட்டுமொத்தமாக டமாஸ்கûஸ தாக்க இருக்கின்றனர். எனவே இன்னும் சில தினங்களில் சிரியாவில் அஸாத்தின் ஆதிக்கம் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்று கிளர்ச்சியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவுடன் அமெரிக்கா தீவிர ஆலோசனை: இதனிடையே சிரியா விவகாரம் குறித்து ரஷியாவுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. சிரியா அதிபர் அஸாத்தை ரஷியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. கடந்த 17 மாதங்களாக நிகழ்ந்து வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அங்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி அமைதியான வழியில் பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் ரஷிய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் அமெரிக்க வெளியுறவுத் துறையினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்து அமெரிக்காதான் அங்கு வன்முறையைத் தூண்டி வருகிறது என்று ரஷியா குற்றம்சாட்டியுள்ளது. சிரியா அமைதி முயற்சி தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஐ.நா. கண்காணிப்புக் குழுவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ரஷியா மறுத்துவிட்டது.
சிரியாவில் விரைவில் ஆட்சி மாற்றம் - பிரான்ஸ்: சிரியாவில் விரைவில் அஸாதின் ஆட்சி அகற்றப்படும் என்று பிரான்ஸ் மறைமுகமாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் லூரெண்ட் ஃபெபியஸ் கூறியது: அஸாத் விரைவில் மேலும் பல அதிர்ச்சிகளையும், வீழ்ச்சிகளையும் சந்திக்க இருக்கிறார். வரும் நாள்களில் சிரியாவில் மேலும் பல முக்கிய இடங்களை விடுதலைப் படை கைப்பற்றும் என்று தகவல்கள் வந்துள்ளன என்றார் அவர்.
Post a Comment