''தலைக்குள் ஒரு டைம் பொம்'' - டாக்டர் ரயீஸின் டயறியிலிருந்து..!
நாலக 11 வயது பள்ளி மாணவன். 6 ஆம் தரத்தில் படிக்கும் அவன் மிகுந்த திறமைசாலி. 5 ஆம் தர பொது உளச்சார்பு பரீட்சையில் சித்தியடைந்து 6 ஆம் தரத்தில் படிப்பதற்காக கொழும்பு டீ. எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு அனுமதி பெற்றிருந்தான். மஹரகமயிலிருக்கும் நாலக தினமும் பாடசாலை வானில் கொழும்பு டீ. எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு வருவது வழக்கம்.
வழமையாக அதிகாலை 6 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் நாலகவை ஏற்றிச் செல்லும் பாடசாலை வான் 7.30 மணிக்கு பாடசாலையை வந்தடையும். பாடசாலை சந்தியில் இறங்கி வகுப்பறைக்கு நடந்து செல்வான் நாலக.
ஒரு திங்கட்கிழமை நாலக வானில் இறங்கி நடந்து செல்லும் போது கால் இடறி கீழே விழுந்து விட்டான். எதிர்பாராமல் விழுந்து விட்ட அவனை அவனோடு சென்ற சக மாணவர்கள் கைகொடுத்துத் தூக்கி விட்டனர். எழும்பிய அவன் நடந்து செல்லும் போது மீண்டும் வகுப்பறைக்கு அருகே விழுந்து விட்டான். விழுந்து எழுந்ததும் தனக்குக் கடுமையாக தலை வலிப்பதாகச் சொன்ன நாலகவை வகுப்பாசிரியர் பத்திரமாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
வீட்டுக்குச் சென்றதும் உடனே தூங்கி விட்டான். தூங்கி எழுந்த நாலகவால் கட்டிலிலிருந்து இறங்கி நடந்து வர முடியவில்லை. ஒரு முறை வாந்தியும் எடுத்து விட்டான். உடனே பெற்றோர் பக்கத்தில் இருந்த தனியார் வைத்திய நிலையம் ஒன்றுக்கு பையனைக் கொண்டு சென்றனர். அவனைப் பரிசோதித்த டாக்டர், "உடனடியாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுங்கள்' என்று சொல்லி விட்டார். இந்த நிலையில் தான் அவர்கள் அந்தப் பையனோடு எங்கள் வோர்டுக்கு வந்து சேர்ந்தனர்.
பையனுக்கோ ஏதோ ஒரு நோய் இருக்கிறது என்று அறிந்து கொண்ட தாய் கண்ணீர் மல்க ஆதரவுடன் பையனின் தலையை வருடி முடியை கோதிவிட்டுக் கொண்டிருந்தாள்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுமையான பரிசோதனை செய்து முடித்ததும் பையனுக்கு பல பிரச்சினைகள் இருப்பது தெரிய வந்தது. சாதாரணமாக கண்கள் இரண்டும் சேர்ந்து ஒரு பொருளைப் பார்ப்பதுதான் இயற்கையாக இறைவன் ஏற்படுத்தியிருக்கும் அமைப்பு.
பையனின் கண்களோ இரண்டு ஒரு சேர இயங்க மறுத்து விட்டன. ஒன்று வடக்கையும் மற்றையது கிழக்கையும் பார்க்க ஆரம்பித்துவிட்டன. பையனோ ஒரே நேரத்தில் பல விம்பங்கள் தெரிவதாக சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான். அத்துடன் அருந்தும் பானத்தையும், உண்ணும் உணவையும் வாய்க்குள் இருந்து தொண்டைக் குழியினூடாக விழுங்க முடியாமல் தடுமாறினான். விழுங்க முடியாத நிலையில் வாய்க்குள் இருக்கும் உணவு வெளியில் கொட்ட ஆரம்பித்தது. மிக அழகாக எழுத முடியுமாய் இருந்த அந்தப் பையனுக்கு கையால் ஒரு பேனாவை கூட ஸ்திரமாக பிடித்துக் கொள்ள முடியாதவாறு கைகள் நடுங்க ஆரம்பித்தன. இப்படிப் பல பிரச்சினைகள்.
பரிசோதனை முடிவில் பையனின் நோய் என்ன வென்பது மிகத் தெளிவாக விளங்கியது. இதனை எப்படிப் பெற்றோருக்கு சொல்வது என்பது எங்களுக்குப் பெரும் சுமையாக இருந்தது. விரும்பத்தகாத ஒரு செய்தியை அறிவிப்பதும் அதைத் தொடர்ந்து வரும் சோக உணர்வுகளோடு சேர்ந்து சோகத்தில் பங்கேற்பதும் வைத்தியசாலைகளில் தினமும் நடக்கும் நிகழ்வுகள். அவ்வாறான சூழ்நிலையில் எங்களது கண்களும் கூட கலங்கி இருக்கின்றன. அப்படி ஒரு நிலைதான் இந்தப் பையன் விடயத்திலும்.
