சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார்களா..?
(இந்தவாரம் விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம் இது)
எதிர்பார்க்கப்பட்டது போலவே கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கலுக்கான திகதிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. விரைவில் தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்படும். பெரும்பாலும் செப்டெம்பர் மாத முதல் பகுதியிலேயே தேர்தல் நடைபெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் கிழக்கில் நடைபெறும் முதலாவது மாகாண சபை தேர்தல் என்ற வகையில் இத் தேர்தலானது மிகுந்த முக்கியத்துவத்தையும் போட்டித் தன்மையையும் கொண்டிருக்கும் என்பதை இப்போதே ஊகிக்க முடிகிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட எத்தனிக்கும் அரசியல் தரப்புகள் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம், கூட்டணி அமைத்தல், தனித்துப் போட்டியிடுதல் என பல்வேறு முனைகளில் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கட்சி தாவல்களும் இப்போதே ஆரம்பித்துவிட்டன. கடந்த முறை போன்றே இம் முறையும் ‘பெரும் தலைகளும்’ சிலவேளை கட்சி மாறலாம்.
எது எப்படிப் போனாலும் இந்தத் தேர்தலில் போட்டியிட முனையும் முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் சமூகத்தின் நலன்சார்ந்து சிந்திப்பதை விடுத்து தாம் எப்படி அரசாங்கத்திற்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளலாம் என சிந்திப்பதாகவே தெரிகிறது.
தமது வாக்குப் பலத்தை நிரூபித்து, அதனைக் கொண்டு தேசிய அரசில் அமைச்சுப் பதவிகள் உட்பட மேலும் பல சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை முஸ்லிம் கட்சிகள் பயன்படுத்த முனைவதையே அவதானிக்க முடிகிறது. அதனை நோக்கியதாகவே அவர்களது கூட்டிணைவுகளும் கா நகர்த்தல்களும் அமைந்துள்ளன.
நலிவடைந்து போயுள்ள சிறுபான்மை சமூகத்தின் அரசியல் பலத்தை தூக்கி நிறுத்துவதற்குக் கிடைத்துள்ள மிகச் சிறந்த சந்தர்ப்பமே இந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலாகும். உண்மையில் முஸ்லிம் கட்சிகளும் தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து இத் தேர்தலில் போட்டியிட முடியுமாயின் கிழக்கு மாகாண சபையை இலகுவில் கைப்பற்ற முடியும். தமிழரோ முஸ்லிமோ அவர் அரசாங்கத்தின் ‘பொம்மை முதலமைச்சராக’ இருப்பதை தவிர்த்து சுயாதீனமாகச் செயற்படக் கூடிய ஒரு முதலமைச்சரை சிறுபான்மை சமூகம் வெற்றி கொள்ள முடியும்.
அதற்கான வாயில் இந்த தேர்தல் அறிவிப்பு மூலம் திறக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதனை பயன்படுத்துவதற்கு முஸ்லிம் கட்சிகள் தயாரில்லை. அவ்வாறானதொரு அதிரடியான தீர்மானத்தை எடுக்குமளவு பலம் கொண்டதாகவும் நமது முஸ்லிம் கட்சிகள் இல்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து இத் தேர்தலில் போட்டியிட முடியுமாயின் அது இந்த நாட்டின் தேசிய அரசியலில் மிகப் பெரும் தாக்கத்தைச் செலுத்தக் கூடும். மர்ஹூம் அஷ்ரபின் காலத்தில் முஸ்லிம் சமூகம் இந்த நாட்டின் தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் வாக்கு வங்கியைக் கொண்டிருந்ததைப் போல மீண்டும் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை தோற்றுவிக்க முடியும்.
அது தமிழ் முஸ்லிம் நல்லுறவுக்கு பெரும் பாலமாக அமைவதோடு போருக்குப் பின்னரான இலங்கையில் சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான அத்திவாரமாகவும் அமையும்.
ஆனால் துரதிஷ்டவசமாக இம் முறையும் மக்களது பிரச்சினைகள் தேர்தல் மேடைகளில் மாத்திரமே ஒலிக்கப் போகின்றன. மக்களின் பிரச்சினைகளை மாகாண சபையில் பேச வேண்டும் என்பதற்காகவே நாம் அவர்களை தெரிவு செது அங்கு அனுப்புகிறோம். ஆனால் அவர்களோ அவற்றை தேர்தல் மேடைகளில் மாத்திரம் பேசி விட்டு மாகாண சபைகளில் மௌனம் சாதித்து விடுகிறார்கள். அதற்காக பஜ்ரோ வண்டிகளும் வாகன பேர்மிட் பத்திரங்களும் அவர்களுக்குப் பரிசாகக் கிடைக்கின்றன.
கலைக்கப்பட்ட மாகாண சபை மூலமாக ஆங்காங்கே அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றிருந்தாலும் கூட உரிமை சார்ந்து சமூகம் பெற்றுக் கொண்டவைகள் என சோல்லிக் கொள்ள எதுவும் இல்லை. சிறுபான்மையினரைப் பாதிக்கும் சில சட்ட மூலங்கள் கொண்டு வரப்பட்ட போது ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்துவிட்டு பின்னர் அடங்கிப் போன சந்தர்ப்பங்களே அதிகம்.
எதிர்வரும் புதிய மாகாண சபையிலும் இதுவே நடக்கும் என்றால் அவ்வாறானதொரு சபையில் உறுப்பினராகவோ அமைச்சராகவோ முதலமைச்சராகவோ இருப்பதைவிடவும் சாதாரண மனிதனாக இருந்து சமூகத்திற்குக் கடமை செதுவிட்டுப் போவதே மேல்.
Post a Comment