முஸ்லிம் மாணவியின் விநோதமான சாதனை
உங்கள் வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் மூலம் அதிகபட்சம் இரண்டு ரப்பர்கள் தேடி எடுக்கலாம். பழசை தூக்கி எறியாதவர்களாக இருந்தால் கூடுதலாக நான்கு ரப்பர்கள் கிடைக்கலாம்.
ஆனால்... சென்னையைச் சேர்ந்த ஆசியமரிலியா சுமார் மூவாயிரத்து ஐநூறு ரப்பர்களை சேகரித்துவைத்துள்ளார். இதில் ஒரு ரப்பர் போல இன்னோரு ரப்பர் இல்லை என்பதுதான் விசேஷம். இப்போது பல் டாக்டராக இருக்கும் மரிலியாவிற்கு எட்டு வயதில் இருந்தே ரப்பர் மீது ஆர்வம் வந்துவிட்டது. அதுவும் "சென்ட்டடு எரேசர்' எனப்படும் வாசனை ரப்பர் வந்தபிறகு அதில் விதவிதமாய் வாங்கி குவிக்க ஆரம்பித்தார். இவரது ஆர்வத்தை பார்த்த பெற்றோர்களும், உறவினர்களும் இதனை ஊக்கப்படுத்தவே விதம் விதமாய் ரப்பர் சேகரிப்பதில் முன்னிலும் ஆர்வமாய் ஈடுபட்டார்.
குடும்பத்தோடு சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு போயிருந்தபோது அனைவரும் விதம், விதமான பொருட்களை தேடிவாங்கியபோது இவர் மட்டும் எழுதுபொருள் கடை எங்கே இருக்கிறது என்று கேட்டு அங்கு போய் தன்னிடம் இல்லாத ரப்பர் இருக்கிறதா என தேடிபிடித்து வாங்கியுள்ளார்.
அந்த வகையில் இவரே சேகரித்து 90 சதவீதம் என்றால் இவரது ஆர்வத்தை பார்தது வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் அனுப்பிவைத்த வித்தியாசமான ரப்பர்கள் 10 சதவீதமாகும்.
இவரிடம் உள்ள ரப்பர்களில் ஒரு ரூபாய் ரப்பரும் உண்டு; இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் விலையுள்ள ரப்பரும் உண்டு. ரப்பர்களிலேயே ஹாங்காங் ரப்பர்கள்தான் "தி பெஸ்ட் 'என்கிறார். காரணம் சொல்லும்போது பத்து வருடத்திற்கு முன் வாங்கும்போது ரப்பரில் இருந்த வாசனை இன்னும்கூட குறையாமல் இருக்கிறது என்கிறார். மேலும் ரப்பர் தயாரிப்பில் காட்டும் கலையம்சமே தனி. ஒரு சிற்பம் போல வடிவமைப்பார்கள் என்றார்.
அவர் சொல்வது அனைத்தும் உண்மைதான் என்பது போல ஒவ்வொரு ரப்பரும் ஒரு கலையம்சத்துடன் விளங்குகிறது; பாலருந்தும் குழந்தை, கேக், உரித்த வாழைப்பழம், மண்டையோடு, எலும்புத்துண்டு, க்யூப் விளையாட்டு சாதனம், பர்கர் பிட்சா, சுவிட்ச்போர்டு என்று பல்வேறு வடிவங்களில் ரப்பர்கள் நிறைந்து கிடக்கின்றன.
ரப்பரை சேகரிப்பதைவிட அதை பாதுகாப்பதும் பராமரிப்பதும்தான் கடினம் என்கிறார் கொஞ்சநாள் விட்டால், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு, ஒன்றுக்கும் ஆகாமல் போய்விடும்; ஆகவே பத்திரமாக பார்த்துக்கொள்கிறேன் என்றவர், இது எனது தனிப்பட்ட சந்தோஷத்திற்காகவும், விருப்பத்திற்காகவும் செய்த சேசகரிப்பு, ஆனால் இதனை சமீபகாலமாக பார்க்கும் எனது நண்பர்கள் லிம்கா, கின்னஸ் போன்றவற்றிக்கு முயற்சி செய்யலமோ? என்கிறார்கள். தற்போது அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளேன், அந்த முயற்சி வெற்றி பெறும்போது பொது மக்கள் பார்வைக்கு ஒரு இடத்தில் காட்சிக்கு வைப்பேன் என்றார்.
கூடவே அடுத்தவாரம் இன்னும் இருநூறு ரப்பர்கள் வர இருக்கின்றன என்று சொன்னவர், கொசுறாக சொன்ன தகவல் இவ்வளவு ரப்பர் இருந்தபோதும் ஒரு ரப்பரைக்கூட நான் அழிப்பதற்கு உபயோகித்தது இல்லை என்றார். " அப்படியானால் தப்பாகவே எழுதியது இல்லையா'' என்று கேட்டபோது, "அப்படியில்லை, தப்பாக எழுதியபோது அழிப்பதற்கு அப்போது என் தோழிகளிடம் இருந்து ரப்பரை கடனாக வாங்கியிருக்கிறேன்'' என்றார் சிரிப்போடு.
Post a Comment