Header Ads



அப்பிளுக்கு 1 பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க சம்சுங்குக்கு உத்தரவு

 
ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர்களை இழப்பீடாக வழங்கவேண்டுமென்று சாம்சுங் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது. சம்சுங் நிறுவனத்தின் பல தொடர்பாடல் சாதனங்கள் ஐஃபோனை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மென்பொருட்கள் மற்றும் வடிவமைப்பு பதிப்புரிமைகளை மீறியுள்ளதாக நீதிமன்றத்தின் ஜூரிமார் தீர்மானித்துள்ளனர்.
 
ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுக்களை சாம்சுங் நிறுவனம் மறுத்துவருகிறது.
 
இந்தத் தீர்ப்பையடுத்து ஆப்பிள் நிறுவனம் அதன்போட்டி நிறுவனமான சாம்சுங்கின் இறக்குமதிகளை தடைசெய்ய வேண்டுமென்று கோரமுடியும். புலமைச்சொத்துரிமை மற்றும் சாதனங்களின் வடிவமைப்புக்கான பதிப்புரிமைகள் மீறப்படுவதற்கு எதிரான சர்வதேச மட்டத்திலான போராட்டத்தில் அமெரிக்க நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு முக்கிய மைல்கல் என்று நிருபர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
 
ஆனால் கடந்த சில வாரங்களில் சாம்சுங்கின் தலைமையகம் அமைந்துள்ள தென்கொரியாவில் நடந்த வழக்கில் இரண்டு நிறுவனங்களுமே ஒன்றையொன்று மாறிமாறி 'காப்பி' அடித்துள்ளன என்று தீர்ப்பளித்துள்ளது. அதேபோல இங்கு பிரிட்டன் நீதிமன்றம் ஒன்றிலும் தனது பதிப்புரிமையை சாம்சுங் மீறியுள்ளதாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் கோரியது எடுபடவில்லை.
 
ஆனால் அமெரிக்காவில் கடந்த ஓராண்டாக இழுபறியாக இருந்துவந்த இந்த வழக்கில் ஒரு பெரிய தொகை இழப்பீடாக உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சாதனங்களின் வடிவமைப்பு சம்பந்தப்பட்ட பதிப்புரிமை விவகாரங்களில் இந்த இந்த தீர்ப்பு முக்கிய வழிகாட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது.
 
சாம்சுங் மேன்முறையீடு
 
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யவுள்ள சாம்சுங் அமெரிக்க பாவனையாளர்களுக்குத் தான் தனது தோல்வி பாரிய இழப்பு என்று குறிப்பிட்டுள்ளது. 'குறைந்தளவான தெரிவுகளுக்கும் புதிய கண்டுபிடிப்புகள் குறையவும் விலைகள் கூடவும் இது வழிவகுக்கும்' என்று தென்கொரியாவின் சாம்சுங் நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
 
'நீள்சதுர வடிவ தொலைபேசியின் நான்கு மூலைப் பகுதிகளும் வளைவாக இருப்பதற்காக ஒரு கம்பனிக்கு மட்டும் அதன் வடிவமைப்புக்கான ஏகபோக பதிப்புரிமையை கொடுப்பதற்காக சட்டம் இங்கு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது' என்று சாம்சுங் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆனால் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றுள்ள ஆப்பிள் நிறுவனம் 'திருடுவதை ஒருபோதும் ஒரு உரிமையாக கருதக்கூடாது என்று தெளிவான, சத்தமான செய்தியொன்று இங்கு விடுக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியுள்ளது. ஸ்மார்ட்ஃபோன் என்கின்ற கணினி வசதிகளைக் கொண்ட நவீன கைத்தொலைபேசிகளையும் கணினிகளின் நவீன ரகமான டேப்ளட் சாதனங்களையும் தயாரிக்கின்ற இந்த இரண்டு நிறுவனங்கள்தான் இந்தத்துறையில் உலகில் அரைவாசிக்கும் மேலான பாவனையாளர்களை வைத்திருக்கின்றன.
 
கலிபோர்னியாவில் உள்ள பெடரல் நீதிமன்றத்திலிருந்த 9 பேரடங்கிய ஜூரிகள் குழு. 700 கேள்விகளை இந்த வழக்கு விசாரணையின்போது கவனத்தில் எடுத்திருந்தது. இந்த வழக்குத் தீர்ப்பு ஆப்பிள் நிறுவனத்துக்கு ஏகபோக அந்தஸ்தை வழங்குவதாக சிலர் வாதிட்டாலும், அதன் போட்டி நிறுவனங்கள் இன்னும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புத்தான் அதிகம் இருக்கிறது என்று இன்னும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். எது எப்படியிருந்தாலும் தொழிநுட்ப ஜாம்பவான்களின் இந்தப் போட்டி பாவனையாளர்களுக்கு பலனாக அமைந்தால் நல்லது தான். bbc

No comments

Powered by Blogger.