நடுத்தர வயதான அந்தப் பெற்றோருக்கு நாலகவுடன் மூன்று வயதுப் பெண் குழந்தை ஒன்றும் உண்டு.மிகத் திறமைசாலியான அந்தப் பையன் டீ.எஸ். சேனநாயக்க கல்லூரியில் வகுப்பில் முதல் மாணவனாக வருவான். 5 ஆம் தர பொது உளச்சார்புப் பரீட்சையிலும் மிகச் சிறந்த சித்தி பெற்ற அவனுக்கு கல்லூரியில் நல்ல இடம் கொடுக்கப்பட்டிருந்தது. படிப்பில் மட்டுமல்லாது விளையாட்டு மற்றும் கம்பியூட்டர், நீச்சல் துறைகளிலும் மிகச் சிறந்து விளங்கிய நாலக பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் பாடசாலைக்கும் கூட ஒரு பெரும் சொத்தாக விளங்கினான். பாடசாலையில் இருந்து நாலகவின் சுகம் விசாரிப்பதற்காக வந்த தொலைபேசி அழைப்புகளின் எண்ணிக்கை இதனைச் சொல்லிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் பையனின் மூளைக்குள் "டைம்பொம்' போன்று ஒரு கட்டி இருக்கிறது என்பதை எப்படிச் சொல்ல முடியும்? இந்தப் பையன் பெரியவனாக வேண்டும். பல சாதனைகளைச் செய்ய வேண்டும். பெற்றோருக்கும் குடும்பத்துக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தனர் அந்த அப்பாவிப் பெற்றோர். குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோரின் எதிர்பார்ப்பும் இதுவே. விஷேடமாக இந்தப் பையனைப் பெற்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு இன்னும் ஒரு படி மேல். இந்த எதிர்பார்ப்புகளும் கட்டியிருந்த மனக் கோட்டைகளும் ஒரு கணத்தில் தகர்த்தெறியப்படப் போகின்றன.
அந்தப் பையனை CT Scan பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அந்தப் பரிசோதனை மூலம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூளையை துண்டு துண்டாக வெட்டிப் பார்த்தது போன்று படம் எடுக்க முடியும். இதன் மூலம் மூளைக்கு உள்ளே இருக்கும் நோய்களைக் கண்டு பிடிக்க முடியும். இந்தப் பரிசோதனைகளை நாலகவுக்கு செய்த போது மூளையின் மிக முக்கியமான பகுதியான அடி மூளையில் (Brain Stem) புற்றுநோய் வகையைச் சேர்ந்த ஒரு கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்தது. Brain Stemglioma அந்தக் கட்டியை ஒபரேஷன் செய்து குணப்படுத்த முடியாது. நான் இதனை எழுதும்போது கூட அந்தப் பையன் எங்கள் வாட்டில் இருந்து கொண்டிருக்கிறான். கட்டியைக் கண்டு பிடித்து 25 நாட்கள் ஆகிவிட்டன.
மிகப் பெரிய மனிதனாக வருவான் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அந்தப் பையன் பாவம். எல்லாத் துவாரங்களிலும் "டியூப்' வருவதும் போவதுமாய் கட்டிலிலே நினைவிழந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
எஞ்சியிருக்கும் அவனது ஒருசில நாட்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பையனுக்கு இதற்கு மேல் இறைவன் இந்த உலகத்தில் "ரிஸ்க்' வைக்கவில்லை என்பது மிகத் தெளிவாகி வருகிறது.
மரணத்தை மறந்திருக்கும் எமக்கு இதுவொரு சிறந்த பாடம். உலக வாழ்க்கையில் எமது குழந்தைகள் முன்னேற வேண்டும். பெரியவனாக வேண்டும், புகழ் பெறவேண்டும் என்பதற்காக எவ்வளவு முயற்சிக்கிறோம்.
அவ்வளவு முயற்சியும் நிச்சயமாகத் தேவைதான். அதேநேரம் இவ்விடயம் எம்மையும் எமது குழந்தைகளையும் இந்த உலகில் மூழ்கடித்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்மில் எத்தனைபேர் இப்படியான டைம்பொம் நோய்களை வைத்திருக்கிறோம் என்பதை அறியோம்.
அதேபோல் எத்தனை பேர் இத்தகைய நோய்க்கிரையானார்கள் என்பதையும் நாம் அறிவோம். இந்த நிலையில் நாமும் நமது குடும்பமும் மரணத்துக்குத் தயாரானவர்களாக வளர்வதை, வாழ்வதைத் தவிர நமக்கு வேறு வழியே இல்லை.
Post a Comment