Header Ads



முஸ்லிம்கள் மீதான ஆளில்லா விமான தாக்குதலை நிறுத்தமுடியாது - அமெரிக்கா பிடிவாதம்


பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்தும் ஆளில்லாத விமானத் தாக்குதலை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. முஸ்லிம் போராளிகளை ஒடுக்க மாற்று வழிகளைப் பின்பற்றும்படி பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்ததாகத் தெரிகிறது. ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதிகளில் முஸ்லிம் போராளி மீது அமெரிக்கா ஆளில்லாத விமானங்கள் மூலம் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஆளில்லாத விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பேச்சு நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும், அமெரிக்கத் தரப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்தித் தீர்வு காணத் திட்டமிட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக "டான்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின்போது பல்வேறு மாற்று யோசனைகளை பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை அமெரிக்கா ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. முஸ்லிம் போராளிக மீது தாக்குதல் நடத்த எஃப்-16 ரக போர் விமானங்களைப் பயன்படுத்துவது, உளவுத்துறை மூலம் தகவல் திரட்டி பயங்கரவாதிகளின் மறைவிடங்களை அறிந்த பின் தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட யோசனைகளை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளும், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகளும் முன்வைத்தனர். ஆனால், அதை அமெரிக்கா ஏற்கவில்லை.

முன்னதாக, எல்லைப் பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் சிக்கி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்ததையடுத்து, ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு உணவு, ஆயுதம் உள்ளிட்ட பொருள்களை தனது நிலப்பகுதி வழியாக எடுத்துச் செல்ல பாகிஸ்தான் அனுமதி மறுத்தது.

பின்னர் அமெரிக்கா தொடர்ந்து பேச்சு நடத்தியதையடுத்து கடந்த ஜூலை 3-ம் தேதி முதல் பொருள்களை எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. அப்போது, முஸ்லிம் போராளிகளுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்புத் தருவோம் என பாகிஸ்தான் உறுதியளித்திருந்தது. எனினும், ஆளில்லாத விமானங்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் எடுத்து வரும் முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறியது: ""அல் காய்தாகளை முற்றிலும் அழிப்பதுவரை ஆளில்லாத விமானங்களின் மூலம் நடத்தப்படும் தாக்குதல் தொடரும் என்று அமெரிக்கா தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர். அவர்களது நோக்கம் தலைமறைவாக உள்ள அல் காய்தாவின் தலைவர் அய்மான் அல் ஜவஹிரியை பிடிப்பதுதான்'' என்றார்.

""இரு நாடுகளும் ஒப்புக் கொள்ளும் வகையில், ஒரு தீர்வை எட்ட விரும்புகிறோம்'' என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் மோஸம் கான் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.