Header Ads



சட்டத்துறைக்கு கல்லெறிந்த யுகத்தை சிலர் மறந்து விட்டனர் - மஹிந்த ராஜபக்ஸ

தினகரன்

நீதிமன்ற இறைமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கம் நீதிச் சுதந்திரத்தை உச்ச அளவில் மதிப்பதோடு மாத்திரமல்லாமல், நீதிச் சுதந்திரம் குறித்து கடும் எதிர்பார்ப்புகளுடன் செயற்படுவதாகவும் ஞாயிற்றுக்கிழமை கண்டியில் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு சீரழிய இடமளிக்க முடியாது. சட்டம் ஒழுங்கு இல்லாமல் நாடொன்றை ஆட்சி செய்ய முடியாது. நாட்டின் சட்டத்தை உச்ச அளவில் பாதுகாப்பதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். அன்று விவியன் குணவர்த்தன மனித உரிமைகள் வழக்கில் வெற்றிபெற்ற சந்தர்ப்பத்தில், தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் வீட்டுக்கு கல்லெறியப்பட்டதையும் ஜனாதிபதி இங்கு நினைவுபடுத்தியதோடு, அன்று நாட்டின் ஜனநாயகம் இவ்வாறுதான் பாதுகாக்கப்பட்டது என்றும் கூறினார்.

1978ஆம் ஆண்டில் அரசியல் யாப்புத் திருத்தம் செய்த சந்தர்ப்பத்தில் நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதியரசர் முன்பாக சத்தியப்பிரமாணம் செய்தனர். ஆனால் அது ஜனாதிபதிக்கு முன்பாக இடம்பெற வேண்டுமென்றும், சத்தியப்பிரமாணம் சரியான முறையில் இடம்பெறவில்லையென்றும் கூறி நீதிபதிகள் நீதிமன்றம் சென்றபோது, நீதிமன்றக் கதவுகள் இழுத்து மூடப்பட்டிருந்த யுகமும் இந்த நாட்டில் இருந்ததாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நான் தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணி. எமது சட்டத் தொழில் துறையும்,

நீதித் துறையும் மிகவும் சிநேகபூர்வமாக செயல்படுகின்றன. நீதிச் சுதந்திரத்தை இல்லாமல் ஆக்குவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது அரசாங்கம் துணைபோகாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எமது அமைச்சரவை உறுப்பினர் ஒருவர் தொடர்பாக நீதித்துறைக்குள் இப்படியான சந்தேகம் ஏற்பட்டிருப்பது குறித்து அரசாங்கம் என்ற வகையில் மிகவும் கவலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். கண்டி கண்ணொருவ விவசாய கட்டட வளாகத்தில் இடம்பெற்ற தேசிய விவசாய வாரக் கண்காட்சியில் பங்குபற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

1 comment:

  1. நீதித் துறையில் ஊடுருவியுள்ள புலிகளும், இனவாதிகளும் களை எடுக்கப் பட வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.